!
By பூ. சேஷாத்ரி
First Published : 18 September 2015 01:04 AM IST
மின்சாரம், மனிதனோடு ஒன்றிவிட்ட உருவம் இல்லா ஒன்று. இன்று மின்சாரம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. வீடுதான் என்று இல்லை, மின்சாரம் இல்லை என்றால் இந்த நாடே இயங்காது என்ற நிலை தற்போது.
நமது முன்னோர்களில் சிலர் கூறுவர், அந்தக் காலத்தில் நாங்கள் அரிக்கேன் விளக்கில்தான் படித்தோம் என்று. ஆனால், இன்றைய தலைமுறையினர் சில நிமிடங்கள்கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்று புலம்புவதைக் கேட்கலாம்.
வளர்ந்து வரும் மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள், வீடுகள், நகரங்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருள்கள் என அனைத்தும் அதிகரித்து வருவதால் மின்சாரத்தின் நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில மாநிலங்கள் தங்கள் மின் தேவையை அவர்களாகவே பல தரப்பட்ட மின் தயாரிப்பு முறைகள் மூலம் பூர்த்தி செய்துகொள்கின்றனர். சில மாநிலங்கள் அண்டை மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
மின்சாரம் இல்லாத நேரத்திலும் மின்சாதனப் பொருள்களை இயக்க, பேட்டரியுடன் கூடிய தடையில்லா மின்சார சாதனம் (யு.பி.எஸ்.), ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் என்று இன்றைய அறிவியல் உலகில் மனிதன் தனக்குத் தானே பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டான்.
மின்சாரம் என்பது நீர், காற்று, நிலக்கரி, அணு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது சூரிய மின்சாரமும் பிரபலமாகி வருகிறது. நகரங்களில் உள்ள வீடுகளின் கூரைகளின் மீது தகடுகள் மூலம் தற்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அது பேட்டரியில் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
சில மாநில அரசுகள் சூரிய மின்சாரம் மூலமும் அவர்களது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. சில மாநிலங்கள் அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் இறங்கியுள்ளன.
இன்று பருவநிலை மாற்றத்தினால், மழை பொய்த்துவிட்டது. மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டதால் வெப்பமானது அதிகரித்து வருகிறது. உடன் வாகனங்கள் பெருகிவிட்டதால், அவற்றிலிருந்து வெளியேறும் புகையால் இன்னும் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
தற்பொழுது மின்சாரத்தால் இயங்கும் பொருள்களின் அசுர வளர்ச்சியினால், வீட்டு உபயோகப் பொருள்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்களையும் தாண்டி இன்று நான்கு சக்கர வாகனம், பேருந்து, விமானம் போன்றவைகூட மின்சாரத்தால் இயங்கும் அளவில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்துவிட்டன.
இது ஒருபுறம் ஆறுதலான விஷயமாகத்தான் இருக்கிறது. மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களால் மாசு இல்லை.
போக்குவரத்தை மின்மயமாக்குவது குறித்த "ஐடெக் இந்தியா 2015' என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு அண்மையில் சென்னையில் நடந்தது.
இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் அனந்த் கங்காராம் கீதே, மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"மேலும், மத்திய அரசின் "ஃபேம் இந்தியா' செயல் திட்டத்தில், ஹைபிரிட் மின்சார வாகனங்களின் வளர்ச்சி, அவற்றைச் செயலாக்கம் செய்வது என்பது ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கரியமில வாயுவால் ஏற்படும் மாசுகள், எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கலாம்.
உலக அளவில் எண்ணெய் வளம் தொடர்ந்து குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தயாரித்து வருகின்றன. இந்த வகையான வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது.
எனவே, இந்தியாவில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 30 சதவீத மானியத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய சாலை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றும் அமைச்சர் அனந்த் கீதே கூறினார்.
பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு சில ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் புழக்கத்தில் வந்துவிட்டது என்றபோதிலும், அது மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துவிட்டது. அதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
பராமரிப்புச் செலவு என்னவோ குறைவுதான் என்றாலும், பேட்டரியின் ஆயுள்காலம், ஆயுள் காலம் முடிந்த பின்பு அதை மாற்றுவதற்கு ஆகும் செலவுகள், வாகனத்தின் இதர உதிரிபாகங்கள் சரிவர கிடைக்காதது போன்ற காரணங்கள்தான் அவை.
சில நாடுகளில் பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பேருந்து, விமானங்களின் மாதிரிகளில் சோதனை ஓட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
நாட்டில் மின் சாதனங்களில் பெரு வரவால் மின் பொருள் கழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது இனி வரும் காலங்களில் இன்னும் எந்த அளவுக்கு உயரும் என்று கணிக்க இயலாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
பேட்டரியால் இயங்கும் யு.பி.எஸ். என்கிற தடையில்லா மின் சாதனம் பெருவாரியான இல்லங்களில் வந்துவிட்ட நிலையில், அதன் பேட்டரியானது தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது.
இரு சக்கர, நான்கு சக்கர, லாரி, பேருந்து, ரயில் என அனைத்து வாகனங்களிலும் பேட்டரியானது பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆயுள்காலம் முடிந்து தூக்கி ஏறியப்படும் பேட்டரிகளை மாசு விளைவிக்காத அளவுக்கு மறுசுழற்சிக்கான தொழில்நுட்பமோ, தொலைநோக்குச் சிந்தனையோ நம் நாட்டில் இல்லை.
ஏற்கெனவே, குப்பை, பிளாஸ்டிக் பொருள்களின் பெருக்கத்தால் மக்கள் வசிக்கும் பகுதிகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன என்கிற வேதனையான சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மின்சாதனம், வாகனங்களை பேட்டரியால் இயக்கும் முயற்சி வெற்றி பெற்றாலும், இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு நண்பனாக அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment