Monday, September 21, 2015

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

2:26 PM | செப்டம்பர் 20, 2015

சென்னை, செப். 20–பாஸ்போர்ட் எடுப்பதற்கு எளிமையான விதிமுறைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகத்தில் சென்னையில் 3 பாஸ்போர்ட் சேவை மையங்களும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை நகரங்களில் தலா ஒரு சேவை மையம் வீதம் மொத்தம் 8 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 நகர்புறங்களை சேர்த்து மக்கள் படித்தவர்களாக இருப்பதால் ஆன்–லைன் மூலம் வீட்டில் இருந்த படியோ, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றோ பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கிறார்கள்.ஆனால் கிராமப்புறங்களில் படிப்பு அறிவு இல்லாதவர்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க பெரும் சிரமமும், கஷ்டமும் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி தரகர்கள் பாஸ்போர்ட் எடுக்க ரூ.5000 முதல் ரூ.8000 வரை வசூலிக்கிறார்கள். கிராம மக்கள் எளிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வழிவகை காண வேண்டும் என மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.இதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரனுடன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பாஸ்போர்ட் சேவையை கிராமப்புற மக்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படுகிறது.தமிழகம் முழுவதும் உள்ள 264 தாலுகா அலுவலகங்ளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இ–சேவை மையத்தில் ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை (21–ந்தேதி) முதல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட்டிற்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்குகிறது

.இதுதவிர தலைமை செயலகம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை மற்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 285 இடங்களில் ஆன்–லைன் சேவை தொடங்குகிறது.ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு கட்டணமாக மொத்தம் ரூ.1655 ரொக்கமாக வசூலிக்கப்படும். இதில் ரூ.1500 பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் ரூ.100 அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கும் ரூ.55 ஸ்டேட் பாங்கிற்கும் கமிஷனாக பெறப்படுகிறது. இந்த இ–சேவை மையங்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நிறுவகித்து வருகிறது.இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலகுரு கூறியதாவது:–கிராமப்புற மக்களுக்காக பாஸ்போர்ட் இ–சேவை மையங்கள் நாளை முதல் செயல்படுகின்றன. அங்கு சரியான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் சென்றால் அதனை சரி பார்த்து ஆன்–லைன் மூலம் பதிவு செய்வார்.

 பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி (ஆன்– லைன் வழியாக) கொடுப்பார். இதற்கான கட்டணம் ரூ.1655 மட்டுமே. இதுபோக எவ்வித செலவும் இல்லை. புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களும், புதுப்பிக்க தவறியவர்களும், குறிப்பிட்ட காலம் முடிந்து மீண்டும் பாஸ்போர்ட் பெற விரும்புவர்களும் அங்கு விண்ணப்பிக்கலாம்.பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும். கிராமப்புற மக்கள் எவ்வித சிரமமின்றி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க அரசு இ–சேவை மையங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இடைத்தரகர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை. விண்ணப்பதாரர்களே நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சமையலறையில் கருகும் மனிதவளம்

Return to frontpage


என்.கெளரி


பிரபல திருமண இணையதளம் ஒன்று, கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. திருமணத்துக்கு முன்பும் பின்பும் அவர்களுடைய வாழ்க்கை முன்னுரிமைகளை வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. திருமணத்துக்கு முன்பு ‘பணி வாழ்க்கை’யை முதல் முன்னுரிமையாக 53 சதவீதப் பெண்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். கிட்டத்தட்ட 51 சதவீதப் பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் வருங்காலக் கணவருக்கே முதல் முன்னுரிமை என்று சொல்லியிருந்தனர். அவர்கள் ‘பணி வாழ்க்கை’யை நான்காவது இடத்துக்குத் தள்ளியிருந்தனர். ஆனால், பல பெண்கள் திருமணத்துக்குப் பிறகு, பணி வாழ்க்கைக்கு இந்த நான்காவது இடத்தைக்கூட அளிக்க விரும்பவில்லை.

மனிதவள மேம்பாடு குறித்தும் அதைச் சிந்தாமல் சிதறாமல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது பற்றியும் இன்று நிறையவே பேசப்படுகிறது. பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகரான கல்வியும் அறிவும் பெற்றுள்ள நிலையில் அவர்கள் ஒட்டுமொத்த மனித வளத்தின் சரிபாதியாகக் கொள்ளப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், திருமணம் பெண்களின் மனிதவளத்தை அடியோடு முடக்கிப்போட்டுவிடுவதையே மேற்கண்ட ஆய்வு காட்டுகிறது.

கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புறங்களில் பிறந்து வளர்ந்து நன்றாகப் படித்து, நல்ல பணியில் இருக்கும் பெண்களே திருமணத்துக்குப் பிறகு தங்கள் மனித வளத்தைப் பயன்படுத்த முடியாமல் அதிகம் தவிக்கின்றனர்.

திறமையின் தேடல் திருமணம்வரை

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது மாணவர்களைவிட மாணவிகளே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைகின்றனர் என்பது தெரிந்த விஷயம். கல்லூரியில் சராசரி சதவீதத்துடன் தேர்ச்சியடையும் ஆண்களின் மனிதவளம் அவர்களின் பணி வாழ்கையின் மூலம் சமூகத்துக்குப் பயன்படுகிறது. ஆனால், எண்பது சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று வெளிவரும் பெண்களின் மனிதவளம்கூடக் குடும்ப வாழ்க்கையின் கோணல் சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போய்விடுகிறது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கும் பயன்படாமல், சமூகத்துக்கும் பயன்படாமல் வீணாகிறது. தாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துக்குள் முடங்கிப்போகும் அவலம் பற்றிய மனவேதனையும் குற்றவுணர்வும் சில பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பெரும்பாலான பெண்கள் இதைத் திருமண வாழ்க்கையின் இயல்பான மாற்றமாக எடுத்துக்கொண்டாலும் எல்லோராலும் அப்படி விட்டுவிட முடியவில்லை.

மனநிறைவைப் பறித்த மண வாழ்க்கை

சுதாவுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்திற்கு முன் அவர் ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். திருமணத்துக்குப் பிறகு கணவர் குடும்பத்தினர் விரும்பாததால் வேலையை விட்டுவிட்டார். ஆனால் அது அவருக்கு வலி மிகுந்த முடிவு. “ஆசிரியர் பணி என்பது என் கனவு. திருமண வாழ்க்கைக்காக அதை சமரசம் செய்துகொண்டதை என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணத்துக்கு முன்பு ஆசிரியராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் மனநிறைவுடன் கழிந்தது. இப்போது என்னுடைய ஒவ்வொரு நாளும் சமையலறையில் தொடங்கி சமையலறையில்தான் முடிகிறது. தினமும் கணவருக்கு ‘லஞ்ச்’ பேக் செய்வதிலும், மாமியார், மாமனாரை கவனித்துக்கொள்வதிலும், பூஜை செய்வதிலும்தான் நகர்கின்றன என் நாட்கள். ஒரு கட்டத்தில், என்னையே என்னால் எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டது. ஒரேயடியாக என் சுயத்தை இழந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். என் கணவர் குடும்பத்தினரிடம் எப்படியோ சம்மதம் வாங்கி இப்போது என் மேல்படிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால், மேல்படிப்பை முடித்தவுடன் என்னால் வேலைக்குச் செல்ல முடியாது. ஏனென்றால், திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் என் மாமனார், மாமியார் பேரக் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். இன்னும் எப்படியும் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் என்னால் வேலைக்குச் செல்ல முடியும். எப்படியாவது என் ஆசிரியர் பணிக்கு மீண்டும் சென்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்” என்று சொல்கிறார் சுதா.

பலியாகும் பணி வாழ்க்கை

திருமணத்துக்குப் பிறகு, பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொள்ளும் நிலைமை எந்த ஆணுக்கும் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்களால் பணி வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்துத் தொடர முடிவதில்லை. அப்படியே முயற்சிசெய்து தொடர்ந்தாலும் குடும்ப வாழ்க்கையில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதே பல பெண்களின் அனுபவம்.

