Friday, September 4, 2015

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிப்பு

logo

சென்னை,

தமிழகத்தில் 84 சதவீதம் பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு எந்த திட்டத்திற்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஆதார் அட்டை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சிலர் ஆதார் அட்டை விண்ணப்பத்தை எங்கு வாங்குவது?, எப்படி ஆதார் அட்டை வாங்குவது? போன்ற தகவல்கள் தெரியாமல் உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

5.26 கோடி பேர்

தமிழகம் முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணி 2010-ம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது. மொத்த மக்கள் தொகை 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேரில், கடந்த 1-ந் தேதி நிலவரப்படி 5 கோடியே 26 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 39 லட்சம் பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு, மற்ற விவரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி 84 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்துடன் இந்த பணியை நிறைவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியது.

டிசம்பர் வரை நீட்டிப்பு

ஆனால் எஞ்சிய 1 கோடியே 48 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேருக்கு இன்னும் ஆதார் அட்டைகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே டிசம்பர் மாதம் வரை காலஅவகாசம் அளித்து அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். இதற்காக பொதுமக்கள் அவசரப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டியதில்லை.

வசிக்கும் வீடுகள் அருகிலேயே உள்ள ஆதார் அட்டை வழங்கும் முகாம்களுக்கு சென்று முறைப்படி விண்ணப்பித்து பெறலாம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 78 மையங்கள்

தமிழகம் முழுவதும் 522 மையங்களில் இந்த பணி தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்தப்பணியை தீவிரப்படுத்த கூடுதலாக 120 மையங்கள் அமைக்கப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் 640 மையங்களில் இந்தப்பணி நடந்து வருகிறது.

சென்னையில் மண்டல அலுவலகங்களில் உள்ள 10 நிரந்தர மையங்கள் உள்பட 78 மையங்கள் செயல்படுகிறது.

ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையத்துக்கு எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பணி முடிவடைந்து 2 மாதங்களுக்கு பிறகு அவரவர் வீடுகளுக்கு பதிவு தபாலில் ஆதார் அட்டை அனுப்பப்படும்.

ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைந்து போனாலோ அல்லது பெயர் மற்றும் முகவரி தவறாக இருந்தாலோ அவற்றையும் ஆன்-லைனில் திருத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024