Sunday, September 20, 2015

விஷ்ணு பிரியா விவகாரம்: கதை கட்டுகிறதா காவல்துறை?

vikatan.com

சென்னை: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணு பிரியா, போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதால் போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறது காவல்துறை வட்டாரம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா. திருமணமாகதவர். இவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் பல சந்தேக ரேகைகள் படிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக இவர் எழுதியதாக சொல்லப்படும்  கடிதத்தில்,  "போலீஸ் பணி எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதற்கு நான் தகுதியற்றவர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் விஷ்ணுபிரியாவின் குடும்பமே போலீஸ் துறையுடன் நெருக்கமானதுதான் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 

இவரது தந்தை ரவி, ஏ.டி.எஸ்.பியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது தாய் கலைச்செல்வி வங்கி அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயதில் இருந்தே விஷ்ணு பிரியாவுக்கு போலீஸ் பணி என்பது லட்சியமாகவே இருந்துள்ளது. இதற்காக அவர் ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்தே தன்னை தயார் செய்து வந்துள்ளார். இதற்கு உறுதுணையாக அவரது தந்தையும் இருந்துள்ளார். பி.எஸ்சி கணிதம் முடித்து விட்டு அரசு தேர்வுகளை எழுதினார். தலைமை செயலகத்தில் வருவாய்துறையில் பணி கிடைத்தது. தொடர்ந்து அவர் தேர்வு எழுதி தன்னுடைய லட்சியமான டி.எஸ்.பி பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று திருப்பத்தூரில் பயிற்சி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். 7 மாதத்துக்குப் பிறகு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பிப்ரவரி மாதத்தில் பணியமர்த்தப்பட்டார். விஷ்ணு பிரியாவின் இன்னொரு சகோதரியும் டி.எஸ்.பியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பமே போலீஸ் குடும்பம் என்பதால் அங்கு நிலவும் அனைத்தும் விஷ்ணு பிரியாவுக்கு சிறுவயது முதலே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். அவரது சாவுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டியது காவல்துறையின் கடமை.

-எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024