Saturday, September 12, 2015

தேவதைகளை இழந்த வீடுகள்!

Dinamani



By இடைமருதூர் கி. மஞ்சுளா

First Published : 12 September 2015 01:35 AM IST


இந்த உலகுக்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எதையும் கொண்டு செல்லப் போவதுமில்லை. ஆனால், இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் உறவுகளின் அன்பு, பாசங்களிலிருந்து நம்மால் விடுபட முடியவில்லை, பாசத்தில் வழுக்கி விழாமல் இருக்க முடியவில்லை.
÷முன்பு, வானொலியில் "காணாமல் போனவர்கள்' பற்றிய அறிவிப்பு செய்வார்கள். அதில் ஓரிருவர்தான் குறிப்பிடப்படுவர், அதிலும் குறிப்பாக, மனநிலை சரியில்லாதவர், வயதானவர், திருவிழாவில் தொலைந்து போனவர்கள் இப்படியாகத்தான் இருப்பர். ஆனால், தற்போது காணாமல் போனவர்கள் பட்டியலில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்தான் அதிகம் உள்ளனர்.
÷நாம் அன்றாடம் புழங்கும் சிற்சில பொருள்கள் தொலைந்து விட்டாலே உள்ளம் வெதும்புகிறோம். ஆனால், தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை காணாமல் போனால் அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடுபடும்?
÷காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது. 2014-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 3 லட்சம் சிறுவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களில் பெண் குழந்தைகளே அதிகம்.
÷இப்படி நடக்கும் குழந்தைக் கடத்தல் பற்றிய உண்மைச் சம்பவத்தை வைத்துச் சித்திரிக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அண்மையில் வெளியானது. பள்ளிக்குச் செல்லும் சிறுவர்-சிறுமியருக்கு போதை கலந்த இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுத்து, தாய்-தந்தை அழைத்துவரச் சொன்னதாகக் கூறி அவர்களை தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு, அவர்களை முதலில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கி, அவர்களின் கை, கால்களை ஊனப்படுத்தி தெருக்களில் பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் சம்பாதிக்கின்றனர்.
÷மேலும், குழந்தை இல்லாத வெளிநாட்டவருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை குழந்தைகளை விற்பது, உறுப்புகளுக்காகக் கொலை செய்வது, சிறுமிகளை பாலியலுக்குப் பயன்படுத்துவது என இப்படிப் பல சமூக விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
÷இவ்வாறு வெளிநாடுகளுக்குக் குழந்தைகளை விற்கும்போது போலியான தாய்-தந்தைகளை ஏற்பாடு செய்து, போலி ஆவணங்களைக் கொடுத்து இத்தொழிலைச் செய்து வருகின்றனர். அது மட்டுமல்ல, தொழில்நுட்ப வளர்ச்சியால், வலைதளம், இணையதளம் மூலமாகவும் செயல்படும் அளவுக்கு குழந்தைத் திருட்டு பரந்து விரிந்து வருகிறது.
÷குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், "குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் துப்பு துலக்குவதற்கு காவல் துறையினர் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கென காவல் துறையில் தனிப் படையும், சி.பி.ஐ.யில் தனிப் பிரிவையும் உருவாக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இலவசத் தொலைபேசி எண் "1098' திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது. இதே கருத்தையே உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக எந்த அரசும் "தீவிர' நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
÷தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக மகாராஷ்டிரத்தில் 141, உத்தரப் பிரதேசத்தில் 96, தமிழகத்தில் 90, கர்நாடகத்தில் 73, கேரளத்தில் 49, பிகாரில் 28, தில்லியில் 23 எனக் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதைத் தொழில்ரீதியாகச் செய்வோர் நாடு முழுவதும் "நெட்வொர்க்' அமைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், தற்போது விழித்துக் கொண்ட தமிழகக் காவல் துறை, குழந்தைக் கடத்தலைத் தடுக்கத் தனிப் பிரிவை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
÷தமிழ்நாடு குற்றவியல் ஆவணக் காப்பகம் கொடுத்துள்ள தகவலில், "தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 810 குழந்தைக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் 136 பேர், மற்ற அனைவரும் குழந்தைகள். கடந்த நான்கு ஆண்டுகளில் 2,982 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 1,700 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை' என்கிறது.
÷குழந்தைக் கடத்தல் பற்றி தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 44,475 குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் கூறப்பட்டுள்ளது.
÷தமிழ் நீதிநெறி நூல்கள், தர்ம சாத்திரங்கள் யாவும் பஞ்சமா பாதகங்களில் (ஐந்து பாவங்களில்) ஒன்று களவு என்கின்றன. இதில் கொலையும் அடங்கும். இதுபோன்ற பாதகம் செய்பவர்களிடமிருந்து பெற்றோர் தம் பிள்ளைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு, அறிமுகமில்லாத நபர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதையும், இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், யாரிடமும் எதையும் உடனே வாங்கக் கூடாது என்பதையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அதேபோல, பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வுக் கல்வியையும் பிள்ளைகளுக்குச் சிறிது நேரமாவது கற்பிக்க வேண்டும்.
÷இப்படிக் குழந்தைகளை இழந்து தவிக்கும் எண்ணற்ற பெற்றோரின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். "இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து' என்பார் (திருவாசகம்-நீ.வி.பா.9) மணிவாசகர். ஒரு மூங்கில் குழாய்க்குள் சென்ற எறும்பு, இரு பக்கங்களிலும் தீப் பற்றிக் கொண்டால், எப்படி அந்தப் பக்கமும் போக முடியாமல், இந்தப் பக்கமும் போக முடியாமல் தவிக்குமோ, அத்தகைய தவிப்புதான் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோரின் நிலையும்.
காணாமல் போன தங்கள் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியாத நரக வாழ்வே அவர்களுடையது. தவமிருந்து பெற்ற குழந்தை, ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் "தேவதை'தான். இப்படி தேவதைகள் இல்லாத வீடுகள் அதிகரித்து வருவதை உடனடியாகத் தடுத்தி நிறுத்தியாக வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024