ஸ்வேதாவின் அனுபவமும் அப்படிப்பட்டதுதான். “பொறியியல் படித்து முடித்தவுடன் எனக்குப் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், என் பணி வாழ்க்கை ஆரம்பிப்பதற்குள் என் அப்பா யாருமே எதிர்பாராத விதமாக எனக்குத் திருமண ஏற்பாடு செய்துவிட்டார். அதனால், நான் முயற்சி செய்தும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. திருமணமான அடுத்த ஆண்டே எனக்குக் குழந்தை பிறந்தது. திடீரென்று என் கணவர் பொறுப்பில்லாமல் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டார். இந்தச் சமயத்தில், அதே நிறுவனத்தில் எனக்கு மறுபடியும் வேலைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. என் மாமனார், மாமியாருக்கு நான் வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லையென்றாலும் என்னைத் தடுக்க முடியவில்லை. குழந்தையை என் அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மூன்று ஆண்டுகள் வேலைக்குச் சென்றேன். அந்த மூன்று ஆண்டுகளில் என் கணவர் வீட்டார் என்னை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்தினார்கள். நான் என்ன கருத்து சொன்னாலும் ‘எல்லாம் சம்பாதிக்கிற திமிர்’ என்று சொன்னார்கள். என் கணவரோ, அலுவலகத்தில் இருக்கும்போது அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லையென்றால்கூட என் நடத்தையை சந்தேகப்பட்டுப் பேசுவார். ஒரு கட்டத்தில், இவர்களுடைய பேச்சு தாங்க முடியாமல் வேலையை விட்டுவிட்டேன். அதற்குப் பிறகுதான் என் கணவரும், அவர் அம்மா, அப்பாவும் அமைதியானார்கள். இப்போது அவர் ஒரு சுமாரான வேலைக்குச் செல்கிறார். நான் என் எல்லாத் தேவைகளுக்கும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் சுயமரியாதை, என் அடையாளம் என எல்லாவற்றையும் இழந்துவிட்டுத்தான் என் திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஸ்வேதா.

பணி வாழ்க்கையா, குடும்ப வாழ்க்கையா?

சுதா, ஸ்வேதா இருவரும் திருமணத்துக்குப் பிறகு பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டார்கள். ஆனால், வினோதாவின் திருமணமே ‘திருமணமான பிறகு வேலைக்குப்போக மாட்டேன்’ என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு உறுதிமொழி அளித்து அதன்பேரில்தான் நடக்கவிருக்கிறது. “கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்பதற்காகப் பல சவால்களைக் கடந்து ‘எம். ஃபில்’ வரை படித்தேன். ஆனால், என் அம்மாவும், அப்பாவும், ‘நீ படிக்கிறேன், படிக்கிறேன் என்று சொல்லி இருபத்தியாறு வயதாகிவிட்டது. உனக்குப் பிறகு உன் தங்கைக்கும் திருமணம் செய்துகொடுக்க வேண்டும். அதனால், சீக்கிரமாகத் திருமணம் செய்துகொள்’ என்று என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். அதனால், வேறு வழியில்லாமல் நானும் திருமணத்துக்கு சம்மதித்தேன். ஆனால், நான் வாழ்க்கையில் மிக மோசமான சமரசத்தைச் செய்கிறேன் என்பது எனக்குப் புரிகிறது. குடும்பமா, பணி வாழ்க்கையா என்று வரும்போது, குடும்பத்தைத்தான் என்னால் தேர்வுசெய்ய முடிந்தது” என்று சொல்கிறார் வினோதா.

சிந்தனை மாற்றம் தேவை

சுதா, ஸ்வேதா, வினோதா...இவர்களைப் போல்தான் இந்தியாவில் பல பெண்கள் திருமண வாழ்க்கைக்காகப் பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டு தங்கள் தனிப்பட்ட அடையாளங்களைத் தொலைத்து நிற்கிறார்கள். நம் சமூகம், இன்னும் பெண்களை மனிதவளமாகக்கூட கருதவில்லை. ஒரு பெண்ணுக்கு அவளது ஆற்றலைப் பறைசாற்றும் அடையாளங்கள் பல இருக்க இல்லத்தரசியாக இருப்பதை மட்டுமே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வரை பெண்களின் மனிதவளம் சமையலறையில் வீணாகிக்கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியாது.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

Sunday, September 20, 2015

Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers

Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers

City-based Atal Bihari Vajpayee Hindi Vishwavidyalaya has demanded from the Medical Council of India (MCI) to avail students an option to write MBBS course papers in Hindi.

