By அ. அறிவுநம்பி
First Published : 28 September 2015 01:36 AM IST
துண்டு. இது வெறும் மூன்றெழுத்தில் உருவான ஒரு பெயர்ச்சொல். ஆனால், இதன்வழி அரங்கேறும் வினைகள் சொல்லி முடியாதவை. அண்மையில் ஒருவருக்கு விருது வழங்கும் விழா
நடைபெற்றது.
விருது வழங்கிச் சிறப்பித்த சிறப்புப்பொழிவாளரின் உரைக்குப் பின் கூட்டம் குறையக்கூடும் என்று கருதினர். எனவே, விருது பெற்றவரின் ஏற்புரை முன்னுக்குக் கொணரப்பெற்றது. இதுவரை நிகழ்வில் பிழையேதுமில்லை.
சடாரென்று விருது பெற்றவரைப் பாராட்ட ஒருவர் திடீரென மேடை ஏறி ஒரு தேங்காய்ப் பூத்துண்டைப் போர்த்தினார். அந்தத் துண்டைத் தோளிலிருந்து உரியவர் நீக்குவதற்கு முன் மேடையேறித் துண்டும் சால்வையும் அணிவிப்பவர்களின் நீண்ட வரிசை சட்டென்று மலர்ந்தது.
விருது பெறுபவரின் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள், உறவினர்கள், இயக்கப் பின்னணியினர் போன்றோருடன் அவர்வழியே சலுகைகள் பெற விரும்பிய அன்பர்களின் கூட்டம் அணிவகுத்து நிற்பதில் வியப்பேதுமில்லை. இதனால், அந்நிகழ்வில் ஏற்பட்ட இரண்டு தேய்மானங்களை இங்கே குறிப்பிடுவது தேவையாகிறது.
நாற்பது நிமிடங்கள் வரை நீங்கள் பேச வேண்டியதாயிருக்கும் என விழா ஏற்பாட்டாளர்கள் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஏராளமான நல்ல தரவுகளைத் திரட்டி வந்திருந்தார் சிறப்புப் பேச்சாளர். ஆனால், துண்டுபோடும் படலம் அவரின் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடிவிட்டது. அதனால், மொத்தம் பதினெட்டு நிமிஷங்கள் மட்டுமே அவரின் சிறப்புரை இடம் பெற்றது. இது முதலாவது சரிவு.
மேடையேறித் துண்டோ, சால்வையோ அணிவிக்கும்போது ஒலிபெருக்கிமுன் நின்று எந்த அமைப்பின் சார்பாக அங்கே சிறப்புச் செய்யப்படுகிறது எனக் குட்டிப் பிரசங்கம் செய்வதும், துண்டு அணிவித்தபின் விருது பெற்றோருடன் நிழற்படம் எடுத்துக்கொள்வதில் நேரம் செலவழிப்பதும் ஏனைய பார்வையாளர்களின் பொறுமைக்கு வைக்கப்பெறும் வேட்டுகளாகின்றன. இது இரண்டாவது தொய்வு.
இந்தத் துண்டுப் பணியால் ஒட்டுமொத்த அரங்கமும் பாழ்படுகின்றது என்பதே நடப்பியல். நீங்கள் ஒரு பார்வையாளராக இருந்து இத்தகைய துண்டுச் சடங்குகளை நேரிலே அனுபவிக்கும்போதுதான் அடத்தியான வெறுப்புகளை உணர முடியும். இதனுடைய உச்சகட்டத்தை ஒரு நிகழ்வு பரிமாறியது.
நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நிகழ்ச்சி தொடங்கி வரவேற்புரை இடம்பெறும்போது நூலாசிரியரின் நண்பர் அரங்கிற்குள் வந்தார். நூலாசிரியர் வரவேற்புரையாளரை விலகச் செய்துவிட்டு ஒலிபெருக்கியில் தன் நண்பர் பெயரைச் சொல்லி அவரை மேடைக்கு அழைத்தார். நண்பருக்குத் துண்டு போர்த்திய பிறகு வரவேற்புரை தொடர்ந்தது. அடுத்ததாக நூலறிமுகம் நடந்தது.
அப்போது நூலாசான் குடியிருக்கும பகுதியில் இருந்து இருவர் வந்தனர். கூடவே இன்னுமொருவர் உடன் வந்தார். நூலாசிரியரால் அறிமுகவுரை தடை செய்யப்பட்டது. பெயர் தெரியாத அந்த மூன்றாம் நபர் உள்பட மூவரும் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். துண்டுபோடல் அரங்கேற்றமானது.
சிறிது நேரங்கழித்து ஆசிரியரின் அலுவலகத்தில் இருந்து ஒருவர் தன் எட்டு வயதுப் பையனுடன் உள்ளே வரவும் மறுபடி நூல் அறிமுகம் நிறுத்தப்பட்டு நண்பர் மட்டும் மேடைக்கு வரவழைக்கப்பட்டு துண்டு சார்த்தல் நிகழ்ந்தது. இப்படி அறிமுகவுரை, வரவேற்புரை போன்றவை துண்டாடப்பட்டன.
இதனிடையே, வாழ்த்துரைக்காக மேடையில் அமர்ந்திருந்த மூன்று நபர்களில் இருவர் ஓசையின்றி கீழே இறங்கிச் சுவடு தெரியாமல் அரங்கிலிருந்து வெளியேறியதும் நடந்தது. ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் துண்டு துண்டாகிப் போனதுதான் பயன் அப்படிச் சிலவற்றைச் சந்திக்கும்போதுதான் ஒரு சிறிய துண்டு எவ்வளவு திருவிளையாடல்களை நிகழ்த்துகின்றது என்றுணர முடிந்தது.
