Wednesday, September 30, 2015

பொறியியல் கல்லூரிகளுக்கு "ரேங்கிங்' நடைமுறை அறிமுகம்

Dinamani


By நமது நிருபர், சென்னை,

First Published : 30 September 2015 02:53 AM IST


நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
இந்த நடைமுறை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.mhrd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு வெளியிடப்படும். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த துணைக் குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் ஆண்டில், துணைக் குழு ஒன்று இந்த தரவரிசைப்படுத்தும் நடைமுறைகளை மேற்கொண்டு பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது. அதன் பிறகு, இதற்கென தனி அமைப்பு அல்லது வாரியத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது. இரண்டு பிரிவுகளின் கீழ் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
அதாவது தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் "ஏ' பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும்.
பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் "பி' பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும்.
தரவரிசைப்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு கல்லூரியும் மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன.
அதாவது, கல்லூரியில் உள்ள கற்பித்தல், கற்றல் வளங்கள், ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீடுகள், பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்பு முகாமால் மாணவர்கள் பெற்ற பலன், வெளி மாநில, வெளிநாட்டு மாணவர்கள், மாணவிகள், பின்தங்கிய மாணவர்களின் எண்ணிக்கை என்பன உள்ளிட்ட விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
2 ஆண்டுகளுக்குத் தடை
இந்தத் தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து பெறப்பட்டு, மத்திய அரசின் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தரவரிசைப் படுத்தப்படும்.
இதற்கென கல்லூரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வு செய்து கல்லூரி பதிவேடுகள், கணக்குத் தணிக்கை விவரங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் அந்த குழுவுக்கு அளிக்கப்படும்.
மேலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் கல்லூரிகள் சார்பில் அளிக்கப்படும் அனைத்து விவரங்களும், அந்தந்த கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்க அறிவுறுத்தப்படும்.
இந்தத் தகவல்களில் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை அல்லது போலியானவை என்பது கண்டறியப்பட்டால், அந்தக் கல்லூரி ரேங்கிங் நடைமுறையில் பங்கேற்பதிலிருந்து 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். அதோடு, சம்பந்தப்பட்ட கல்லூரியின் முறைகேடு குறித்த விவரமும் ரேங்கிங் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024