"We have asked the MCI to give an option to student pursuing MBBS degree course to write their exams in Hindi as long as it is not possible for it to have Hindi as another medium of instruction."
When candidates have an option to take Pre-Medical Test (PMT) in Hindi, they should also be given a similar facility in MBBS exams," university Vice-Chancellor Mohanlal Cheepa told PTI on Saturday.
Set up in 2011, the university has been batting for the issue of inclusion of Hindi as a medium of language in MBBS course at medical institutes and has discussed the matter with MCI in the recent past.
When asked why MCI was not permitting to conduct MBBS course in Hindi despite the Rajbhasha Samiti giving its nod on the issue way back in 1991, Cheepa said, MCI cites reason as paucity of medical books in Hindi.
"MCI states that they don't have relevant books in Hindi. Therefore, on the occasion of 10th World Hindi Sammelan (held here last week), we along with Hindi Granth Academy collected and displayed 250-300 books (in medical science) to prove that MBBS course can also be taught in Hindi," he said.
The VC said he had suggested to the MCI that it can teach MBBS in English as long as it is not possible in Hindi, but an option should be provided to candidates to write papers in Hindi.
Citing figures from a World Health Organisation (WHO) report, he said among students who passed out from prestigious All India Institute of Medical Sciences (AIIMS), 54 per cent go abroad for better future prospects and never return.
The report also stated that bright students from Hindi medium, who are selected for institutes like AIIMS, majority of them lag due to the language constraint while some even take extreme step of committing suicide for failing to cope with pressure due to the change in medium of instruction, he said.
To a query, he said that out of nearly 400 medical colleges in the country, 115 are located in the Hindi belt, and added that he is planning to hold a dialogue with vice chancellors on the issue.
He also said that beside MCI, the country has to also change its mindset on the issue that MBBS syllabus can only be taught in Hindi.

விஷ்ணு பிரியா விவகாரம்: கதை கட்டுகிறதா காவல்துறை?

vikatan.com

சென்னை: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணு பிரியா, போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதால் போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறது காவல்துறை வட்டாரம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா. திருமணமாகதவர். இவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் பல சந்தேக ரேகைகள் படிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக இவர் எழுதியதாக சொல்லப்படும்  கடிதத்தில்,  "போலீஸ் பணி எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதற்கு நான் தகுதியற்றவர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் விஷ்ணுபிரியாவின் குடும்பமே போலீஸ் துறையுடன் நெருக்கமானதுதான் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 

இவரது தந்தை ரவி, ஏ.டி.எஸ்.பியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது தாய் கலைச்செல்வி வங்கி அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயதில் இருந்தே விஷ்ணு பிரியாவுக்கு போலீஸ் பணி என்பது லட்சியமாகவே இருந்துள்ளது. இதற்காக அவர் ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்தே தன்னை தயார் செய்து வந்துள்ளார். இதற்கு உறுதுணையாக அவரது தந்தையும் இருந்துள்ளார். பி.எஸ்சி கணிதம் முடித்து விட்டு அரசு தேர்வுகளை எழுதினார். தலைமை செயலகத்தில் வருவாய்துறையில் பணி கிடைத்தது. தொடர்ந்து அவர் தேர்வு எழுதி தன்னுடைய லட்சியமான டி.எஸ்.பி பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று திருப்பத்தூரில் பயிற்சி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். 7 மாதத்துக்குப் பிறகு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பிப்ரவரி மாதத்தில் பணியமர்த்தப்பட்டார். விஷ்ணு பிரியாவின் இன்னொரு சகோதரியும் டி.எஸ்.பியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பமே போலீஸ் குடும்பம் என்பதால் அங்கு நிலவும் அனைத்தும் விஷ்ணு பிரியாவுக்கு சிறுவயது முதலே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். அவரது சாவுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டியது காவல்துறையின் கடமை.

-எஸ்.மகேஷ்

எது தெய்வீகக் காதல்?

Dinamani


எது தெய்வீகக் காதல்?


