Monday, September 21, 2015

எல்லாம் ஞாபகம் இருக்கா?

Return to frontpage


டாக்டர் எம்.ஏ.அலீம்


உலக அல்செய்மர் நோய் நாள் செப். 21

மனக் கணக்கு போடுவதில் குழப்பம், சமையலில் உப்பு போட்டோமா - இல்லையா என்ற சந்தேகம், வீட்டைப் பூட்டிவிட்டு வந்தோமா என்ற குழப்பத்துடன் கூடிய சந்தேகம் போன்றவை எல்லாம் எப்போதாவது நடந்தால் பரவாயில்லை, பிரச்சினையும் இல்லை. இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

l டிமென்சியா எனப்படும் மூப்புமறதி நோய் 60 வயதுக்கு மேல் வரக்கூடிய நோய். இவர்களில் 60 -70 சதவீதம் பேர், அதன் வகைகளில் ஒன்றான அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

l வயதானவர்களுக்குத்தான் அல்செய்மர் நோய் ஏற்படுகிறது. மனித வாழ்நாள் அதிகரிப்பால், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அல்செய்மர் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

l உலக அளவில் அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் ஒருவர் இந்தியர். இந்தியாவில் 50 லட்சம் அல்செய்மர் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030-ல் இரு மடங்காகும் வாய்ப்பு உள்ளது.

l சின்ன சின்ன விஷயங்களில் ஞாபகம் தப்பிப்போவதுதான் இந்த நோய்க்கு ஆரம்ப அறிகுறி. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு மறந்துவிடுவார்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள் 60-க்கு வயதுக்கு மேல் தெரிய அதிக வாய்ப்பு உண்டு.

l அல்செய்மர் நோய் தீவிரமடையும் போது, பாதிக்கப்பட்டவர் ஓர் இடத்துக்குத் தனியாகப் போய்விட்டுத் திரும்பி வரமுடியாது. துணிகளைப் பீரோவில் வைப்பதற்குப் பதிலாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார்கள். குளியலறைக்குச் செல்வதாக நினைத்துக்கொண்டு சமையலறைக்குப் போவார்கள். காலை, மாலை நேரம் குறித்த குழப்பம் ஏற்படும். திடீரென எந்த ஊரில் இருக்கிறோம், யாருடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவார்கள். காலையில் என்ன சாப்பிட்டோம் என்று ஞாபகம் இருக்காது. உறவினர்களின் முகத்துக்குப் பதிலாகக் குரலை வைத்து அடையாளம் காண்பார்கள். பாதிப்புகளை இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நோய் முற்றும்போது நெருங்கிய சொந்தங்களைக்கூட மறந்துவிடுவார்கள்.

l அல்செய்மர் நோய் யாருக்கு யாருக்கு வரும்? வயதானவர்களுக்கு வயது மூப்பால் வரும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள், வாத நோய் ஏற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

l ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, கொழுப்புச்சத்துள்ள உணவைத் தவிர்ப்பது, மதுப்பழக்கத்தைக் கைவிடுவது, தலையில் காயம் ஏற்படாமல் இருக்கத் தலைக்கவசம் அணிந்துகொள்வது போன்றவற்றைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

l உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம், அறிவைத் தூண்டக்கூடிய சுடோகு, புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவை மூலம் அல்செய்மர் நோய் வராமல் தடுக்கலாம்.

l சமூகத்தில் முதியவர்களுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முதியவர் களுக்கு ஏற்படும் அல்செய்மர் நோய் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. நோய் பற்றி விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையில் செப்டம்பர் 21 உலக ஞாபகமறதி நோய் நாள் (World Alzheimer's Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்து ‘எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’.

கட்டுரையாளர், மூளை நரம்பியல் நிபுணர்



தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024