Monday, September 7, 2015

வாசகர் வாசல்: பெண் என்னும் பெரும் சக்தி!..கட்டுரையாளர் தனசீலி திவ்யநாதன்

Return to frontpage

அரை நூற்றாண்டுக்கு முன்னால் பெண்ணுக்குக் கல்வி வாய்ப்பு அத்தனை எளிதல்ல. ‘பேதைமை’ (அறிவின்மை) பெண்ணுக்கு அழகு என கருதப்பட்டது. மெல்ல மெல்ல பால் கணக்கு, கடிதம் எழுதத் தெரிந்தால் நல்லது என்று ஆரம்பக் கல்வி பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டது. பெண் பருவம் அடையும்வரை படிக்க அனுப்புவது, உள்ளூரில் உள்ள பள்ளியில் எந்த வகுப்புவரை உள்ளதோ அதுவரை படிக்க அனுப்புவது என்ற நிலை மாறி சில சேவைத் துறைசார் படிப்புகளுக்குப் பெண்கள் கல்லூரிகளுக்கு அனுப்பபட்டனர். பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி போன்றவையே பெண்களுக்கான படிப்புகளாக இருந்தன. தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், பாதுகாப்புத் துறைகள் அவர்களுக்கு மிக அன்னியமான துறைகள். பெண்களின் அதிகபட்ச லட்சியம் ஆசிரியர் அல்லது செவிலியர் ஆவது.

ஏற்றம் தந்ததா கல்வி?

கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் பெண்களின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. இதில் கல்வி பெரும்பங்கை வகிக்கிறது. குழந்தைத் திருமணம் தீவிரமாகத் தடைசெய்யப்பட்டதால், குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்புவரை வந்த பெண்கள், பின்னர் கல்லூரிகளில் நுழைந்தனர். இதன் விளைவாகப் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுத் துறைகளில் நுழைந்தனர். கலைக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமாகத் திறக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள், பெண்கள் தொழில்நுட்ப அறிவு பெற வழிசெய்தன. கனவுகளோடு, லட்சியத்தோடு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்ற பெண்களில் பலர் திருமணம், குடும்பம் என செட்டிலாகிவிட்டனர். பலர் இதனால் கனவு காண்பதே இல்லை.

பெண் வாழ்வின் இலக்கு என்ன?

என்ன கல்வி பயின்றாலும், அது திருமண நோக்குடனேயே பயிலப்படுகிறது. ஒரு காலத்தில் பெண்ணைப் படிக்கவைத்துவிட்டால், படித்த மாப்பிள்ளை பார்க்க வேண்டும். ஒன்று படித்த மாப்பிள்ளை அல்லது அதிக சீர்செய்ய வேண்டும் என்ற கவலை பெண் கல்விக்குத் தடையாக இருந்தது. காலப்போக்கில், படித்த மாப்பிள்ளைகள், படித்த பெண்களைத் தேடுகின்றனர் என்பதால் பெண்ணுக்குக் கல்வி தரப்பட்டது. பிறகு வேலைக்குப் போகும் பெண்களுக்கே திருமணச் சந்தைகளில் மதிப்பிருக்கிறது என்பதால் பெண் வேலைக்குப் போகும் சுதந்திரம் பெற்றாள். கனவுகளோடு கல்லூரி முடித்து தேர்வுகள், நேர்காணல்கள் என எல்லாவற்றையும் கடந்து வேலையில் சேர்ந்து தன் சொந்தக் காலில் பெண் நின்றாள். வேலை தந்த மதிப்பு, சுயசார்பு, சுதந்திரம் என்பவற்றை அவள் அனுபவிக்கும் முன்பே, ஐயோ வயதாகிவிட்டதே, திருமணம் செய்துவைக்க வேண்டுமே என்ற கடமை பெற்றோர் கண்முன்னே வந்துவிடுகிறது. திருமணத்தின் முதல் நிபந்தனையே பெண் வேலையை விட்டுவிட்டுக் கணவன் வீட்டுக்கு வருவது அல்லது கணவன் இருக்கும் ஊருக்கு மாற்றலாகி வருவது. பெண்களில் பெரும்பாலானவர்களின் பதவி உயர்வு, தலைமைக் கனவுகள், லட்சியங்கள் போன்றவை திருமணம், குடும்பம், தாய்மை ஆகியவற்றில் கரைந்து காணமல் போகின்றன.

