சில படங்களின் தலைப்பே அற்புதமான மனச்சித்திரத்தை உருவாக்கக்கூடியதாக அமைந்துவிடும். ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979) ஓர் உதாரணம். சுதாகர், ராதிகா, விஜயன், ரதி நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இரண்டு காதல் ஜோடிகள்; காதலில் பிரிவு; புதிய உறவு என்று செல்லும் இப்படத்தில் நுட்பமான உணர்விழைப் பின்னல்களைக் கொண்ட பாடல்களை உருவாக்கியிருந்தார் இளையராஜா.
இழந்த காதலின் வசந்தகால நிலப்பரப்புக்குச் சென்று, வருடிச் செல்லும் காற்றில் மனத்தின் ரணங்களைக் காயவைத்துக் கொள்ளும் உணர்வை ஏற்படுத்தும் பாடல்களில் ஒன்று ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’. ஜென்ஸி, எஸ்.பி. ஷைலஜா, மலேசியா வாசுதேவன் என்று மூன்று அற்புதக் குரல்களின் சங்கமம் இப்பாடல்.
வெறும் இசைக் கருவிகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல், மனித உணர்வுகளின் மெல்லிழைகளால் இழைக்கப்பட்ட பாடல் இது. கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரலாக ஜென்ஸியின் ஹம்மிங், சருகுகளை அள்ளிக்கொண்டு வரும் காற்றைப் போல மனதின் பல்வேறு உணர்வுகளைத் திரட்டிக்கொண்டே பரவிச் செல்லும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் ஏதுமற்ற, சிறிய பூச்செடிகள் நிறைந்த பரந்த நிலத்தில் நம்மை அள்ளிச் சென்று நிறுத்திவிடும் அந்த ஹம்மிங். முற்றிலும் சோகமயமாக்கிவிடாமல், கைவிட்டுப்போன காதலின் இனிமையான தருணங்களும், துயரம் தோய்ந்த நிகழ்காலமும் இனம் பிரிக்க முடியாதபடி கலக்கும் சுகானுபவத்தை இசைக் குறிப்புகளால் எழுதியிருப்பார் இளையராஜா.
நிரவல் இசைக் கோவைகளும், கேட்பவரின் கற்பனை மொழியும் தெளிவற்ற உருவகங்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதை இப்பாடல் முழுதும் உணர முடியும். முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல், சிறிய மேடுகளில் மலர்ந்திருக்கும் சிறு பூக்களை வருடியபடி திசைகளற்று படர்ந்து செல்லும் தென்றலை உணர வைக்கும். குரல் சென்றடைய முடியாத தொலைவின் சாலையில் செல்லும் தன் அன்புக்குரியவரை அழைக்க முடியாமல் பரிதவிக்கும் மனதின் விசும்பலாகவும் அது ஒலிக்கும்.
’மனதில் உள்ள கவிதைக் கோடு மாறுமோ’ எனும் கண்ணதாசனின் வரிகள், சோக நாடகத்தின் ஆன்மாவை வலியுடன் பதிவுசெய்திருக்கும். பிரிவின் வலிகளால் முதிர்ச்சியடைந்திருக்கும் இளம் மனதின் வெளிப்பாடாக உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. ‘என் பாட்டும் உன் பாட்டும்’ எனும் வார்த்தைகளைத் தொடர்ந்து, மிகக் குறுகிய இடைவெளிக்குப் பின் ‘ஒன்றல்லவோ’ என்று ஜென்ஸி பாடும்போது அவரது குரலில் சிறிய தேம்பல் தொனிக்கும். பாடலின் இரண்டாவது சரணத்தைத் தொடரும் எஸ்.பி. ஷைலஜா தனது வழக்கமான துல்லியத்துடன் பாடியிருப்பார். மேகத்தை நோக்கி எறியப்பட்ட குரலோ என்று தோன்றும்.
‘எழுதிச் செல்லும் விதியின் கைகள்’ எனும் கவிதை வரியில், வார்த்தைகளுக்கு வெளியே ஒரு புனைவுச் சித்திரத்தை வரைந்திருப்பார் கண்ணதாசன்.
தொடர் ஓட்டத்தைப் போல், ஷைலஜாவிடமிருந்து சோகத்தை வாங்கிக்கொண்டு பாடலைத் தொடர்வார் மலேசியா வாசுதேவன். மூன்றாவது நிரவல் இசையின் முடிவில் ஒலிக்கும் கிட்டார், ஆணின் மனதுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் துயரம் வெளியேறத் தவிப்பதைப் பிரதியெடுத்திருக்கும். ‘மலையின் மீது ரதி உலாவும் நேரமே’ எனும் வார்த்தைகள் உருவாக்கும் கற்பனை வார்த்தையில் அடங்காதது. பூமிக்கும் மேகத்துக்கும் இடையில், அந்தரத்தில், வானுலகத்தின் தேவதை நடந்து செல்வதாக மங்கலான சித்திரம் தோன்றி மறையும். காதல் அனுபவமே இல்லாதவர்கள் கேட்டால்கூடக் கண்களின் ஓரம் நீர் துளிர்க்க வைக்கும் பாடல் இது.
‘இரு பறவைகள் மலை முழுவதும்’ பாடல் ஜென்ஸியின் மென் குரலும் இளையராஜாவின் இன்னிசையும் சரிவிகிதத்தில் வெளிப்பட்ட படைப்பு. கரு நீல வானின் பின்னணியில் கரும்பச்சை நிறத் தாவரங்கள் போர்த்திய மலைகளைக் கடந்து பறந்துசெல்லும் பறவைகளைக் காட்சிப்படுத்தும் இசையமைப்பை உருவாக்கியிருப்பார் இளையராஜா. ‘இது கண்கள் சொல்லும் ரகசியம்’ எனும் வரியில் ‘ரகசியம்’ எனும் வார்த்தையை ஜென்ஸி உச்சரிக்கும் விதம், ஒரு பாடகியின் குரலாக அல்லாமல், மனதுக்குப் பிடித்த தோழியின் பேச்சுக் குரலின் இயல்பான கீற்றலாகவே வெளிப்பட்டிருக்கும்.
முதல் நிரவல் இசையில், இயற்கையின் அனைத்து வனப்புகளும் நிறைந்த பிரதேசத்தின் இரண்டு மலைகளுக்கு இடையில் வயலின் தந்திக் கம்பிகளைப் பொருத்தி இசைப்பது போன்ற இனிமையுடன் ஒற்றை வயலின் ஒலிக்கும். இரண்டாவது நிரவல் இசையில், பொன்னிறக் கம்பிகள் பொருத்தப்பட்ட கிட்டாரிலிருந்து வெளிப்படும் ஒலிக்கீற்றுகளைப் போன்ற இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.
‘எங்கெங்கு அவர் போல நான் காண்கி(ர்)றேன்’ என்று பாடும்போது ஜென்ஸியின் குரலில் ஒரு அன்யோன்யம் கரைந்திருப்பதை உணர முடியும். பலரது மனதில் வெவ்வேறு முக வடிவங்களாக ஜென்ஸியின் குரல் நிலைத்திருப்பதின் ரகசியம் இதுதான்.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
No comments:
Post a Comment