Wednesday, September 2, 2015

இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கிப் பணிகள் பாதிக்கும்; லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது; பேருந்துகள் இயங்கும்

மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் புதன்கிழமை (செப். 2) லாரிகள், ஆட்டோக்கள், வேன்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் தமிழகம் முழுவதும் பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்படும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதுபோல வங்கி ஊழியர் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் வங்கி சேவைகளும் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மோட்டார் வாகனச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 11 தொழிற்சங்கங்கள் புதன்கிழமையன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகம் முழுவதும் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் தெரிவித்தார்.
வேலை நிறுத்தம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் (ஏஐடியுசி) சங்க நிர்வாகி ஷேசசைனம் கூறுகையில், அறிவித்தபடி தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் புதன்கிழமை இயக்கப்படாது. மேலும், கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
போக்குவரத்துக்கழக தொமுச தொழிற்சங்க பொதுச் செயலாளர் சண்முகம், மாநகரப் போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளன (சிஐடியு) தலைவர் சேகர் ஆகியோர் கூறியதாவது:
மோட்டார் வாகனச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடத்தப்பட உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, தேமுதிக உள்ளிட்ட பிற அனைத்து தொழிற்சங்களும் பங்கேற்க உள்ளன.
இதனால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்லவன் இல்லச் சாலையில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் புதன்கிழமை நடத்தப்படும் என்றனர்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. எனவே புதன்கிழமை நாடெங்கும் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை நடைபெறாது என்று ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...