Thursday, September 10, 2015

எதிர்கொள்வது எப்படி?


Dinamani


By ஆசிரியர்

First Published : 10 September 2015 01:25 AM IST


தேசிய குற்ற ஆவணப் பதிவுகளின்படி இந்தியா முழுவதிலும் 2014-ஆம் ஆண்டு 9,622 சைபர் கிரைம் என்கிற தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டு, 5,752 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகார்கள், கைதுகள் வரிசையில் மகாராஷ்டிரம் (1879/942), உத்தரப் பிரதேசம் (1737/1223), கர்நாடகம் (1020/372), தெலங்கானா (703/429), ராஜஸ்தான் (697/248) ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. காரணம், இந்த மாநிலங்களின் தலைநகரங்கள், பெருநகரங்கள் என்பதால்தான். மும்பை, லக்னெü, தில்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டா, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள்தான் அதிக தகவல் தொழில்நுட்பக் குற்றங்களைக் கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பக் குற்றப் புகார்கள் 172 மட்டுமே. இதில் கைதானோர் எண்ணிக்கை 120. நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் 69% அதிகரித்திருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு பின்தங்கியிருக்கக் காரணம், தகவல் தொழில்நுட்பக் குற்றப் புகார்களை தமிழ்நாடு காவல் துறை பதிவு செய்வதில்லை. முதல் தகவல் அறிக்கையைத் தவிர்க்கும்விதமாக புகார்களைப் பதிவு செய்யாமல், புகார்களைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீது மட்டுமே வழங்குகிறது என்று தேசிய மனித உரிமை ஆணையம் வெளிப்படையாகக் குறை கூறியுள்ளது.
எல்லா பெருநகரங்கள் போலவே சென்னையில் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் அதிகம்தான். அவை குற்றப் பதிவு பெறாமல், வெறும் புகார் கடிதமாகப் போவதற்குக் காரணம் காவல் துறை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களும்தான். இந்தக் குற்றங்களில் பெரும்பாலானவை தனிநபர் அந்தரங்கத்தில் ஊடுருவிப் பார்த்தல் அல்லது அதைக் கொண்டு மிரட்டல் ஆகியவையே. இதில் பாதிக்கப்படுவோர் புகார் பதிவாகாமலேயே தொடர்புடையவர் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். புகாரைப் பதிவு செய்யாமல் தண்டிப்பது கட்டப்பஞ்சாயத்தில் மட்டுமே சாத்தியம்.
பொதுவாக, அடுத்தவர் வங்கிக் கணக்கில் நுழைந்து பணம் எடுத்தல், அடுத்தவர் பணஅட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுத்தல், மென்பொருள் திருட்டு, சமூக வலைதளத்தில் தவறாக அல்லது ஆபாசமாகச் சித்திரித்தல் அல்லது மனம் புண்படும் விதமாக விமர்சனம் செய்தல் ஆகியவை மட்டுமே தகவல் தொழில்நுட்பக் குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.
நமக்குத் தெரியாமலேயே நிறைய தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. நமக்கு வரும் "ஸ்பேம்' அஞ்சல்கள் அனைத்தும் அத்துமீறலே, தகவல் தொழில்நுட்பக் குற்றம்தான். உங்கள் இ-மெயில் முகவரிக்கு நிறைய வைரஸ் அஞ்சல்களை அனுப்பி, அதைத் திறந்தால் உங்கள் கணினி பழுதாகச் செய்வதும் வெறும் விளையாட்டு அல்ல. அதுவும் தகவல் தொழில்நுட்பக் குற்றம்தான்.
ஒரு குறிப்பிட்ட இணைய முகவரிக்கு ஆயிரக்கணக்கான போலி இ-மெயில்கள் அனுப்பி, சர்வரை ஸ்தம்பிக்கச் செய்வதும் (இ-மெயில் குண்டு மழை) தகவல் தொழில்நுட்பக் குற்றம். உங்கள் நண்பரின் இ-மெயில் முகவரியை ஆபாச இணையதளத்துக்குத் தந்து, அதன்மூலம் தொடர்ந்து உங்களுக்கு இ-மெயில் தொல்லை வரச் செய்வதும்கூட தகவல் தொழில்நுட்பக் குற்றம்.
கட்செவி அஞ்சலில் வரும் ஒரு காட்சியை, வெறுமனே பார்த்ததோடு நிற்காமல், அதைத் தனது நண்பர்களுக்குப் பகிரும்போது அவரும் குற்றம் புரிந்தவரில் ஒருவராகச் சேர்ந்து விடுகிறார் என்பது தெரியாமலேயே விளையாட்டாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். "இது எனக்கு வந்தது, அதை அனுப்பினேன்' என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்க இயலாது; அதற்கு சட்டம் இடம் தராது என்பது இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால், இத்தகைய பகிர்வுகளுக்காக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
முகநூலில் சில காட்சித் தொகுப்புகளைத் திறக்க முற்பட்டால், "இதைப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே இதைப் பார்க்க முடியும்' என்ற வாசகம் திரையில் தோன்றும். இது ஒரு முகநூல் அங்கத்தினரை அவருக்கே தெரியாத குற்றத்தில் மாட்டிவிடக் கூடியது. அந்தக் காட்சித் தொகுப்பு எதைக் குறித்தது என்பதே தெரியாமல், முன்னதாகவே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை ஏன் உருவாக்குகிறார்கள் என்பதை இளைஞர்கள் சிந்திப்பதே இல்லை.
ஆபாசக் காட்சி மட்டுமல்ல, மனதைப் பீதிக்குள்ளாக்கும் வன்முறைக் காட்சிகளைப் பகிர்வதும்கூட குற்றம். அண்மையில், வேலூரில் ரௌடி மகா, வீதியில் கல்லால் தாக்கி கொல்லப்பட்ட பயங்கரக் காட்சிகள் முகநூலிலும், கட்செவி அஞ்சலிலும் எந்தக் கட்டுப்பாடும் சுய தணிக்கையும் இல்லாமல் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஜிகாதி ஒருவர் பேசுவதாக ஒரு காட்சி கட்செவி அஞ்சல் மூலம் பரப்பப்பட்டு மத வெறுப்புணர்வை ஊக்குவித்தது.
வகுப்பறையில் மாணவர் அல்லது மாணவி செல்லிடப்பேசியில் ஆபாசக் காட்சிகளை ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தால் அது ஒழுங்கீனமா அல்லது பள்ளியை விட்டே நீக்கத்தக்க தகவல் தொழில்நுட்பக் குற்றமா என்பது கல்வித் துறையில் இப்போது விவாதிக்கப்பட்டு வருகிற பெரிய தலைவலியான விவகாரம். ஒரு மாணவர் தான் மட்டும் ஆபாசப் படம் பார்த்தால் அது ஒழுங்கீனம். ஆனால், பல மாணவர்களையும் அழைத்துக் காட்டுவதும் அவர்களது செல்லிடப்பேசிக்கு அதைப் பகிர்வதும் தகவல் தொழில்நுட்பக் குற்றம் என்கிறார் ஒரு தலைமையாசிரியர்.
குற்றம் என்று சொல்லாமலேயே நம்மை குற்றவாளியாக்கிக் கொண்டிருக்கிறது தகவல் தொழில்நுட்பம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024