By இராம. பாரதி

First Published : 19 September 2015 01:39 AM IST


சங்க கால இலக்கியங்களில் தொடங்கி சமகால திரைப்படங்கள் வரை அனைத்திலும் பேசப்பட்டது, இனியும் பேசப்பட இருப்பது, பருவ வயதில் பலருக்கு பிடித்தமானது எல்லாமே ஒன்றுதான். அதுதான் காதல்.
காதல் என்றால் என்ன? எல்லோருக்கும் காதல் வருமா? அதை உணர்வது எப்படி? எல்லாவற்றுக்கும் மேலாக தெய்வீகக் காதல் என்றால் என்ன? இதுபோன்ற எண்ணிலடங்கா கேள்விகள் நம் முன்னே எழுகின்றன.
ஜாதி - மத வேறுபாடுகளையும், ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காமல் தோன்றுவதுதான் காதல் என்றும், காதலுக்கு கண்ணில்லை என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் மறுப்பதற்கில்லை. அதேவேளையில், பருவ வயதில் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்படுவதும், நம் மனதுக்குள் குறுகுறுப்பான எண்ணங்கள் தோன்றுவதும் இயல்பானதே. அது கண்டிப்பாக காதல் அல்ல.
என்றைக்கு நம் வாழ்க்கையை நாமே தீர்மானிக்கும் அளவுக்கு பக்குவம் அடைகிறோமோ அன்றைக்கு நம் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். அது என்ன பக்குவம்? அது எந்த வயதில் வரும்? என்ற கேள்விகள் எழலாம்.
ஒரு குடும்பத்தை வழிநடத்திச் செல்ல தந்தையும், தாயும் செய்யும் காரியங்களை என்றைக்கு நாம் சுயமாக செய்யத் தொடங்குகிறோமோ அன்றைக்கு நாம் பக்குவம் அடைந்திருப்பதை உணர முடியும். அது எந்த வயதினருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அப்படியொரு தருணத்தில் நம் மனதுக்குள் காதல் தோன்றினால் நிச்சயம் ஒரு தெளிவான முடிவை எடுப்பவராக இருப்போம். நம் மனதைக் கவர்ந்த எதிர் பாலினத்தவர் நமக்கும், நமது குடும்ப வாழ்க்கைச் சூழலுக்கும் சரியான தேர்வாக அமைவார்களா என்பதை மனம் சிந்திக்கும்.
ஆம் எனில், நாயகன் அல்லது நாயகியை திருமணம் செய்வதில் ஜாதி, மத, பொருளாதார ரீதியாகத் தடை ஏற்படுமா? அப்படி இல்லாவிட்டாலும் யாரேனும் ஒருவரது குடும்பத்தில் தீவிர எதிர்ப்பு இருக்குமா? என்பதை நம் மனம் கணக்கீடு செய்துவிடும்.
அதன் பின்னர், பிரச்னைகள் எதுவும் வேண்டாம் என தொடக்கத்திலேயே ஒதுங்குவது அல்லது தடைகளைத் தாண்டி திருமணம் செய்வது என்ற தெளிவான முடிவை எடுப்பவராக நாம் இருப்போம். இரண்டில் எது நடப்பினும் நன்மையே.
ஆனால், இதுபோன்ற தெளிவான சிந்தனைகள் எதுவுமே இல்லாமல் நடை, உடை, பாவனை என அழகியலை மட்டுமே பார்த்து உருவாகும் குறுகுறுப்பான எண்ணம் வெறும் பாலின ஈர்ப்பாக மட்டுமே அமையும்.
ஆச்சரியம் என்னவெனில் இந்தக் காதலில்(?) ஒருவர் மீது ஒருவர் மிக இறுக்கமான அன்பு வைத்திருப்பதாக நம் மனம் நினைத்துக் கொள்ளும். ஆனால், கடற்கரை, பூங்கா, திரையரங்கு என சுற்றித் திரிந்து பாலின ஈர்ப்புக்கான தேவைகள் முடிந்தவுடன் இந்தக் காதல் காணாமல் போய்விடும்.
சில சமயங்களில், இதில் யாரேனும் ஒருவரின் காதல் உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குப் பிடித்தமான ஆணோ அல்லது பெண்ணோ தவறான தேர்வாக இருப்பார்கள்.
நான் ஓர் ஏழையைக் காதலிக்கிறேன் என்று கூறுவது ஒரு பெண்ணின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், வாழ்வில் எவ்வித இலக்குமின்றி ஊதாரியாய் சுற்றித் திரிபவரைக் காதலிக்கிறேன் என்று கூறினால் அதை சரியென ஏற்க முடியுமா?
இதேபோல், எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆண், குடும்பத்தை வழி நடத்தும் திறன் ஏதும் இல்லாமல் ஆடம்பர வாழ்வை விரும்பும் பெண்ணைக் காதலிக்கிறேன் என்று கூறுவதும் ஏற்புடையதாக இருக்காது.
இது எல்லாவற்றையும் மீறி இப்படியொரு வாழ்க்கைத் துணையின் (ஆண் / பெண்) கரம் பற்றும்போது அந்தத் திருமணம் கசப்பானதாக மாறுகிறது. ஏனெனில், காதலிக்கும்போது கண்ணே, மணியே, முத்தே என கொஞ்சியதைப் போல எதார்த்த வாழ்வு அமைவதில்லை.
எல்லாம் சரிதான், பக்குவம் அடைந்ததோ அல்லது துடிப்புமிக்கதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காதல் என்பது தானாக இணைபவர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறுவது சரிதானா? நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இணைபவர்கள் காதலிக்கும் வாய்ப்பை பெறாதவர்களா என்ன? கண்டிப்பாக அப்படியொன்றும் இல்லை.
காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எதுவாக இருப்பினும் ஓர் ஆணுடன், பெண் கைகோத்து குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும்போதுதான் உண்மைக் காதலுக்கான கதவுகள் திறக்கின்றன.
அப்படிப் பார்த்தால் திருமணத்துக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு என ஏதேனும் ஒரு சூழலில் அனைவருக்குமே காதலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இதில் எத்தனை பேர் தெய்வீகக் காதலுடன் வாழுகின்றனர்? முதலில், தெய்வீகக் காதல் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண்பது அவசியம்.
ஆனால், கடலில் சங்கமிப்பது இயற்கையின் நியதிதானே தவிர நதிகளின் நோக்கம் அதுவல்ல. எத்தனை முறை வறட்சி ஏற்பட்டாலும் மீண்டும், மீண்டும் நீரை சுரக்கச் செய்து காடு, பள்ளம், மலை முகடுகளைத் தாண்டிச் சென்று மண்ணை வளமாக்குவதுதான் நதிகளின் நோக்கம்.
இதைப் போலவே, நம் வாழ்விலும் எத்தனை எத்தனை ஏற்றத் தாழ்வுகளை வேண்டுமானாலும் சந்திக்க நேரிடலாம். எண்ணற்ற சண்டை சச்சரவுகள் வரலாம். ஆனால், மீண்டும், மீண்டும் நம்மில் அன்பு சுரப்பதுடன், அது நதி நீரைப் போலவே தூய்மையானதாக இருக்குமென்றால் அந்த வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
நம் சதைகள் இளமையுடன் இருக்கும்போது கைகோத்து நடப்பதல்ல காதல். அறுபது, எழுபது வயதுகளைத் தாண்டி முதுமையை எட்டிய நிலையில், கைகோத்து நடந்து செல்ல நம் மனம் விரும்புமென்றால் அதுதான் தெய்வீகக் காதல்.
வாழ்வின் அனைத்து தருணத்திலும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வாழ்ந்தால் மட்டுமே எந்தவொரு தம்பதியும் தெய்வீகக் காதலை அடைவது சாத்தியம்.

