சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர்
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.
அவரது உடல் தியாகராயநகர் ராமநாதன் தெருவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி ராதிகா செல்வி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பிரமுகர்கள்-வியாபாரிகள்
தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அவரது மகன் பா.சிவந்தி ஆதித்தன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க நிர்வாகி அலிமா சம்சுகனி மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வியாபாரிகள், உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
யோக ரத்னத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார் குடியிருப்பு. இவர் 1969-ம் ஆண்டு சென்னை ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர் கடையை தொடங்கினார். இவர்களது சகோதரர்கள் ராஜரத்னம், நவரத்னம், செல்வரத்னம். இவர்களின் அயராத உழைப்பினால் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சென்னையில் புகழ்பெற தொடங்கியது.
தகனம்
யோகரத்னத்தின் சகோதரர்கள் செல்வரத்னம், நவரத்னம் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பே மரணம் அடைந்து விட்டனர். யோகரத்னத்துக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும், பல்லாக்கு துரை, சண்முகதுரை, பொன்துரை, சிவா அருள்துரை ஆகிய 4 மகன்களும் உள்ளனர்.
யோகரத்னம் மரணம் அடைந்ததால் ரங்கநாதன் தெருவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று பிற்பகல் 3 மணிக்கு யோக ரத்னம் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
சரத்குமார் இரங்கல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் யோகரத்தினம் மறைவு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. மிகவும் வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்து சிறிய அளவிலிருந்து வணிகம் தொடங்கி இன்று நுகர்வோர் பொருட்களின் விற்பனை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியிருக்கும் அளவிற்கு உய்ர்ந்திருக்கும் மாமனிதர் அவர். கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததோடு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் அளவிற்கு வரலாறும் படைத்திருக்கக்கூடிய சாதனையாளரும் ஆவார்.
அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்கள் மற்றும் அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment