By ஆசிரியர்
First Published : 26 September 2015 03:09 AM IST
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அன்பர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தரப்பினரையும் ஆழ்ந்த வேதனைக்குள்ளாகியது மெக்கா அருகே நெரிசலில் சிக்கி, 719 பேர் உயிரிழந்திருக்கும் கோரச் சம்பவம். இந்த மரணங்களுக்குக் காரணம் இயற்கை இடர்பாடு அல்ல; மனிதத் தவறுகளே என்பதும், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பதும் அனைவர் மனதிலும் வேதனையைக் கடந்த அறச்சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு வாரங்களுக்குள் நேர்ந்திருக்கும் இரண்டாவது துயரச் சம்பவம் இது. ஒரு கட்டுமான மின்தூக்கி சாய்ந்ததில் 109 பேர் இறந்தனர். அந்தத் துயரத்தின் வடு ஆறும் முன்பாகவே மேலும் ஒரு சம்பவம் 719 பேரை பலி கொண்டது. 800-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியுள்ளது.
மெக்காவில் 1987 முதலாக ஒவ்வொரு மூன்று ஆண்டு இடைவெளியில் ஒரு விபத்து நடப்பதும் அதில் சில நூறு உயிர்கள் மடிவதும் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. 1997-ஆம் ஆண்டு தீ விபத்தில் 343 பேர் இறந்த சம்பவத்துக்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்துத்தான், 2006-ஆம் ஆண்டில் நடந்த விபத்தில் 364 பேர் இறந்தனர். அதுவும் இதே மினா பகுதியில், சாத்தான் மீது கல்லெறிதல் நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசலில்தான்.
"எங்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது' என்று மட்டுமே சவூதி அரசு சொல்கிறது. ஆனால், அண்டை நாடுகளும், பிற இஸ்லாமிய நாடுகளும் சவூதி அரசு இத்தனை மரணங்களுக்கும் பொறுப்பு என்று கண்டித்துள்ளன. அவர்களது பெருந்திரள் மேலாண்மைக் குறைபாடுதான் இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர்.
மெக்காவிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து வந்து, சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் பங்கேற்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டோர், பல சாலைகள் வழியாக ஒழுங்குபடுத்தி அனுப்பப்பட்டு, முக்கிய இடமான ஜமாரத் அருகே சாத்தான் மீது கல்லெறிதல் முடிந்ததும் அவர்களை மாற்று வழியாக மீண்டும் மெக்கா திரும்பும் வகையில் ஒருவழிப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே வெயில் கடுமையாக இருந்தது. 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதால், ஒவ்வொரு புனிதப் பயணியும் எவ்வளவு சீக்கிரத்தில் இந்தச் சடங்கை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்து ஓய்வெடுக்க வேண்டும் என்ற மனநிலையில், வேகமாக நகர்ந்துள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் அந்த வேகம் தடைபட்டபோது, பின்னால் அதே வேகத்தில் வந்த கூட்டம் நெருக்கியடித்தது.
ஆனால், ஏன் இப் புனிதப் பயணிகளின் வேகம் தடைப்பட்டது, அவர்களைத் தடுத்தது எது? என்பது குறித்து சவூதி அரேபிய அரசு மௌனம் காக்கிறது. உருது பத்திரிகை, ஊடகங்களின் கட்டுரைகளை, பேட்டிகளை முகநூலில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் ஒரு பதிவு, இந்த விபத்துக்குக் காரணம், சவூதி அரேபியாவின் இளவரசர் இந்தக் கூட்டத்தைக் கடந்து செல்வதற்காகக் கூட்டத்தைத் திசைமாறிச் செல்லச் செய்ததும், கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுமே இந்த நெரிசல் ஏற்படக் காரணம் என்று சுட்டிக் காட்டுகின்றன.
இதைப்போன்று, சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானாவில், புஷ்கரணியிலும் நெரிசல் ஏற்பட்டது. மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நதியில் நீராடி வெளியேறும் வரை, அலைமோதிய கூட்டத்தைக் காவல் துறை தடுத்து வைத்தது. இவர்கள் தங்கள் சடங்குகளை முடிக்கும்போது காவல் துறை தடுத்து நிறுத்தி வைத்த கூட்டத்தின் அளவு பன்மடங்கானது. அமைச்சர்கள் வெளியேறியவுடன், பொதுமக்களைப் போய்க்கொள்ளுங்கள் என்று ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டை விலக்கியபோது மிகப்பெரிய தள்ளுமுள்ளும், நெரிசலும், மிதிபடலும் நேர்ந்தது. பலர் இறந்துபோனார்கள். அதிகார மையங்களுக்கு வழி ஏற்படுத்தும்போதுதான் மக்கள் நெரிசலில் சிக்கிச் சாகிறார்கள் போலும்.
ஹஜ் புனித யாத்திரை ஒவ்வோர் இஸ்லாமியருக்கும் விதிக்கப்பட்ட ஐந்து கடமைகளில் ஒன்று. உலகம் முழுவதிலுமிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் வருவோர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. சவூதி அரசுக்கு இதன் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள். ஆனாலும், மெக்கா வரும் ஒவ்வொருவரையும் தம் மக்களாகக் கருதிப் பாதுகாக்கத் தவறிவிட்டது சவூதி அரசு.
இனி, ஹஜ் புனிதப் பயணம் பாதுகாப்பானதாக மாற வேண்டும் என்றால், சவூதி அரேபிய அரசினால் மட்டுமே இதைச் செய்ய முடியாது. அவர்கள் தற்போது நடைமுறைப்படுத்தும் பெருந்திரள் மேலாண்மை குறைபாடானது என்பதையே தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக நேர்ந்து வரும் விபத்துகள், நெரிசல் மரணங்கள் வெளிப்படுத்துகின்றன.
இத்தகைய பெருந்திரள் மேலாண்மையில் அனுபவம் உள்ளவர்கள், புதிய யோசனைகளைச் சொல்லக்கூடிய அறிவாளர்கள், அவ்வப்போது உருவாகும் சிக்கலைத் தீர்க்கும் நுழைமாண் நுண்புலம் கொண்டோரை பல நாடுகளிலிருந்தும் வரவழைத்து அத்தகைய குழுவைக் கொண்டு, புனிதப் பயணிகளை வழிநடத்தினால், இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்பது உறுதி.
பெருந்திரள் மேலாண்மை செய்ய எங்களால் இயலவில்லை என்று ஒப்புக்கொள்ளும் நேர்மைதான், எதிர்கால ஹஜ் புனிதப் பயணிகளின் அச்சத்தைப் போக்கும். உலகிலுள்ள முக்கியமான இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல் குழுவை சவூதி அரேபிய அரசே தனது தலைமையில் ஏற்படுத்த முற்படுமானால், அதைவிடச் சிறப்பு வேறொன்றுமில்லை!
No comments:
Post a Comment