Saturday, September 5, 2015

மறதி - சோர்ந்த மனத்தின் நழுவும் நினைவுகள்!

Dinamani




பொழுது விடிஞ்சுது! பெட் ரூம் டீபாய்ல, பாத்ரூம் சிங்குல, டைனிங் டேபிள் மேல, ஜன்னல் கட்டைல - எங்கேயும் இல்ல! எங்க கழட்டி வெச்சேன்? மூக்குக் கண்ணாடிய தேடறதே வேலையாப் போச்சு. 'என்ன தேடறீங்க?' என்று கேட்ட மகளிடம், 'மூக்குக் கண்ணாடி' என்றேன். சிரித்துவிட்டு, என்னைத் தள்ளிக்கொண்டுபோய் நிலைக் கண்ணாடி முன் நிறுத்தினாள். என் மூக்கின் மேலேயே கண்ணாடி இருந்தது!

இது ஒரு வகை மறதி. வயதாகும் எல்லோருக்கும் வருவது.

காலையில், முதலில் என்னைச் சந்திக்க வந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை. கலைந்த தலைமுடி, முகம் முழுக்க கவலையின் ரேகைகள், கண்ணில் ஓர் அச்சம் கலந்த எதிர்பார்ப்பு - மெள்ள உள்ளே வந்து, என் எதிரில் அமர்ந்தார்.

‘கொஞ்ச நாளா எல்லாம் எனக்கு மறந்துடுது டாக்டர். காலைல ஏதோ யோசிச்சிக்கிட்டே கடைக்குப் போய்ட்டு வந்தேன் - பேப்பர் வாங்க மறந்துட்டேன். சில சமயங்கள்ல, போற கடையையோ, வீட்டையோ தாண்டி, கொஞ்ச தூரம்கூட மறந்தா மாதிரி போயிருக்கேன் டாக்டர். இது அல்சைமர்ஸ் டிமென்ஷியாவா டாக்டர்?’ என்றார், கவலையுடன்.

இது தேவையற்ற கவலை. மறதி நம்முடன் பிறந்தது. இறுதிவரை உடன் வருவது! நாமும் பேனா, பர்ஸ், வாட்ச் என ஏதாவது ஒன்றை மறதியாக எங்கேயாவது வைத்துவிட்டு, இல்லாத இடத்தில் தேடி அல்லாடுவது தினமும் நம் வீடுகளில் நடப்பதுதான்!

அதுபோலவே வழியில் பார்த்து, முகம் மலர்ந்து, ‘பார்த்து ரொம்ப நாளாச்சு, செளக்கியம்தானே?’ என்று இரண்டு மூன்று நிமிடங்கள் வம்படித்துப் பிரிந்த பிறகு, ‘அவர் யார்?’ என்று வெகுநேரம் நினைவுக் குப்பையில் தேடுவதும் உண்டு!

சில நாட்கள், சில நிகழ்வுகள், சில சந்திப்புகள், சிறு தகவல்கள் என அவ்வப்போது நாம் மறப்பது சகஜம்தான் – அதுவும், ஏராளமான விவரங்களை மூளையில் ஏற்றிவைக்கும்போது, அவற்றில் சில இப்படி நினைவிலிருந்து நழுவி நம்மை சங்கடப்படுத்தும்!

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறதியால் தொலைத்த நல்ல தருணங்கள் - நல்லதொரு வாக்கியம், நல்ல இசை, நண்பனின் சந்திப்பு என ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கும். அதுபோலவே, தீய அல்லது தேவையற்ற ஒரு நிகழ்விலிருந்து, மறதியினால் தப்பித்த அனுபவமும் ஒரு சிலருக்கு இருக்கும்!

ஐம்பது வயதுக்கு மேல், நமக்கு மிகவும் நெருங்கிய சிலரின் பெயர்கள்கூட மறந்துவிடும். முகத்திலிருக்கும் மச்சம், பேசிய பேச்சு, அணிந்திருந்த உடை, சந்தித்த இடம், சந்தர்ப்பம் என அனைத்தும் நினைவில் இருக்கும் - பெயர் மட்டும் ‘சட்’டென்று நினைவுக்கு வராது! சிறிது நேரம் அல்லது சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று ‘அந்த’ப் பெயர் நினைவுக்கு வரும்! இது, மூளையின் தாற்காலிக மறதி சார்ந்த குறைபாடு - யாருக்கும் வரலாம்!

காலச்சக்கரம் சுழலும்போது, மிகப் பழைய நினைவுகள் தொலை தூரம் சென்று, சிறியதாகி, மங்கி, நம்மைவிட்டு மறைந்து விடும் - இது ஒருவகை நிரந்தர மறதி. குழந்தைப் பருவத்து பல நிகழ்வுகள், பிறர் சொல்லக் கேட்கும்போது, நமக்குப் புதியதாகத் தோன்றுவது, இவ்வகை மறதியினால்தான்!

நாமே விருப்பப்பட்டு, ஒட்டுமொத்தமாக ஒன்றை மறத்தல் என்பது நம் வாழ்வில் முடியாது. மறக்க நினைப்பதை, மறக்கவே முடியாது! மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்கக்கூடாது என்று டாக்டர் சொல்ல, அந்த மருந்தைப் பார்க்கும்போதெல்லாம் குரங்கை மறக்க முடியாமல் அவதிப்படும் நோயாளியைப் பற்றிய கதை கற்பனையே என்றாலும், உண்மையில் மனம் விரும்பினாலும், ஒன்றை மறக்கமுடியாதுதான்!

