Wednesday, September 2, 2015

60-ஆவது ஆண்டில் எல்.ஐ.சி.



By சு. சங்கரநாராயணன்

First Published : 01 September 2015 01:28 AM IST


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது வெற்றிகரமான 59 ஆண்டு கால சேவைப் பயணத்தை முடித்து 60-ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.
1980-க்குப் பின்பு, நமது அரசுகள் பின்பற்றி வருகிற தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் சூறாவளிகள் சுற்றி சுழன்றடித்து அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் பலவற்றைக் கபளீகரம் செய்த நிலையில், இரும்புக் கோட்டையாகத் திகழ்கிறது எல்.ஐ.சி.
முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் அரசு, ஆயுள் காப்பீட்டுத் தொழிலை தேசியமயமாக்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் 19.1.1956-இல் தாக்கல் செய்தது.
அப்போது செயல்பட்டு வந்த 245 இந்திய, வெளிநாட்டுத் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்டு இந்திய காப்பீட்டுத் தொழிலில் முற்றுரிமை பெற்ற நிறுவனமாக 1.9.1956 முதல் எல்.ஐ.சி. செயல்படத் தொடங்கியது.
1956-க்கு முன்னர் செயல்பட்டு வந்த காப்பீட்டு நிறுவனங்களில் 25 திவால் என அறிவித்திருந்தன. 25 நிறுவனங்கள் நிதிப் பிரச்னைகளினால் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. 75 நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு ஒரு பைசா கூட போனஸ் அறிவித்திருக்கவில்லை.
66 நிறுவனங்களில் கணக்கே இல்லை. 23 நிறுவனங்கள் இறுதிக் கணக்கு சமர்ப்பித்திருக்கவில்லை. 11 நிறுவனங்களின் நிர்வாகம் நீதிமன்றங்களில். நான்கு நிறுவனங்களின் சொத்துகளையும், நிர்வாக இயக்குநர்களையும் காணவில்லை. இந்த நிலைகளுக்கு மாற்றாகப் பிறந்ததுதான் எல்.ஐ.சி.
எல்.ஐ.சி. தோன்றிய முதல் ஆண்டில் (1957) விற்பனை செய்யப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை 9.42 லட்சம் மட்டுமே. கடந்த நிதியாண்டில் விற்கப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை 2.01 கோடி ஆகும்.
1957-இல் 56.86 லட்சம் பாலிசிதாரர்களுக்கு சேவை செய்த எல்.ஐ.சி. இன்று குழுக் காப்பீட்டுத் திட்டங்களிலும் சேர்த்து 40 கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்களுக்கு சேவை செய்து வருகிறது.
1957-இல் மொத்த பிரீமியம் வருவாய் ரூ.88.65 கோடி. இது கடந்த நிதியாண்டில் ரூ.2,39,482 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் முதல் ஆண்டு பிரீமியம் வருவாய் ரூ.78,302 கோடி ஆகும். கடந்த ஓராண்டின் மொத்த வருமானம் ரூ.4,07,546 கோடி ஆகும்.
1956-இல் மத்திய அரசு வெறும் ஐந்து கோடி ரூபாய் முதலீடு இட்டு ஆரம்பித்த இந்த நிறுவனத்தில் 31.3.2015-இல் நிதிக் குவியல் என்பது ரூ.18,24,194 கோடி ஆகும். 31.3.2015-இல் எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு ரூ.20,31,116 கோடி ஆகும். மத்திய அரசுக்கு இதுவரை லாபப் பங்கீடாக கொடுத்தது மட்டுமே ரூ.7,000 கோடிக்கும் மேல் ஆகும்.
ஏனைய எல்லாத் துறைகளிலும் அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்குப் போட்டியாக தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் அரசு நிறுவனங்கள் செயலிழந்து போவதுதான் வாடிக்கை.
ஆனால், இதற்கு மாற்றாக ஆயுள் காப்பீட்டுத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்து 15 ஆண்டுகள் ஆனபிறகும், கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின் சந்தைப் பங்கு பாலிசி எண்ணிக்கையில் 77.85 சதவீதம் என்பதும், முதல் ஆண்டு பிரீமியம் வருவாயில் 69.21 சதவீதம் என்பதுவும் சாதனை ஆகும்.
பாலிசிதாரர் சேவையிலும் எல்.ஐ.சி உலக சாதனை நிகழ்த்தி வருகிறது. ஓர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சேவைத் திறன் என்பது அந்நிறுவனம் உரிமம் வழங்குவதைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. 1956-க்கு முன்னர் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் 36.48% முதல் அதிகபட்சம் 74.70% வரை உரிமங்களை வழங்காமல் நிலுவையில் நிறுத்தி வைத்திருந்தன.
ஆனால், 31.3.2015-இல் எல்.ஐ.சி. நிறுவனத்தில் வழங்கப்படாமலிருந்த நிலுவை உரிமம் என்பது முதிர்வு உரிமத்தில் 0.22%, இறப்பு உரிமத்தில் 0.49% மட்டுமே. உலகின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் சராசரியாக 20% முதல் 40% வரை வழங்கப்படாத நிலுவை உரிமம் வைத்துள்ளன.
இந்தியப் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாப்பதில் முன்னணிப் பங்கினை வகித்து வருவது எல்.ஐ.சி. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு (1956-61) ரூ.184 கோடியில் தொடங்கிய அதன் பங்களிப்பு ஒவ்வொரு முறையும் அதிகரித்து பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு 31.3.2015 முடிய மூன்றே ஆண்டுகளில் ரூ.7,52,633 கோடியாக உயர்ந்தது.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு இந்திய ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.1,50,000 கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.7,50,000 கோடி நிதி வழங்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மக்கள் நலன் சார்ந்த சமூக நலத் திட்டங்களான வீட்டு வசதி மேம்பாடு, மின்சார வசதி, குடிநீர் வடிகால் நீர்ப்பாசன திட்டம், சாலை, ரயில்வே, பாலங்கள், துறைமுக மேம்பாடு உள்ளிட்டவற்றில் எல்.ஐ.சி.யின் முதலீடு 31.3.2015-இல் மொத்தம் ரூ.16,84,690 கோடி ஆகும்.
2006-இல் தனது பொன்விழா ஆண் டைக் கொண்டாடிய நேரத்தில் பொன் விழா அறக்கட்டளை நிதி ஒன்றை உருவாக்கியது. இந்நிதியிலிருந்து இந்தியா முழுவதும் இதுவரை 325 திட்டங்களுக்கு உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
பிஜி, மோரீஷஸ், பிரிட்டன், பஹ்ரைன், நேபாளம், இலங்கை, கென்யா, சவூதி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் சேவையாற்றி வருகிறது. எல்.ஐ.சி. சார்பில் ஏழு துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டுமே குடியரசுத் தலைவர் வழங்கிய இந்திரா காந்தி விருது உள்ளிட்ட 40}க்கும் மேற்பட்ட விருதுகளை எல்.ஐ.சி. வென்றிருக்கிறது.
இந்த விருதுகளை எல்லாம்விட சிறந்தது எதுவென்றால், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் கூறும் வார்த்தைதான். எல்.ஐ.சி.ன்னா தைரியமா பணம் கட்டலாம் என்பதுதான் அது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024