Friday, September 18, 2015

மின் பொருள் கழிவுகள் - ஒரு சவால்


!Dinamani


By பூ. சேஷாத்ரி

First Published : 18 September 2015 01:04 AM IST


மின்சாரம், மனிதனோடு ஒன்றிவிட்ட உருவம் இல்லா ஒன்று. இன்று மின்சாரம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. வீடுதான் என்று இல்லை, மின்சாரம் இல்லை என்றால் இந்த நாடே இயங்காது என்ற நிலை தற்போது.
நமது முன்னோர்களில் சிலர் கூறுவர், அந்தக் காலத்தில் நாங்கள் அரிக்கேன் விளக்கில்தான் படித்தோம் என்று. ஆனால், இன்றைய தலைமுறையினர் சில நிமிடங்கள்கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்று புலம்புவதைக் கேட்கலாம்.
வளர்ந்து வரும் மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள், வீடுகள், நகரங்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருள்கள் என அனைத்தும் அதிகரித்து வருவதால் மின்சாரத்தின் நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில மாநிலங்கள் தங்கள் மின் தேவையை அவர்களாகவே பல தரப்பட்ட மின் தயாரிப்பு முறைகள் மூலம் பூர்த்தி செய்துகொள்கின்றனர். சில மாநிலங்கள் அண்டை மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
மின்சாரம் இல்லாத நேரத்திலும் மின்சாதனப் பொருள்களை இயக்க, பேட்டரியுடன் கூடிய தடையில்லா மின்சார சாதனம் (யு.பி.எஸ்.), ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் என்று இன்றைய அறிவியல் உலகில் மனிதன் தனக்குத் தானே பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டான்.
மின்சாரம் என்பது நீர், காற்று, நிலக்கரி, அணு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது சூரிய மின்சாரமும் பிரபலமாகி வருகிறது. நகரங்களில் உள்ள வீடுகளின் கூரைகளின் மீது தகடுகள் மூலம் தற்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அது பேட்டரியில் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
சில மாநில அரசுகள் சூரிய மின்சாரம் மூலமும் அவர்களது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. சில மாநிலங்கள் அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் இறங்கியுள்ளன.
இன்று பருவநிலை மாற்றத்தினால், மழை பொய்த்துவிட்டது. மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டதால் வெப்பமானது அதிகரித்து வருகிறது. உடன் வாகனங்கள் பெருகிவிட்டதால், அவற்றிலிருந்து வெளியேறும் புகையால் இன்னும் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
தற்பொழுது மின்சாரத்தால் இயங்கும் பொருள்களின் அசுர வளர்ச்சியினால், வீட்டு உபயோகப் பொருள்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்களையும் தாண்டி இன்று நான்கு சக்கர வாகனம், பேருந்து, விமானம் போன்றவைகூட மின்சாரத்தால் இயங்கும் அளவில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்துவிட்டன.
இது ஒருபுறம் ஆறுதலான விஷயமாகத்தான் இருக்கிறது. மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களால் மாசு இல்லை.
போக்குவரத்தை மின்மயமாக்குவது குறித்த "ஐடெக் இந்தியா 2015' என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு அண்மையில் சென்னையில் நடந்தது.
இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் அனந்த் கங்காராம் கீதே, மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"மேலும், மத்திய அரசின் "ஃபேம் இந்தியா' செயல் திட்டத்தில், ஹைபிரிட் மின்சார வாகனங்களின் வளர்ச்சி, அவற்றைச் செயலாக்கம் செய்வது என்பது ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கரியமில வாயுவால் ஏற்படும் மாசுகள், எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கலாம்.
உலக அளவில் எண்ணெய் வளம் தொடர்ந்து குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தயாரித்து வருகின்றன. இந்த வகையான வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது.
எனவே, இந்தியாவில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 30 சதவீத மானியத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய சாலை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றும் அமைச்சர் அனந்த் கீதே கூறினார்.
பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு சில ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் புழக்கத்தில் வந்துவிட்டது என்றபோதிலும், அது மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துவிட்டது. அதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
பராமரிப்புச் செலவு என்னவோ குறைவுதான் என்றாலும், பேட்டரியின் ஆயுள்காலம், ஆயுள் காலம் முடிந்த பின்பு அதை மாற்றுவதற்கு ஆகும் செலவுகள், வாகனத்தின் இதர உதிரிபாகங்கள் சரிவர கிடைக்காதது போன்ற காரணங்கள்தான் அவை.
சில நாடுகளில் பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பேருந்து, விமானங்களின் மாதிரிகளில் சோதனை ஓட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
நாட்டில் மின் சாதனங்களில் பெரு வரவால் மின் பொருள் கழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது இனி வரும் காலங்களில் இன்னும் எந்த அளவுக்கு உயரும் என்று கணிக்க இயலாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
பேட்டரியால் இயங்கும் யு.பி.எஸ். என்கிற தடையில்லா மின் சாதனம் பெருவாரியான இல்லங்களில் வந்துவிட்ட நிலையில், அதன் பேட்டரியானது தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது.
இரு சக்கர, நான்கு சக்கர, லாரி, பேருந்து, ரயில் என அனைத்து வாகனங்களிலும் பேட்டரியானது பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆயுள்காலம் முடிந்து தூக்கி ஏறியப்படும் பேட்டரிகளை மாசு விளைவிக்காத அளவுக்கு மறுசுழற்சிக்கான தொழில்நுட்பமோ, தொலைநோக்குச் சிந்தனையோ நம் நாட்டில் இல்லை.
ஏற்கெனவே, குப்பை, பிளாஸ்டிக் பொருள்களின் பெருக்கத்தால் மக்கள் வசிக்கும் பகுதிகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன என்கிற வேதனையான சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மின்சாதனம், வாகனங்களை பேட்டரியால் இயக்கும் முயற்சி வெற்றி பெற்றாலும், இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு நண்பனாக அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீண்டும் டெங்கு!