லட்சியத்தை அடைய வழி என்ன?

திருமணம் ஆண்-பெண் என இரு பாலருக்கிடையே நிகழும் செயல் என்றாலும், ஏன் பெண்களின் கனவுகளும் லட்சியங்களுமே கலைக்கப்படுகின்றன? காரணம், நம் குடும்ப அமைப்பு பெண்ணையே ‘இல்லத்து அரசி’யாகப் பார்க்கிறது. குடும்ப வாழ்வு பெண்ணுக்கு உரியதாகவும், பொதுவாழ்வு ஆணுக்கு உரியதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். சோறு பொங்கி, பரிமாறி, கணவன், குழந்தைகளைப் பேணுவதோடு பெண்கள் வாழ்வு முடிந்து போவது நியாயமில்லை. பல்வேறு காரியங்களில் மேலைநாடுகளைப் பின்பற்றும் நாம், பெண்களின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரச் சில மாற்றங்களையாவது செய்ய வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குவது, அனைத்துப் பணிகளிலும் இருவருக்கும் சம வாய்ப்புகளைச் சாத்தியப்படுத்துவது, பெண்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பது, வீட்டு வேலைகளிலிருந்து அவர்களை விடுதலை செய்வது, அல்லது பகிர்ந்துகொள்வது, குழந்தை வளர்ப்பைக் கணவன்-மனைவி இருவருக்கும் பொதுவாக்குவது, நமது குடும்ப அமைப்புகளை ஆண் அதிகாரம் மையம் கொண்ட நிலையிலிருந்து இருவரும் சுதந்திரமும் பொறுப்பும் கொண்ட அமைப்புகளாக மாற்றுவது, பள்ளிக் கல்வி மட்டுமே சாத்தியப்படும் பெண்களுக்கு பள்ளிகளிலேயே திறன் மேம்பாட்டை, தொழில் கல்வியைத் தருவது, பெண்கள் அதிகம் ஈடுபடும் விவசாயம், சிறுதொழில்கள், நெசவு போன்றவற்றில் அரசு அதிக கவனம் செலுத்துவது, பெண்களுக்கு ஏற்ற, வசதிப்பட்ட நேரங்களில் பெண்களுக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்வது, பெண்கள் தொழில் செய்யும் இடங்களிலேயே குழந்தைகள் காப்பகங்களை அமைப்பது, பள்ளிகளில் பள்ளி நேரத்துக்குப் பிறகு பெற்றோர் வேலை முடிந்து வரும்வரை குழந்தைகளைப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்வது என்று பெண்களின் வாழ்வில் மாற்றத்தை விதைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

கனவுகள் மெய்ப்படும் காலம்

திருமணம் என்ற இலக்கைக் கடந்து பெண்கள் தங்களுக்கான கனவுகளைக் காண வேண்டும். அதை நோக்கிய திட்டமிடலும் தொடர் பயணமும் வேண்டும். சாதனைப் பெண்களை முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும். தன்னை அலங்கரித்து, தொலைக்காட்சியில் தொலைத்து, லட்சியமின்றி வாழும் வாழ்வுக்கு முடிவு காண வேண்டும். இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சரிப்பாதி இனமான பெண்ணினம் முடங்கிக் கிடந்தால், நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படவே செய்யும். பெண்களின் முன்னேற்றம், பெண்ணை உயர்த்துவதோடு, ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை நிச்சயம் உயர்த்தும். பெண்களே, உங்களுக்கான கனவுகளை நீங்களே காணுங்கள், அது மெய்ப்படப் பயணம் செய்யுங்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024