Monday, September 7, 2015

கூலிப்படையை விரட்டிப் பிடித்த ஈரோடு போலீஸ்...பரபரப்பு தகவல்கள்!

vikatan.comகூலிப்படையை விரட்டிப் பிடித்த ஈரோடு போலீஸ்...பரபரப்பு தகவல்கள்!
நான்கு மணி நேர ஆப்ரேஷனில் இதை நிரூபித்துக்காட்டியிருக்கிறது ஈரோடு காவல்துறை. அதுவும் சினிமா பாணியில் கார், பைக், ரன்னிங் சேஸிங் செய்து ஒரு உயிரை மீட்டிருக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரோடு நகர காவல்நிலையத்திற்கு அழுதபடி வருகிறார் பாக்கியம் என்கிற பெண்மணி. டூட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் என்ன ஏதென விசாரிக்க அவர் சொன்ன தகவல் பகீர் ரகம்.

கருங்கல் பாளையம் பகுதியைச்  சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அதே பகுதியைச்  சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதில் செந்தில்குமாரின் ஆட்கள் ஆறுமுகத்தை அடித்துவிட அதற்குப்  பதிலாக செந்தில்குமாரை போட்டுத்தள்ள முடிவெடுத்திருக்கிறார் ஆறுமுகம். 

உடனே இதுகுறித்து ஈரோட்டைச்  சேர்ந்த தனது நண்பர் சின்னத்தம்பியை நாடியிருக்கிறார். சின்னத்தம்பி பெருந்துறையைச்  சேர்ந்த முத்து என்பவரை நாட முடிவில் திருநெல்வேலியிலிருந்து கூலிப்படை வரவழைக்கப்பட்டிருக்கிறது. பத்து லட்சம் ரூபாய் ரேட்டும் பேசப்பட்டிருக்கிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் ஈரோட்டில் முகாமிட்டிருந்த கூலிப்படை செந்தில்குமார் வாக்கிங் போகும் போது போட்டுத்தள்ள முயற்சித்திருக்கிறது. அதில் செந்தில்குமார் தப்பித்துவிடுகிறார். 

கூலிப்படையிடம் பணம் இல்லாததால் சின்னத்தம்பியிடம் அட்வான்ஸாக இரண்டு லட்சம் கேட்டிருக்கிறது. அதற்கு ஆறுமுகத்திடம் வாங்கித்தருகிறேன் என போக்குக் காட்டியிருக்கிறார் சின்னத்தம்பி. இதில் கோபமான கூலிப்படை சின்னத்தம்பியைக்  கடத்திக்கொண்டுபோய் வைத்துக் கொண்டு அவரின்  மனைவியிடம் 2 லட்சம் தந்தால் தான் உன் கணவரை உயிரோடு விடுவோம் என மிரட்டியிருக்கிறது. உடனே ஆறுமுகத்தை தொடர்புகொண்டு பேசிய சின்னத்தம்பியின் மனைவிக்கு இருபதாயிரம் மட்டுமே கொடுத்திருக்கிறார் ஆறுமுகம். 

கூலிப்படை கேட்டபடி பணம் தராவிட்டால் தனது கணவரை கொன்றுவிடுவார்களோ என பயந்த பாக்கியம் கடைசியில் நாடியது காவல்துறையை. அதன்பிறகு தான் நாம் மேலே சொன்ன சேஸிங் நடந்திருக்கிறது.

என்ன நடந்தது என ஏ.டி.எஸ்.பி பாலாஜி சரவணனிடம் கேட்டோம். அவர் கூறியது சினிமா காட்சிகளை மிஞ்சும் ரகம்.

நேரம் காலை 9.30
 மணிக்கு எஸ்.பி சிபிசக்கரவர்த்தி சார் எங்களை அழைத்தார். வந்தோம்திருநெல்வேலியை சேர்ந்த ஒரு கூலிப்படை ஒருவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கொண்டுவந்தால் தான் உயிரோடு விடுவோம் என மிரட்டியிருக்கிறது. அந்த நபரை காப்பாற்றுவதோடு கூலிப்படையையும் பிடித்தாக வேண்டும் என்றதோடு அதற்கான டீமையும் ரெடி செய்தார். 

நேரம் காலை 10 மணி. 
அரை மணி நேரத்தில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  எஸ்பி  சிபிசக்கரவர்த்தி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பிக்கள். ஆறு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையைச்  சேர்ந்த 20 பேர் தான் அந்த தனிப்படை.

சின்னத்தம்பியின் மனைவி பாக்கியத்திற்கு காவல்துறையே ஒரு லட்சம் ரூபாயை ரெடி செய்து கொடுத்து அவரயும் அவரது சகோதரரையும் ஒரு டூவீலரில் அனுப்பிவிட்டு, பின்னாலேயே 20 பேர் கொண்ட 6 தனிப்படையும் கார் பைக் என்று வாகனங்களில் விரைந்தோம். அனைவருமே சாதாரண உடை போட்டிருந்தோம். குறிப்பாக எங்கள் எஸ்பி தனி ஆளாக பைக்கில் ஹெல்மெட் போட்டபடி பின்தொடர்ந்தார்.

நேரம் காலை 11.30.
 முதலில் கூலிப்படை சொன்ன பெருந்துறைக்குச்  சென்றோம். உடனே அவன் தொடர்பு கொண்டு நந்தா கல்லூரி அருகில் வர சொன்னான். அங்கும் சென்றோம். மறுபடியும் தொடர்புகொண்டவன் வாய்க்கால்மேடு பகுதிக்குப்  பணத்துடன் வர சொன்னான். அங்கு சென்றோம். 