Dinamani

By ஆசிரியர்

First Published : 18 September 2015 01:01 AM IST


தலைநகரில் எது நடந்தாலும் அது செய்திதான், தேசியப் பிரச்னைதான். தில்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100-க்கு அதிகமானால், மத்திய அரசு உடனடியாக வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது. வெங்காய ஏற்றுமதி விலையை உயர்த்தி நிர்ணயிக்கிறது. தில்லியில் ஒரு பெண் வல்லுறவுக் கொலைக்கு ஆளானால், மத்திய அரசு உடனே சட்டத்தையே திருத்தி எழுதுகிறது. அதேபோலவே, தில்லியில் டெங்கு காய்ச்சல் என்றாலும் மத்திய அரசு பதறுகிறது. களம் இறங்குகிறது.
தில்லியில் கடந்த மூன்று வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவலாக இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக டெங்கு தீவிரம் கொண்டு, மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஏழு வயதுச் சிறுவன் அவினாஷ் டெங்கு காய்ச்சலால் இறந்தபோது, அந்தத் துயரத்தைத் தாங்க முடியாத பெற்றோர் தாங்கள் வசித்த 4-ஆவது மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை, தில்லியில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் பேசப்படும் விவகாரமாக மாற்றின ஊடகங்கள்.
இந்தச் சிறுவனின் மரணம், பெற்றோரின் துயரம் ஆகியவற்றோடு நின்றுவிடாமல், குழந்தை அவினாஷ் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது, மூன்று மருத்துவமனைகளால் சேர்த்துக்கொள்ள முடியாது எனத் திருப்பியனுப்பப்பட்ட விவகாரம், தில்லி மருத்துவமனைகளின் மீதான தீவிர எதிர்வினையைக் கிளப்பியது. சிறுவன் அவினாஷ் மட்டுமல்ல, அன்றாடம் பல நூறு பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்கிற உண்மையும் வெளிவந்தது. மக்கள் பெருந்திரள் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் களப் போராட்டம், அறிக்கைப் போராட்டம், பேட்டித் தாக்குதல் என பன்முனை எதிர்ப்புகள் தொடங்கின.
இதன்பிறகுதான் மத்திய அரசு தலையிட்டது. தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சலால் வரும் நோயாளிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு ரூ.600 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தச் சோதனைகள் தில்லி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன. தில்லியில் அனைத்துப் படுக்கைகளும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. கூடுதலாக 1,000 படுக்கைகளை வாங்குவதற்கு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும்கூட, தனியார் மருத்துவமனைகளை நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகமாக நாடுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால், அத்தகைய மருத்துவமனைகளை நெருக்கடிநிலை நடவடிக்கையாக அரசே தாற்காலிகமாக ஏற்று நடத்தும் என்று கேஜரிவால் கூறியதால், இந்திய மருத்துவர்கள் கழகம் சார்பில் நோயாளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "தற்போதைய டெங்கு காய்ச்சல் வைரஸ் 2013-ஆம் ஆண்டு வைரஸ் போல கொல்லும் கிருமி அல்ல. அச்சப்பட வேண்டாம். அதிகமான காய்ச்சல் இருந்தால் மட்டுமே அனுமதிக்கும் அவசியம் நேரும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றமும்கூட பொதுநல வழக்கை ஏற்றுக் கொண்டு, டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசுக்கும், தில்லி முதல்வருக்கும் விளக்கம் கோரியுள்ளது.
இவை யாவும் ஒருபுறம் நடந்தபோதிலும், ஓர் உண்மையை மறுப்பதற்கில்லை. டெங்குக் காய்ச்சல் தில்லிக்குப் புதியதல்ல. காமன்வெல்த் விளையாட்டு நடந்த வேளையில், தில்லியில் டெங்கு காய்ச்சலால் எட்டு பேர் இறந்தனர். சுமார் 6,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் 2,000 பேர் தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. குறிப்பாக, அக்டோபர் மாதம் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
நிகழாண்டில் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை 15 பேர் இறந்துள்ளனர். சுமார் 1,800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில்தான், மத்திய அரசும், தில்லி அரசும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன.
டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை, அரசுகளைவிட மக்களே பொறுப்பாளிகள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள், தூய்மையான நன்னீரில் மட்டுமே வளர்ந்து பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வீணாகக் கிடக்கும் சிறு பாத்திரங்கள், கலயங்கள், பயன்படாத டயர்கள், பூந்தொட்டிகள், பாத்திகளில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொற்றுநோய் அல்ல. ஆகவே, நன்னீர் தேங்குவதைத் தவிர்த்தாலே பாதி பிரச்னையை எளிதில் சமாளிக்கலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருஞ்செலவு மிச்சமாகும்.
கொசு விரட்டி, கொசுக் கொல்லி ஆகியவற்றைத்தான் இன்று பயன்படுத்தி வருகிறோம். இவற்றைவிட கொசுக்களை மலடாக்கும் மருந்துகள் மிகவும் பயனுள்ளதாகவும், கொசு உற்பத்தியை வேகமாகக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அத்தகைய கொசு மலடுக்கான மருந்துகள் சந்தைக்கு வரவில்லை. அது ஏன் என்பது புரியவில்லை.
மக்களை நோயிலிருந்து காப்பாற்றுவது எப்படி அரசின் கடமையோ, அதேபோன்று நோய் உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தியாகாமல் தடுக்க உதவுவதும் மக்களின் கடமைதான் என்பதை நாம் உணர வேண்டும்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...