Thursday, September 24, 2015

சினிமா எடுத்துப் பார் 27- எம்.ஜி.ஆர் வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட்! எஸ்பி.முத்துராமன்

Return to frontpage

கடந்த வார கட்டு ரையை ‘எம்.ஜி.ஆரை வைத்து நான் ஏன் படம் இயக்கவில்லை’ என்று கேட்டு முடித்திருந்தேன். நடிப்பு துறையில் இருந்து அரசியல் துறைக்கு வந்து முதலமைச்சராக ஆனதும் அவர் நடிக்கவில்லை. அதனால் அவரை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது இல்லை. அதைப் போல எனக்கு எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அது நிறைவேறாத ஆசையாகவே ஆகிவிட்டது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் ஒருமுறை படம் பார்க்க ஏவி.எம் ஸ்டுடி யோவுக்கு வந்தார். இந்தத் தகவல் ஸ்டுடி யோவில் இருந்த எல்லோருக்கும் தெரிய வர, எல்லோரும் தியேட்டர் வாசலுக்குப் போய் நின்றுவிட்டோம். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர் எங்களை எல்லாம் பார்த்ததும் ரொம்பவும் சந் தோஷப்பட்டார். என்னைப் பார்த்தார். அவரை நான் இரு கைக் கூப்பி வணங்கி னேன். என் அருகில் வந்து, ‘‘உனக்கு என்ன வேணும்?’’னு கேட்டார். எதுவும் புரியாத வனாக நின்றேன். மீண்டும் ஒருமுறை, ‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றார். ‘‘உங்க வீட்டுல செய்ற சிக்கன் நெய் ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். அது வேணும்’’னு கேட்டேன்.

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘‘யாரெல்லாமோ, என் னென்னமோ கேட்குறாங்க… நீ போயி!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அடுத்த நாள் மதிய சாப்பாட்டு நேரம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வந்த ஓர் ஆள், ‘‘உங்களுக்கு எம்.ஜி.ஆர் சிக்கன் நெய் ரோஸ்ட் கொடுக்க சொன்னார்’’ என்று சொல்லி ஒரு கேரிய ரைக் கொடுத்தார். வியந்து போனேன். எம்.ஜி.ஆர் இருக் கும் பிஸியில் ஓர் உதவி இயக்குநர் கேட்டதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி. எம்.ஜி.ஆர் எனக்கு ‘கலைமாமணி’ விருது கொடுத்து கவுரவித்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதை திரை யுலகம் ஒன்றுசேர்ந்து கொண்டாடியது. கலைக் கல்லூரி எதிரில் ஒரு பெரிய மேடை அமைத்து, அதில் எம்.ஜி.ஆர் நிற்க, திரையுலகினர் அனைவரும் ஊர்வலமாக வந்து அவரை வாழ்த் தினர். பெரிய விழாவாக அது கொண் டாடப்பட்டது. அந்த விழாவில் ஏவி.எம். சரவணன் சார் எல்லோருடைய சார்பிலும் வெள்ளி கோப்பை ஒன்றை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகமே பாராட்டுகிற காட்சியாக அந்த விழா அமைந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது உல கமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். எம்.ஜி.ஆருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் எம்.ஜி.ஆர் அவர்கள் குணமாகி சென்னை வந்தார்கள். இங்கு வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் டாக்டர் எலி ப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளிலும் சரவணன் சார் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று சரவணன் சார் கேட்டார். அப்போது அவர், ‘‘ ‘அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றார். வெளி நாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெற்றிருந் தார். அவரது விருப்பத்தை சரவணன் சார் நிறைவேற்றினார். மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!

எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தலையீடு அதிகமாக இருக்கும் என்று அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ‘அன்பே வா’ படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்தவிதத்திலும் அவர் தலையிடவில்லை. இந்த சந்தேகத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். நகைச்சுவையாக பேசக் கூடியவர். சாதரணமாக எம்.ஜி.ஆரிடம் பேசுவார். அவர் கேட்டால்தான் சரியா இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் அவரை அனுப்பினோம். அவர், எம்.ஜி.ஆரிடம் ‘‘நீங்க படப்பிடிப்பில் எல்லா விஷயத் திலும் தலையிடுவீங்கனு கேள்விப்பட் டோம். இங்கே எதிலுமே தலையிடவில் லையே?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?’’ என்று கேட்டவர், அங்கே இருந்த எங்கள் எல்லோரையும் அருகே அழைத்தார்.

‘‘நான் நடிகன் மட்டுமல்ல. டெக்னீஷியனும்கூட. ஒரு வேலையைத் தப்பா செய்யும்போது அதைப் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாதே. முகத்தில் குத்து விழுவதுபோல காட்சி எடுக்கும்போது கேமராவை சரியான கோணத்தில் வைத்து எடுத்தால்தான் ரியலாக முகத் தில் குத்து விழுவதுபோல இருக் கும். கேமரா கோணத்தைத் தவறாக வைத்தால் காட்சி சரியாக அமையாது. அதனால் கேமராவை சரியான கோணத் தில் வைக்குமாறு கூறுவேன். எப்போதும் தவறைத்தான் சுட்டிக் காட்டுவேனே தவிர, மற்றபடி தேவையில்லாமல் தலையிடு வதில்லை. ‘அன்பே வா’ படத்தை பொறுத்தவரை திறமையான இயக்கு நர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழு வினர் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்கள். அதனால் நான் தவறை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

மெய்யப்ப செட்டியாரின் கடைசி மகன் பாலசுப்ரமணியன் அவர்களுக் குத் திருமணம் நடந்தது. அப்போது செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மை யாரும் 21 தொழிலாளர்களுக்கு திருமணங்களை செய்து வைத்தார்கள். அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் திருமணம் நடந்த 21 தொழிலாளர்களுக்கும் பணமும், பரிசும் கொடுத்தார். அந்த அளவுக்கு தொழிலாளர்களின் மீது அன்பு வைத்திருந்தார் அவர்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் வெள்ளி விழா. அந்தப் படம் வெளியாகும் வரை ‘பட்ஜெட்’ இயக்குநர் என்ற பெயரை நான் பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் விசு அவர்கள் குறைவான நாட்களில், குறைந்த செலவில் பட்ஜெட் போட்டு அந்தப் படத்தை எடுத்து எனக்கு சவால்விட்டார். இதனை இன் றைய இயக்குநர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் துண்டு விழாது. தயாரிப் பாளர்களுக்கு நஷ்டம் வராது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இந்திய அரசின் தங்க பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப் படம். அந்தப் படத்தின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளைப் பாராட்டி கேடயம் வழங்கினார்.

அந்தக் கேடயம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நினைவுக் கேடயம். ‘‘முக்கியமானவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். மற்றவர்களுக்கு நாகி ரெட்டியாரைக் கொடுக்கச் சொல்கிறேன்’’ என்று சரவணன் சார் கூறினார். எம்.ஜி.ஆர், ‘‘எல்லா கலைஞர்களுக்கும் நானே வழங்குகிறேன். பெரிய டெக்னீஷி யனுக்கு மட்டும் நான் கொடுத்தால், மற்றவர்கள் என் கையால் வாங்கவில் லையே என்று வருத்தப்படுவார்கள்’’ என்று களைப்பையும் பொருட்படுத்தாது எல்லோருக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இவ்வளவு பேரும், புகழும் பெற்ற எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவரைப் பற்றி அடுத்த வாரம் எழுத இருக்கிறேன். யார் அவர்?

- இன்னும் படம் பார்ப்போம்…

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024