Saturday, September 12, 2015

இது ‘ஜாக்பாட்’ வெற்றி தான்

தமிழ்நாட்டில் பொதுவாக பெரிய வெற்றியை அடைந்தால் ‘ஜாக்பாட்’ வெற்றி என்பார்கள். அதுபோல, ஒரு ‘ஜாக்பாட்’ வெற்றியை 2 நாட்களாக தமிழக அரசால் சென்னையில் நடந்து முடிந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு அடைந்திருக்கிறது. இந்த மாநாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில்
2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய்க்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கூட்டுத்தொகையைவிட இது அதிகம்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. தொழில் அமைதி மிகுந்த மாநிலம் இது. இந்த மாநிலம் அறிவுசார் மையமாகவும் திகழ்கிறது. 1,900 கல்லூரிகளுக்குமேல் இருக்கிறது. எரிசக்தி, ஜவுளி, பயோ டெக், மருந்து உற்பத்தி, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, உணவு மற்றும் வேளாண் வர்த்தகம், வானியல், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், கனரக என்ஜினீயரிங், எலக்ட்ரானிக், ஹார்டுவேர்ஸ் போன்ற பல தொழில்களுக்கு முதலீட்டாளர்களின் சொர்க்கமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இந்த நிலையில், நடந்து முடிந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்சு, இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகள் பங்கு நாடுகளாக தங்களை பதிவு செய்திருந்தன. 15 நாட்களில் இருந்து தொழில்முனைவோர் வந்திருந்தனர். தொடக்கநாள் உரையில் இந்த மாநாட்டுக்கு வந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பிக்கையூட்டும், உற்சாகமூட்டும் உறுதிமொழிகளை முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது, இவ்வளவு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஒரு உந்துகோலாக அமைந்திருந்தது.

பொதுவாக தொழில்களெல்லாம் சென்னையை சுற்றியே அமைக்கப்படுகின்றன. ஆனால், தூத்துக்குடி துறைமுக வசதி உள்பட விமான நிலையங்கள், ரெயில்வே, சாலை, மின்சார வசதிகள் மற்றும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியே இல்லாத நிலைதான் இருக்கிறது. இந்த முதலீட்டாளர்கள் மாநாடும் அதேநிலையை உருவாக்கிவிடக்கூடாது என்ற உணர்வில், மாநாட்டை தொடங்கிவைக்கும்போதே, தென்மாவட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் என்று முதல்–அமைச்சர் உறுதி அளித்தார். தென்மாவட்ட மண்ணின் சொந்தக்காரரான எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார், 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம் கோடியில் மதுரை, திருநெல்வேலியில் வளர்ச்சி மையங்கள் அமைக்க முதலீடு செய்யப்படும் என உறுதி அளித்து தொடங்கி வைத்தார். கிட்டத்தட்ட 50 சதவீதம் தென்மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்திடப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது தொழில் முதலீட்டாளர்கள் தங்களின் சம்மதத்தை வெளிப்படுத்தியது. இனி தமிழக அரசுதான் அவர்களோடு தொடர்பு கொண்டு, அவர்களுக்கு முதல்–அமைச்சர் உறுதி அளித்தது போல, 30 நாட்களுக்குள் அனைத்து ஒப்புதல்களும் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இந்த 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாயில், 50 சதவீத முதலீடுகளுக்கான
பணிகள் உடனடியாக தொடங்கிவிட்டால் கூட, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வேலைவாய்ப்பு அபரிமிதமாக பெருகிவிடும். பொருளாதாரம் மேம்படும், உற்பத்தி பெருகும், தனிநபர் வருமானம் மளமளவென்று உயரும். அகில இந்தியாவை மட்டுமல்லாமல், உலகையே தமிழ்நாட்டை நோக்கி பார்க்க வைக்கும். அந்த நன்னாள் விரைவில் வருவது இனி அரசு துறைகளின், அரசு உயர் அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...