நேரம் 12 மணி. 
அப்போது டூவீலரில் வந்த ஒருவன் பணப்பையை வாங்கியதும் மடக்கினோம். ஆனாலும் அவன் தப்பித்து தனது டூவீலரை விரட்ட தொடங்கினான். அப்போது எதிரே வந்த எஸ்.பி. ஓங்கி உதைத்தார். அதிலும் லாவகமாகத்  தப்பித்து மீண்டும் பைக்கில் விரைந்தான். நாங்களும் பின்தொடர்ந்து சுமார் 200  மீட்டர் தூரம் கார் மற்றும் பைக்குகளில் விரட்டிச் சென்றோம். எங்களது வேகத்திற்கு ஈடுகொடுக்க  முடியாத கொலையாளி டூவீலரை போட்டுவிட்டு வாய்க்கால் பகுதிக்குள் ஓட தொடங்கினான். நாங்கள் அவனை விடாமல் துரத்திப்பிடித்தோம். இந்த சம்பவம் அனைத்துமே மெயின் ரோட்டிலேயே நடந்ததாலும், நாங்கள் யாரென்று தெரியாததாலும் அங்கிருந்த பொதுமக்கள் பயந்து அலறத்தொடங்கிவிட்டார்கள். கொலையாளியை மடக்கிப்பிடிக்கும் வரை நாங்கள் யாரென்றே சொல்லவில்லை.

நேரம் 12.15 
.மற்றவர்கள் எங்கே என அவனிடம் கேட்டதற்கு எங்களைத்  திசைதிருப்பி வேறு இடத்தைச்  சொன்னான். ஆனாலும் அவனை மடக்கிய இடத்திலிருந்த குளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருவன் நடவடிக்கைகள் மட்டும் வித்தியாசமாகப்பட அவனை மடக்கினோம். அவன்தான் உண்மையான இடத்தை சொன்னான். 

அவன் சொன்ன இடத்தை அடைய வயல்வெளிக்குள் செல்ல வேண்டியிருந்தது. எங்கள் அனைவருக்குமே பயம் விலகவில்லை. காரணம் கொலையாளி டைம் குறித்து வைத்து, அதற்குள் வராவிட்டால் கடத்தி வைத்திருப்பவரைக்  கொலை செய்ய சொல்லியிருந்தால் என்ன செய்வது என்கிற யோசனை.
வயல்வெளியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று பார்த்தால் ஒரு பாறையின் அடியில் இருந்த புதருக்குள் மறைந்திருந்தது கொலைகார கும்பல்.

நேரம் 12.30. நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்து ஓடினோம். எங்களைப்  பார்த்ததும் ஒருவர் மட்டும் எங்களை நோக்கி வந்தார். அவரை விசாரித்தால் நான்தான் சின்னத்தம்பி என்னைக்  காப்பாற்றுங்கள் என்று கதறினார். அவரை அந்த இடத்திலேயே அமர வைத்துவிட்டு அவருக்குப்  பாதுகாப்பாக 2 பேரை நிற்க வைத்தோம். 

இதற்குள் அங்கிருந்த மற்ற மூவரும் வயல்வெளியில் ஓட தொடங்கினார்கள். நாங்களும் விடாமல் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி அவர்களைக்  களைப்படைய வைத்தோம். கடைசியில் ஓடமுடியாமல் 2 பேர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்கள்.


நேரம் மதியம் 1 மணி. 
அனைவரையும் பிடித்துவிட்டோம் என்பதைக் காட்டிலும் கடத்தப்பட்டவரை உயிரோடு மீட்டுவிட்டோம் என்கிற திருப்தியோடு ஈரோட்டிற்கு விரைந்தோம் என்றவர் குற்றவாளிகளின் விபரத்தை சொன்னார்.

விபரத்தை கேட்ட நாம் எஸ்பி சிபி சக்கரவர்த்தியைச்  சந்தித்தோம். 

" இதில் கலந்துகொண்ட அனைவருமே ஹெட்போனை பயன்படுத்தினோம். இதனால் ஒவ்வொருவரும் தகவல்களைப்  பரிமாற வசதியாக இருந்தது. அடுத்து எங்களது ஒரே குறி கடத்தப்பட்டவரை உயிரோடு மீட்பதோடு குற்றவாளிகளையும் பிடிக்க வேண்டும் என்பது தான். இதில் ஏதேனும் சிறிய தொய்வு ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டது வீணாகி விடும். எனவே நேரத்தை மிகவும் கவனமாக கையாண்டோம். பிடிபட்ட திருநெல்வேலி கூலிப்படையை சேர்ந்தவர்கள் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. இப்போது குற்றவாளிகள் அனைவருமே ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் என்னுடைய பங்கு மட்டுமல்ல என்னுடன் பணியாற்றிய அனைவருமே மிகச் சரியாகச்  செயல்பட்டதால் தான் எங்களால் இந்த ஆபரேஷனை சக்ஸசாக முடிக்க முடிந்தது. கடத்தப்பட்டவர் மீதும் புகார் இருந்ததால் அவரும் ரிமான்ட் செய்யப்பட்டிருக்கிறார்"  என்றார். 

சபாஷ் போடவைத்தது இவர்களின் நடவடிக்கை. காவல்துறையை நம்பினோர் கைவிடப்படார்.
                                      

 வீ.மாணிக்கவாசகம்.
 படங்கள் ரமேஷ் கந்தசாமி.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...