ஏதோ ஒன்று, ஆழ்மனத்தில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்கும் – இங்கே, மறதி தாற்காலிகமானது! நான் மறந்து விட்டேன் என்று கூறுவது உண்மையில் மறதியல்ல - மறக்க விரும்புகிறேன் என்பதே அதன் பொருள்! எனவே, தன்னிச்சையாக மறக்க முயலாதீர்கள், தோற்றுப்போவீர்கள்!

புராணங்களில், மறதி ஒரு சாபமாகவே கருதப்படுகிறது! தான் ஒரு சத்ரியன் என்பதை கர்ணன் மறைத்ததால், முனிவர் பரசுராமரால் ‘பிரம்மாஸ்திர மந்திரத்தை முக்கியமான தருணத்தில் மறந்துவிடுவாய்’ என சாபமிடப்படுகிறான் – அதுவே, அவன் போரில் அர்ச்சுனனிடம் தோற்பதற்கு ஒரு காரணமாகிப்போகிறது.

காதலில் தன்னை மறந்துகிடந்த சகுந்தலை, துர்வாச முனிவரால் சபிக்கப்படுகிறாள் – அந்தச் சாபத்தினால், துஷ்யந்தன் தான் கொடுத்த அடையாள மோதிரத்துடன், சகுந்தலையையும் மறந்துவிடுகிறான்! காதலில் தன்னை மறந்ததால், காதலனால் மறக்கப்படுகிறாள் சகுந்தலை!

திரைக்கதையில் சுவாரசியம் கூட்டுவதற்காக, திரைப்படங்களில் மறதி பல வகைகளில் உபயோகப்படுகிறது! சட்டை, டை எல்லாம் அணிந்து, பேண்ட் போட மறந்து சாலையில் நடப்பது; வாயில் மறதியாக சிகரெட்டுக்குப் பதில் வெடியை வைத்துப் பற்றவைப்பது, சாலை விபத்துகளில் வாழ்வின் ஒரு பகுதியையே மறந்துபோவது போன்ற கற்பனைகள் எப்போதும் உண்டு.

சமீபத்தில் வெளிவந்த, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படம்கூட, தாற்காலிக மறதியின் விரிவாக்கம்தான்! ஆனாலும், நிஜ வாழ்க்கையில் நீண்ட கால மறதியும், பின்னர் நினைவு திரும்புவதும் நிகழ்வது மிக அரிதான ஒன்றே!

வள்ளுவரும், யாரிடத்தும் சினம் கொள்ளாமல் மறந்துவிட வேண்டும் என்கிறார்! ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க - இது மறதி அல்ல; தவறியும் என்று கொள்ளலாம்; அல்லது மறந்த நிலையில், ஒருவகை ‘அம்னீஷியாவில்’ உள்ளபோதும், பிறன்கேடு சூழற்க எனக் கொள்ளலாம். காதலனை மறப்பதால் வரும் துயரம், பிரிவுத் துயரத்துடன் கொடுமையானது - ‘மறப்பின் எவன் ஆவன் மன்கொல்? என்பதில், பிரிவதைவிட மறப்பது மோசமானது என்றாகிறது!

மருத்துவத்தில் மறதி

மறதி தாற்காலிகமானதாகவோ அல்லது நிரந்தரமானதாகவோ இருக்கமுடியும். நினைவுகளைத் தேக்கி வைத்திருக்கும் மூளையின் சில பகுதிகள், முதுமை அல்லது சில நோய்களால் பாதிக்கப்படும்போது, ‘மறதி’ ஏற்படுகிறது.

மறதியினால், புதிய விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகலாம்; அல்லது ஏற்கெனவே அறிந்திருந்த விவரங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியாமலும் போகலாம்!

காலையில் சாப்பிட்ட இட்லியை மறந்துவிடும் சிலர், ஹிட்லர் போர் புரிந்த இடம், வருடம் போன்ற விவரங்களை நன்கு நினைவில் வைத்திருப்பர்!

தலைக் காயம் பட்டவர்களுக்கு, மறதி (அம்னீஷியா) வரும் வாய்ப்புகள் அதிகம். அடிபடுவதற்கு முன்போ அல்லது அடிபட்ட பின்போ, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நடந்தவற்றை மறந்துபோகின்ற அபாயம் உண்டு. காக்காய் வலிப்பு வந்த பிறகு, சிறிது நேரத்துக்கு நடந்தது எதுவும் நினைவில் நிற்பதில்லை!

முதுமையில் தவிர்க்க முடியாதது மறதி!

பொருட்களை இடம் மாறித் தேடுவது, நாள், கிழமை மற்றும் மிகச் சிறிய நிகழ்வுகள் நினைவுகளில் இருந்து நழுவுவது, முதுமையில் நாம் அன்றாடம் காண்பதுதான்.

மூளையின் டெம்போரல், ஃப்ரான்டல் பகுதிகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் மறதி, அல்சைமர்ஸ் போன்ற வியாதிகளைக் குறிக்கக்கூடும் (பிறந்தது முதல் நாம் கற்றவை, அறிந்தவை கொஞ்சம் கொஞ்சமாக நினைவிலிருந்து தொலைவது, டிமென்ஷியா எனப்படும்).

அன்றாட ஏற்படும் சின்னச் சின்ன மறதிகளை, இந்த வியாதிகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. சோர்ந்து, தளர்ந்த மனது எதையும் மறந்துவிடும் தன்மையுடையது! மனதுக்குப் பிடிக்காதது, எளிதில் நினைவிலிருந்து நழுவிவிடும்.

தாற்காலிக மறதி பற்றி ஏதோ எழுத வந்தேன் - மறந்துவிட்டேன். மீண்டும் எழுதுகிறேன், நினைவுக்கு வந்தால்…



டாக்டர். ஜெ.பாஸ்கரன்,
அலைபேசி - 098410 57047

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024