By ஆசிரியர்
First Published : 24 September 2015 01:19 AM IST
ஒவ்வொரு தொழிலாளிக்கும், கடைக்கும் வார விடுமுறை கட்டாயமாக உண்டு. அதேபோல, மகிழுந்துகளுக்கும் (கார்) ஒரு நாள் வார விடுமுறை விடுத்தால் என்ன என்ற எண்ணம் இலேசாகத் தோன்றி, அழுத்தமாகப் பரவியதன் விளைவாக, ஹரியாணா மாநிலத்தில் குர்கான் நகரில் செப்டம்பர் 22-ஆம் தேதி மகிழுந்து ஓய்வு நாள் (CAR FREE DAY) அனுசரிக்கப்பட்டது.
முதலில் இது வெற்றி பெறுமா என்ற அவநம்பிக்கை இருந்தாலும், கடந்த செவ்வாயன்று விடுக்கப்பட்ட அழைப்புக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. பல லட்சம் மகிழுந்துகள் புழங்கிய சாலைகளில் அன்றைய தினம் மொத்தம் சுமார் 10,000 மகிழுந்துகள் மட்டுமே காணப்பட்டன. குர்கான் நகரின் காற்று மாசு அளவு, அன்றைய தினம் வழக்கத்தைவிட 21% குறைவாக இருந்தது. பேருந்துகளில் வழக்கத்தைவிட ஒன்றரை மடங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன. ரயில்களில் வழக்கத்தைவிட 10% பயணிகள் அதிகமாக இருந்தனர்.
மகிழுந்துகளின் நெரிசல் சாலைகள் முற்றிலும் இல்லாமல் இருந்தது என்பது மட்டுமன்றி, பல்வேறு வணிக வளாகங்களின் தரைத்தளத்தில் நிறுத்தப்படும் மகிழுந்துகளின் எண்ணிக்கை மிகச் சிலவாகவே இருந்தன. வழக்கமாக 1,500 மகிழுந்துகள் நிறுத்தப்படும் முக்கிய நகர்ப் பகுதியில், அன்றைய தினம் மகிழுந்துகளே இல்லாமல் வெற்றிடமாக இருந்தது.
அதுமட்டுமல்ல, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பெட்ரோல், டீசலை நிரப்பின. மகிழுந்துகள் மிகமிக அரிதாகவே இருந்தன. இதனால், பெட்ரோல் விற்பனை பாதியாகக் குறைந்தது. இது விற்பனை நிலையத்துக்கு தனிப்பட்ட இழப்பாக இருப்பினும், தேசத்துக்கு மிகப் பெரிய லாபம்தான்.
கணினி நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் குர்கானில் பல லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவோரும்கூட பேருந்து, மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தினர். பலர் சைக்கிளில் பயணம் செய்தனர். நகரின் காவல் துறை ஆணையர் நவதீப் சிங், போக்குவரத்துக் காவல் ஆணையர் பாரதி அரோரா ஆகியோருடன் காவலர்களும்கூட சைக்கிளில் அலுவலகம் வந்தனர்.
மகிழுந்து ஓய்வு நாள் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, குர்கானில் அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மகிழுந்து ஓய்வு நாளாக அனுசரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தில்லியில் அடுத்த மாதம் அக்டோபர் 22-ஆம் தேதி இதேபோன்று மகிழுந்துகளுக்கு ஓய்வு நாள் அனுசரிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, வேறு நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வோர் ஊரிலும் வாரத்தில் ஒரு நாள், பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்படுவது பல காலமாக தொடர்ந்து வரும் வழக்கம். அத்தகைய நாள்களில் மிகச் சில கடைகளே திறந்திருக்கும். சில ஊர்களில் இந்த வார விடுமுறை தொழிலுக்கு ஏற்றபடி மாறியிருப்பதும் உண்டு. தங்க நகைக் கடைகள் இருக்கும் பகுதிகளுக்கு ஒரு நாளாகவும், வெல்ல மண்டி, அரிசி மண்டி, வெங்காய மண்டி ஆகியவற்றுக்கு வேறொரு நாளும் வார விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுவது உண்டு. இதெல்லாம் அந்தந்த ஊரின் பழக்க வழக்கம், அப்பகுதியின் வாரச் சந்தையைப் பொருத்து அமையும். சில ஊர்களில் சரக்கு லாரிகள் நிறுத்த இடமில்லாததால் ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் ஒரு நாள் விடுப்பு என வணிகர்கள் அவர்களுக்குள்ளாகவே தீர்மானித்துக்கொள்வது உண்டு. இதுபோன்ற நடைமுறைதான் தற்போது மகிழுந்துகளுக்கு ஓய்வு நாள் அனுசரிக்கும் திட்டமும்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையில் 7.95 லட்சம் வீடுகளில் மகிழுந்துகள் இருக்கின்றன. தற்போது இந்த எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கக் கூடும். இவை தவிர, சென்னைக்கு வெளியூர்களிலிருந்து நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மகிழுந்துகள் வந்து செல்கின்றன. வாரத்தில் ஒருநாள் சென்னையில் மகிழுந்து ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டால், வெளியூர்களிலிருந்து வரும் மகிழுந்துகள் மற்றும் உள்ளூரில் இன்றியமையாத் தேவைக்காக இயங்கும் மகிழுந்துகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருக்கும். பத்தில் ஒரு பங்காக மகிழுந்துகளின் எண்ணிக்கை குறையும்போது சென்னை சாலைகளில் நெரிசல் நிச்சயமாகக் குறைந்திருக்கும்.
இவ்வாறு மகிழுந்து ஓய்வு நாள் அனுசரிக்கும்போது, காரில் செüகரியமாகச் சென்று பழக்கப்பட்ட வசதி படைத்தோரும், உயர் அதிகாரிகளும் நெரிசல் இல்லாத பொதுப் போக்குவரத்தையே விரும்புவர். மகிழுந்து ஓய்வு நாளில் அதிக எண்ணிக்கையில் கூடுதலான பேருந்துகளை இயக்கி, பொதுப் பயணத்தை இலகுவாக்குவதன் மூலமும், புறநகர் ரயில் போக்குவரத்தில் கூடுதல் பெட்டிகளை, குறிப்பாக, முதல் வகுப்புப் பெட்டிகளைக் கூடுதல் எண்ணிக்கையில் இணைப்பதன் மூலமும் பலரையும் பொதுப் போக்குவரத்துப் பயணத்துக்கு ஈர்க்க முடியும்.
மகிழுந்துகளுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தால், சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் புத்துணர்வை ஏற்படுத்த முடியும். அதேநேரத்தில், இந்த முயற்சி வெற்றி பெற்று, மக்கள் பெருமளவில் பொதுப் போக்குவரத்தை நாடும்படி செய்வதற்குப் பேருந்துகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, வசதிகளும் அதிகரித்தாக வேண்டும். பேருந்துகளின் காலம் மேலைநாடுகளில் அநேகமாக முடிந்துவிட்டது. சொகுசு சிற்றுந்துகள்தான் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. மகிழுந்துகளில் பயணிக்கும் வசதியுடனான சொகுசு சிற்றுந்துகளும், மெட்ரோ, புறநகர் ரயில்களும் அதிக அளவில், சற்று அதிகமாகவே இருந்தாலும்கூட, இயக்கப்பட்டால்தான் போக்குவரத்து நெரிசலும் குறையும். சுற்றுச்சூழல் மாசும் கட்டுக்குள் இருக்கும்.
No comments:
Post a Comment