செல்போனை கொடுத்து உதவிய வரை ஏமாற்றியது மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தமிழக பக்தருக்கு நிகழ்ந்த கொடுமை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது உறவினர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் திருப்பதிக்குச் சென்றார். திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது, அவர் அருகில் வந்த நபர் ஒருவர், “எனது பர்ஸ், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால், பணம் இன்றி தவிக்கிறேன். எனவே, எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூற வேண்டும். எனவே, உங்களது செல்போனைக் கொடுங்கள். வீட்டுக்கு ஒரே ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்” எனக் கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட குமார் மனிதாபிமான அடிப்படையில் உடனே தன்னுடைய செல்போனை அந்த நபரிடம் கொடுத்தார். அவர் அதில் போன் செய்வது போல நடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டத்தில் மறைந்தார். குமார் உடனே அப்பகுதி முழுவதும் தேடி அலைந்தார். ஆனால், அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்குள் அந்த மர்ம நபர் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த குமாரின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து அவரது மனைவியிடம் “உங்கள் கணவர் திருமலையில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க கீழ் திருப்பதிக்கு கொண்டு செல்கின்றோம். மருத்துவமனையில் பணம் கட்ட அவசரமாக ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. உடனே பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். நான் மீண்டும் அரைமணி நேரத்தில் தொடர்புகொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஓட்டல் கேஷியரிடம்..
பின்னர், அந்த மர்ம நபர் திருமலையில் இருந்து கீழ் திருப்பதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று கேஷியரிடம், “எனது மணிபர்சை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். எனவே, நான் வீட்டுக்கு போன் செய்து பணம் அனுப்புமாறு கூறியுள்ளேன். அவர்கள் பணம் அனுப்புவதற்கு வசதியாக உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கூறுங்கள். அவர்கள் அக்கணக்கில் பணம் செலுத்தியதும் வங்கி ஏடிஎம் மூலம் அந்த பணத்தை எடுத்துக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அந்த ஓட்டல் கேஷியரும் தன்னுடைய வங்கிக் கணக்கை அளித்துள்ளார். அதை வாங்கிய அந்த மர்ம நபர் மீண்டும் குமாரின் வீட்டுக்கு போன் செய்து ரூ.40 ஆயிரத்தை வங்கியில் செலுத்தும்படி கூறி, ஓட்டல் கேஷியரின் வங்கிக் கணக்கை கொடுத்துள்ளார். குமாரின் குடும்பத்தாரும் அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர். பணம் வந்து சேர்ந்ததும் ஓட்டல் கேஷியர் தன்னுடைய ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை எடுத்து அந்த மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
உறவினர்கள் பதற்றம்
இதற்கிடையே, குமார் விபத்தில் சிக்கியதாக கூறியதை நம்பி அவரது உறவினர்கள் அவசர அவசரமாக புறப்பட்டு திருப்பதிக்குச் சென்றனர். அங்கு மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் சென்று விசாரித்துள் ளனர். அப்போது, குமார் என்ற பெயரில் யாரும் சிகிச்சைக்காக சேர்க்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.
உடனே, திருமலைக்குச் சென்று அங்குள்ள தேவஸ்தான தகவல் அறிவிப்பு மையம் மூலம் குமார் குறித்து அறிவிப்பு செய்தனர். செல்போனை பறிகொடுத்துவிட்டு சுற்றித் திரிந்த குமார் இத்தகவல் கேட்டு தகவல் மையத்துக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உறவினர்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் போன் மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றி பணம் பறித்த தகவல்களை உறவினர்கள் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு குமார் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, அவர்கள் கீழ் திருப்பதிக்குச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து வங்கிக் கணக்கை வைத்து அந்த ஓட்டல் கேஷியரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், அவருக்கும் தான் ஒரு மோசடி நபருக்கு உதவி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, குமாரின் உறவி னர் ரமேஷ் ‘தி இந்து’விடம் கூறுகையில், “உதவி செய்யப் போய் ரூ.40 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதோடு செல்போனும் பறிபோனது. அத்துடன், உறவினர்கள் அனைவருக்கும் தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. குமாருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே, பிறருக்கு உதவி செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
No comments:
Post a Comment