Wednesday, September 30, 2015

மோடியால் முடியுமா?

Dinamani

By ஆசிரியர்

First Published : 30 September 2015 01:21 AM IST


அமெரிக்கப் பயணம் முடிந்து நாடு திரும்பும் முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனங்கள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவில் அவர் எதையெல்லாம் பேசியிருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் பட்டியல் போடத் தொடங்கிவிட்டன. மோடியை பாஜக தலைவராகப் பார்ப்பதிலும், இந்தியாவின் பிரதமராகப் பார்ப்பதிலும் இருக்கும் சிறிய இடைவெளி மறைகின்றபோது இந்த விமர்சனங்கள் வலுவிழந்து போய்விடுகின்றன.
1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இந்திய அரசியல் தலைவர்கள் எவருமே செய்திராத வகையில் அமெரிக்க அதிபர் முதல் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் வரை அனைவரையும் பிரதமர் மோடியால் சந்தித்து உரையாட முடிந்திருக்கிறது என்பதே ஒரு நல்ல அணுகுமுறையின் அடையாளம்தான். முகநூல் (ஃபேஸ்புக்) தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க், அதிபர் ஒபாமா ஆகியோருடன் மேடையில் அமர்ந்து, 18 ஆயிரம் இந்தியர்களுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளித்ததும் சிறப்புக்கு உரியதுதான்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் 5 லட்சம் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை அளிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா அளித்த உறுதிமொழியோ, அல்லது 500 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி அளிக்க முன்வந்துள்ள கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் பங்களிப்போ பெரும் வெற்றி என்று கூறிவிட முடியாதுதான். ஆனால், இவை நல்லதொரு தொடக்கம் என்பதை அரசியல், பொருளாதாரம் அறிந்த யாரும் மறுக்க முடியாது.
இந்தப் பயணத்தின் மூலம் எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீட்டை பிரதமர் மோடி கொண்டு வந்தார் என்ற கேள்வியைவிட, இந்தியாவில் முதலீட்டுக்கும், அறிவுசார்ந்த தொழில் வளர்ச்சிக்கும் தாராளமாக இடம் இருக்கிறது, அதற்கேற்ப இந்திய அரசு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது என்கிற நம்பகத்தன்மையை உருவாக்கியிருப்பதுதான் இந்தப் பயணத்தின் வெற்றியே.
முகநூல் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளதைப்போல, இணையத் தொடர்பு கொள்ளும் 10 பேரில் ஒருவர் வறுமைக் கோட்டிலிருந்து மீளுகிறார். ஒருவர் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார். அவர் குறிப்பிடுவதைப் போன்ற அப்படியானதொரு சூழல் இந்தியாவில் அமைய வேண்டும் என்றால், இந்தியா முழுவதும் இணைய வசதி பெற வேண்டும். இயலும் கட்டணத்தில், அனைத்துக் கிராமங்களிலும் அனைவருக்கும் இத்தகைய இணையத் தொடர்பு கிடைக்கச் செய்வதே இன்றைய தேவை. அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாகவே பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தைப் பார்க்க வேண்டும்.
முகநூல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கேள்வி- பதில் நிகழ்வில் பல்வேறு கேள்விகளும் இந்தியாவின் இன்றைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பானவையே. "இந்தியா முழுவதிலும் இந்தியாவை இணையப் பயன்பாட்டில் ஈடுபடுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? இன்று எத்தகைய ஏற்புடைய சூழல் உள்ளது என்பதைச் சொல்ல முடியுமா?' இப்படியான கேள்விகளே அதிகம். இது, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பல்வேறு வேலைவாய்ப்புகளால் இடம்பெயர்ந்துள்ளவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப ஆர்வமாக உள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த "அறிவுப்புலம்' கடந்த காலம் வரை இழப்பாகப் பார்க்கப்பட்டாலும், இன்றைய தருணத்தில் அவை ஒரு முதலீடு என்றும், அதன் லாபம் இந்தியாவை நோக்கி வருகின்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். இந்தியாவுக்குத் திரும்பி வந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில்களைத் தொடங்குவோர் எண்ணிக்கையும், வெளிநாடுகளில் இருந்து கொண்டே இந்தியாவின் இணையப் புரட்சிக்கு உதவுவோரும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு உரியது என்று பிரதமர் மோடி சொல்வது வெறும் வார்த்தைகள் அல்ல.
இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி, தேவையில்லாமல் முந்தைய அரசின் செயல்பாடுகள் பற்றியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தை ஊழல் குடும்பம் என்று மறைமுகமாகப் பேசியதையும் தவிர்த்திருக்கலாம். "என் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா?" என்பது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் கேட்க வேண்டிய கேள்வி அல்லதான். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இந்தியர்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுவது ஊழல் பற்றிய விவாதம் எனும்போது, பிரதமர் அதைத் தவிர்ப்பது என்பதும் இயலாததுதானே!
பிரதமர் மோடி இந்த அளவுக்கு இறங்கிப்போய் விமர்சனம் செய்வதற்குக் காரணம், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் தெரிவித்து வரும் கடும் விமர்சனங்களும் கேலிகளும்தான். அதுமட்டுமல்ல, குஜராத் கலவரத்துடன் மோடியைத் தொடர்புபடுத்தி "மரண வியாபாரி' என்பது போன்ற விமர்சனங்களின் மூலம் சர்வதேச அளவில் அவரது பெயரைக் களங்கப்படுத்தி இருக்கும் நிலையில், தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
18-ஆவது நூற்றாண்டில் உலகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு விகிதத்தில் 22.6% இந்தியாவின் பங்காக இருந்தது. அந்த நிலையை இந்தியா மீண்டும் எட்டிப் பிடிக்க வெறும் கோஷங்கள் மட்டும் போதாது. 35 வயதுக்குக் கீழே உள்ள இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 80 கோடி. இவர்களுக்கு முறையான தொழில்முறைத் தேர்ச்சியும் வேலைவாய்ப்பும் அளித்தாக வேண்டும். அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசியது எல்லாமே சரி. அதை நடைமுறைப்படுத்துவதில்தான் அவரது அமெரிக்க விஜயத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024