Wednesday, September 30, 2015

கைகொடுக்கும் "கட்டுச்சோறு'


dinamani


By ஜீவி. சொர்க்கநாதன்

First Published : 25 September 2015 01:07 AM IST


அந்தத் தொலைதூர விரைவுப் பேருந்து, பயண வழி உணவகம் ஒன்றில் மதிய உணவுக்காக நின்றது. பேருந்திலிருந்து இறங்கிய சில பயணிகள் பசியாற உணவகத்துக்குள் புகுந்த சிறிது நேரத்தில் கூச்சல். உணவக உரிமையாளருடன் சிலர் கடும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
பிரச்னை வழக்கமானதுதான், உண்ணத் தகுதியற்ற அந்த உணவுக்கு இரு மடங்கு விலையாம். அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என கொதித்தனர். அதை லட்சியம் செய்யாத உணவக உரிமையாளர், காசைக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் புகார் செய் என்றார்.
கட்டாயத் தேவை, மாற்று வழியின்மை என்ற பயணிகளின் பலவீனமான நிலையே பயண வழி உணவகங்களின் பலமாக மாறிவிட்டிருக்கிறது.
இன்று பெரும்பாலான பிரயாணங்கள் இதுபோன்ற பயண வழி உணவுகளை நம்பியே தொடங்கி சிரமத்தில் முடிகின்றன. அதேவேளையில், அந்த உணவுகளால் அதிக விலையில், வயிற்று உபாதை, மன உளைச்சல் நிச்சயம்.
ஆனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரயாணங்கள் சுவையான உணவுடன் கூடிய ஒரு சுகானுபவமாக இருந்தது. பிரயாணம் என்றாலே உற்சாகம்தான். காரணம் - கட்டுச்சோறு.
இந்தக் கட்டுச்சோறு இடையில் வந்ததல்ல. பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த முறை அது. சங்க காலத்திலேயே கட்டுச்சோறு பழக்கம் இருந்திருக்க வேண்டும். சிந்தாமணி நிகண்டில் கூட "தோட்கோப்பு' எனும் சொல் கட்டுச்சோறு என்ற அர்த்தத்தில் கையாளப்பட்டுள்ளது.
கட்டமுது, கட்டுச்சாதம், வழிநடை உணவு, வழிச்சோறு, பொதிச்சோறு போன்ற பெயர்களும் இதற்குண்டு. ஆரம்பத்தில் காட்டில் வேட்டையாடுவோர், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்வோர் பசியாற கட்டுச்சோறு கொண்டுச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். நாளடைவில் பிரயாணங்களில் இந்த உணவு பிரதான இடம் பிடித்தது.
நெல்சோறு புழக்கத்துக்கு வரும் வரை கேழ்வரகு, தினை, கம்பு போன்ற சிறுதானிய உணவுகளை பக்குவப்படுத்தி ஈரத் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி, பிரயாணங்களின்போது தோளில் சுமந்து செல்லப்பட்டது.
நெல்சோறு தாராளப் புழக்கத்துக்கு வந்தபிறகு, கட்டுச்சோறு உணவுகளில் முதலிடம் புளிச்சோறுக்குத்தான். இடிப்பு மசாலா மற்றும் பெருங்காயம் கலந்த புளிக் கரைசலைக் காய்ச்சி சுடுச் சோற்றில் ஊற்றிக் கிளறி, நல்லெண்ணெய்யில் தாளிக்கும் இந்த உணவு, குறைந்த பட்சம் இரு நாளுக்குக் கெடாது.
கட்டுச்சோற்றுக்கு தொட்டுக்கொள்ள காய்கறி பிரட்டல், எள்ளுப்பொடி, துவையல் என ஏதாவதொன்று இருக்கும்.
காடு, கழனி, ஆறு, மலை கடந்து செல்லும் பிரயாணமாக இருந்தால், கட்டுச்சோற்றை தீய ஆவிகள் தீண்டாமல் இருக்க, வாசனையை உள்ளிழுத்துக் கொள்ளும் அடுப்புக் கரித்துண்டையும் அதிலிட்டு கொண்டு செல்வதுண்டு. நடை களைப்பில், நீர் நிலையோரம் மரம் தரும் குளிர் நிழலில் அமர்ந்து உண்ணும் கட்டுச்சோறுக்கு அமுதமும் இணையில்லைதான்.
அதன்பிறகு துணி மூட்டையிலிருந்து பாத்திரங்களுக்கு கட்டுச்சோறு இடம் பெயர்ந்தது. குடும்பத்தினரோடு கோயில் திருவிழா, வெளியூர் பிரயாணம் என்றால் சிறிய அண்டா அல்லது குத்துசட்டியிலிட்டு கட்டுச்சோறு கொண்டு செல்லும் பழக்கம் வழக்கத்துக்கு வந்தது.
கூட்டத்தில் கட்டுச்சோற்றை அவிழ்க்காதே என்று சிலர் சிலேடை மொழியில் சொல்லக் கேட்கலாம். ஆனால், அன்றைய கட்டுச்சோறு கமகமக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் வீட்டுச் சமையல்கூட கமகமதான்.
ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் சமையல் சுவையை நிர்ணயிப்பது மசாலா நிறுவனங்களாக இருப்பதால், கைப்பக்குவம் என்ற சொல், தானாகவே அர்த்தம் இழக்கத் துவங்கியிருக்கிறது.
பிரயாணத்தின் போது, ஆரோக்கியமான உணவுச் செüகரியங்கள் இராது என்பதால் மட்டுமல்ல, செலவுச் சிக்கனம் கருதியும் கட்டுச்சோறு முறை கடைபிடித்து வந்தனர்.
எனினும், மாட்டு வண்டி, பொட்டி வண்டி, குதிரை வண்டிகளிலிருந்து பேருந்து, ரயில் போன்ற இயந்திர வாகனங்களுக்கு பிரயாணங்கள் இன்று மாறிவிட்டாலும், அதே உணவு அசெüகரியங்கள் தொடர்கின்றன.
பிரயாண வழியில், நியாயமான விலைக்கு ஆரோக்கியமான - தரமான உணவு சாத்தியமில்லை; உடலுக்கு ஊறு செய்யும் என்பது தெரிந்தும், அதுபோன்ற உணவுகளை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை, பலரும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
கட்டுச்சோறு உணவைப் பிரயாணங்களில் கொண்டு செல்வதில் பலரிடம் ஒருவித தயக்கம் இருக்கிறது. சிலர் அதனைக் கெüரவக் குறைவாகவும் கருதுகின்றனர். மேலும், ஓரிரு பொழுது உணவுதானே, சமாளித்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய எண்ணமும் ஒரு காரணம்.
கட்டுச்சோறு என்பது பொட்டலமாகக் கட்டப்படும் புளிச்சோறு, எலுமிச்சைச் சோறு, தயிர்ச்சோறு மட்டுமே ஆகாது. வீட்டில் அக்கறையுடன் தயாரித்து கட்டிக்கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு செல்லும் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, கொறிக்கும் உணவுகள் உள்ளிட்ட எல்லா உணவுகளுமே கட்டுச்சோறு வகையறாதான். இதுபோன்ற உணவுகளை பிரயாண பொழுதுகளுக்கேற்றபடி தயாரித்துக் கொண்டு செல்லலாம்.
குழந்தைகளுடன் பயணிப்போருக்கு இது உகந்ததாக இருக்கும். பிரயாணப் பொழுதில் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோருக்கு கட்டுச்சோறுதான் சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...