Tuesday, September 29, 2015

குறள் இனிது: எது கேட்டாலும் கிடைக்குமா? ..... சோம.வீரப்பன்

Return to frontpage

சென்ற கோடை விடுமுறையில் எனது இரு பேரன்கள் பெங்களூரில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். 3 வயதும் 2 வயதும். ‘நீங்கள் கொஞ்சம் இவர்களுக்கு ஊட்டி விட்டால் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்’ என்று வீட்டில் இருப்பவர்கள் சொல்ல, நானும் நமக்குத்தான் இது 30 வருடங்களுக்கு முன்பே பழக்கமானதாயிற்றே என்று ஏற்றுக்கொண்டேன். கிண்ணத்தில் பிசைந்த சாதத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் மாயமானார்கள்.

நானும் பேரன்களை, டைனிங் டேபிளில் உட்கார வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். நல்ல பிள்ளைகளாக அவர்கள் முதல் வாயை வாங்கிக் கொண்டதும் எனக்குப் பெருமை, பெருமிதம், பெருமகிழ்ச்சி! ஆனால் அப்புறம் தான் ஆரம்பித்தது கச்சேரி!!. வாயில் வாங்கியதைச் சாப்பிடாமல் இருவரும் வெகுநேரம் வைத்து இருந்ததால், நானும் தமிழில், ஆங்கிலத்தில், இந்தியில், கன்னடத்தில் கெஞ்சிப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை! ‘அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஏதேனும் செய்யுங்களேன்’ என அசரீரியாக என் மனைவியின் அறிவுரை கேட்டது.

மொபைலில் டெம்பிள் ரன் பார்ப்பார்கள் என்று என் சிற்றறிவுக்கு உடனே பொறி தட்டியது. அதைப் போட்டபின் வெற்றிகரமாக இரண்டு வாய் ஊட்ட முடிந்தது! ஆனால் அந்த வால்களோ, மொபைலையே பந்து போல் போட்டு விளையாடத் தொடங்கினார்கள். சாதாரணமாக எனது மொபைலை யாரையும் தொடவே அனுமதிக்காத நான், குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று! பின்னர் அதுவும் போரடித்து விட்டதால், எனது சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். நானும் சரியென்று பெரிய நோட்டுக்களை மறைத்துவிட்டு 10 ரூபாய் நோட்டு இரண்டு கொடுத்தேன்.

அவர்களோ 100 ரூபாய் நோட்டுக்கள்தான் வேண்டுமென்று அழுது வாங்கி மேஜையில் வைக்க அவை காற்றில் பறக்கலாயின! எனக்கு முன்பிருந்த சந்தேகம் வலுவானது.

இந்தப் பயல்கள் காலையில் நாம் கொடுக்க மறுத்ததை எல்லாம் இந்த சாப்பாட்டு வேடிக்கையை வைத்து பழி வாங்குகிறார்கள் என்று புரிந்து விட்டது. என் மனைவியோ ‘என்ன சும்மா பிள்ளைகளை முறைக்கிறீர்கள்? உங்கள் பணம் முக்கியமா அல்லது அவர்கள் சாப்பிடுவது முக்கியமா?’ என ஒரு தத்துவக் கேள்வியை முன்வைத்துவிட்டார். பின்னர் என்ன? தலைமுடியைக் கலைப்பது, தண்ணீரைக் கொட்டுவது, மேஜையிலேயே பேனாவால் எழுதுவது போன்ற எல்லா சேட்டைகளையும் நான் பொறுத்துகொள்ள வேண்டியதாயிற்று!

சாப்பிட மறுப்பது என்பது குழந்தைகளிடம் உள்ள அணு ஆயுதம். அதைக் கண்டு எல்ேலாரும் நடுங்குவார்கள் என குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கிறது! காரியத்தைச் சாதித்துக்கொள்ள கெஞ்சுதல், மிரட்டுதல் எனப் பல வழிகள் உண்டு. ஆனால் இவற்றைச் சரியான சந்தர்ப்பத்தில் கையாள வேண்டும். நாம் இதை குழந்தைகளிடம் இருந்து கூடத் தெரிந்து கொள்ளலாம்! உரிய கருவிகளுடன், ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல் என்பது உண்டா என்கிறார் வள்ளுவர்!!

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின் -குறள்:483

somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024