Saturday, September 12, 2015

உலகின் மிகப் பழமையான சைவ உணவகத்தில் ஆவி பறக்கும் சாம்பார் வடை!

vikatan.com

வடை என்பது நம் வாழ்வியலில் பல்வேறு பரிணாமங்களில் கலந்து விட்ட ஒரு உணவு. தெருவோரக் கடைகளில் தேநீருடன் எடுத்துக் கொள்கிற நொறுவையிலிருந்து, பெருவிருந்துகளில் பரிமாறப்பட வேண்டிய முக்கிய அடையாள உணவு என்கிற அந்தஸ்து வரை வடையின் வடிவங்கள் நம் உணவுத் தளத்தில் அதிகம். அதன் பொன் நிறமும், முறுகலான மேனியும், உதிர்க்கப்படும்போது அவிழ்கிற வெண்மையும், இளஞ்சூட்டில் வாயில் இடும் போது அது கரையும் சுகமும் மானிட இனத்தின் சிறு சிறு சுவர்க்கங்களில் ஒன்று.

அத்தகைய வடையின் பெருமை ஸ்விட்சர்லாந்து வரை அறியப்பட்டு அனுபவிக்கப்படுகிறதென்று சொன்னால் அது மிகையல்ல. 

2012 ஆம் வெளியிடப்பட்ட ’கின்னஸ்’ புத்தகத்தில், ‘இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பழமையான சைவ உணவகம்’ என்று இடம்பெற்ற உணவகம் தான் ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள, ஜீரிச் நகரில் அமைந்துள்ள ‘ஹாஸ் ஹில்ட்ல்’

சைவ உணவுப் பழக்கத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் உலகெங்கிலுமுள்ள சிறந்த சைவ உணவுகளைத் தயாரித்து வழங்குவதில் நூறாண்டுகளுக்கும் மேலாக சாதனை நிகழ்த்தி வரும் இவ்வுணவகம் இந்திய உணவுகளுக்குத் தனிச்சிறப்பு மிக்க இடமளித்து வருகிறது.


1898 இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த உணவகம், உலகச் சைவ உணவின் சின்னமாக இன்று திகழ்வதன் பின்னால் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

இந்த உணவகம் திறக்கப்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் சைவம் மட்டுமே உண்ணுபவர்களை ‘புல்தின்னிகள்’ என்று சொல்லிக் கேலி செய்து கொண்டிருந்த வழக்கம் இருந்தது. அந்நிலையில், போதிய வரவேற்பில்லாமல் தவித்து கொண்டிருந்த இந்த உணவகத்தில் 1903 ஆண்டு ஹில்ட்ல் என்பவர் மேலாளராகப் பதவியேற்றார்.

அதற்கு முன் தையல்காரராக இருந்த ஹில்ட்ல், இனம்புரியாத ஒருவித நோயால் தாக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களை நாடியும் பயனில்லாது போன நிலையில், ஒரு இயற்கை மருத்துவரைச் சந்தித்திருக்கிறார் ஹில்ட்ல். அன்னார், அசைவ உணவு உட்கொள்வதை நிறுத்தினாலே இந்நிலை குணமாகிவிடும் என்று சொல்ல அங்ஙனமே ஹில்ட்லும் சைவத்துக்கு மாறினார். ஆறே மாதங்களில் குணமடைந்த ஹில்ட்ல் அக்கணம் முதல் தீவிர சைவ உணவாளராகவும், அந்நெறி பரப்புநராகவும் மாறி இருக்கிறார். இவரது வாழ்வில் நடந்த இச்சம்பவத்தின் பின்னால் சைவ உணவு குறித்த பார்வை ஸ்விஸ் மக்களிடையே மெல்ல மாறத் துவங்கியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்குப் பின், அவரது மருமகள் ஒருமுறை இந்தியா வந்தபோது நம் நாட்டில் வழங்கப்படும் சுவைமிக்க சைவ உணவு வகைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறார். அதன் விளைவாகவே, நம் நாட்டு உணவுகளை அங்கும் அறிமுகப்படுத்தலாமே என்ற எண்ணம் ஏற்பட்டு அவர் ஆரம்பித்த அந்த முயற்சி இன்று உலகம் வியக்கும் வண்ணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

நம் முன்னாள் பிரதமர் மொரார்ஜீ தேசாய் உண்ட பெருமை இந்த உணவகத்திற்கு உண்டு. அது மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் வாடிக்கையாளர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜூரிச் நகரிலுள்ள இந்தியர்களுக்கு இது சொந்த வீட்டுச் சமையலறையாகத் திகழ்கிறது. சாம்பார் வடை, பாலக் பன்னீர், மெட்ராஸ் தாலி (முழு சாப்பாடு), பொறியல்கள், சட்னி என நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வண்ணமாக அமைந்திருக்கும் இந்த ஸ்விட்சர்லாந்து உணவகம், உலகை இணைக்கும் உந்துசக்தி உணவு என்ற உண்மையை உணர்த்தும் காலக்குறியீடு.

 ச.அருண்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024