ஒரு நபரிடம் துண்டு இடம்பெறுமிடத்தைப் பொருத்து அந்த நபரின் குணநலன்களும் பண்பாடும் புலப்படுவதை நடைமுறை வாழ்க்கை எடுத்து மொழியும். தலைமீது துண்டு அமருமானால் அது வேலைக் கடுமையைக் காட்டுவது ஒருபுறம். குளிர்க்காற்றைத் தடுக்கும் காப்பாகத் தோன்றுவது மறுபுறம்.
தோள் மீது துண்டு அணி செய்யுமானால் அவர் கடந்த தலைமுறை ஆள் என உணரலாம். கழுத்தினைச் சுற்றி இருபுறமும் தொங்கும் அமைப்பிலுள்ள துண்டு பழைமைவாதிகளின் பழக்க நீட்சியாகவே கொள்ளப்பெறும். துண்டானது அவசர முடிப்போடு நபரின் கக்கத்தில் (அக்குளில்) செருகப்படும்போது அதையணிந்தவரின் பணிவு புலப்படும். பணக்காரர்கள்கூட ஆலயங்களில் சட்டைக்கும் மேலாக இடைப் பகுதியில் துண்டினைக் கட்டிப் பக்தியை உணர்த்துவர்.
மாட்டுச் சந்தைகளில் விற்பவர், வாங்குபவர் இருவரும் விரல்வழி வணிகம் மேற்கொள்ளும் இடத்தில் கைகளை மறைக்கும் மறைப்புத் துணியாகத் துண்டு பிறப்பெடுக்கும். பேருந்துகளில், புகைவண்டிகளில் இடம்பிடிக்க ஏதுவாகத் துண்டு உருமாறி இடப்பதிவு ஆவணமாக உதவும்.
வழக்கில் சிக்கிக் கைதாகும் நிகழ்வின்போது, அதுவே முகமூடியாக மாறி முகத்தினை மறைக்கப் பயன்படும். சண்டைக்காரனின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கியபடியே இழுத்துவரும் நேரங்களில் துண்டு ஒரு படைக் கருவிபோலக் கருதப்பெறும்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் காரைக்குடி திருக்குறள் கழகத்தில் பேசவந்தார். நீளமான கதர்த் துண்டை விரித்துக்கொண்டே விழா அமைப்புக் குழுவில் ஒருவர் ஒலிபெருக்கியில் ஐயா அவர்களுக்கு இந்தக் கதராடையைப் பொன்னாடையாக அணிவிக்கிறேன் என்று கூறிவிட்டு, அணிவித்தார்.
முத்தமிழ்க் காவலர் உரையாற்றும்போது, ""போலித்தனமாகவே நாம் வாழ்கிறோம். கதராடையைக் கதராடை அணிவிப்பதாகக் கூறியே அணிவிக்க வேண்டும். மாறாக, அதனைப் பொன்னாடை என்று கூறிச் சிறப்பிக்கப்பட்டவரையும் பார்வையாளர்களையும் முட்டாளாக்கக் கூடாது. இரண்டாவது, பொன்னாடையால் கை துடைக்கவோ முகம் துடைக்கவோ முடியாது. இந்தக் கதர்த் துண்டால்தான் கூடுதல் பயன்தர முடியும்'' என்று பளிச்செனப் பதிலடி தந்தார்.
இப்படிப்பட்ட துண்டுச் செய்திகளின் பின்புறத்தே பல உண்மைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. பழங்காலத்தில் பெரியவர்களைக் கண்டவுடன் ஒரு மரியாதை காரணமாக எலுமிச்சைப் பழத்தை அளிப்பது வழக்கம். இப்போது துண்டு அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
புகழ் பெற்றவர்களை எங்கு கண்டாலும் - வீதியில், நிகழ்விட முகப்பில், பயண நிறைவில் என எல்லாவிடத்தும் - துண்டு போர்த்திச் சிறப்பிப்பது ஒரு நாகரிகம்போல மாறிப்போனது.
கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் துண்டுபோட்டு அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொண்ட நபர்கள் அப்படங்களைப் பிறரிடம் காட்டித் தமக்கும் புகைப்படத்தில் உள்ள நபர்களுக்கும் இடையில் ஓர் இணக்கமான அணுக்கம் இருப்பதைப்போல காட்டிக்கொள்வதும், நடிப்பதும் பல இடங்களில் நிகழ்கிறது.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொழிவாற்ற வந்தார் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். வழக்கமான முறையில் அவருக்குத் துண்டு அணிவிக்கப்பெற்றது. அவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ எனக்கருதி அவருக்குப் பின்புறமிருந்து துண்டைப் பதமாக நீக்க முயன்றேன். ஒலிபெருக்கிமுன் நின்ற அவர் எல்லாரும் கேட்கும்படியாக ""மெதுவா.. மெதுவா.. மடிப்பு மாறாமல் துண்டை மறுமடிப்புச் செய்து வைக்கணும். அடுத்த வாரம் நண்பரொருவரின் நூல் வெளியீட்டின்போது இது பயன்படும்'' என்றார். இப்படித் துண்டுகள் பல பிறவிகள் எடுப்பதே வழக்கம்.
புகழ்மிக்க ஒருவர் பங்குகொள்ளும் இடங்களில் அளிக்கப்படும் துண்டுகளை வைத்துக் கொண்டு என்ன தான் செய்வார் என்பது அடர்த்தியான கேள்விதான். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு சேர்ந்துபோன துண்டுகள், சால்வைகளைத் தம் வீட்டு வரவேற்பரை, உண்ணும் இடம் போன்ற இடங்களில் இருந்த நாற்காலி, சோஃபாக்களுக்கு அணிவித்து அழகு பார்த்தார்.
வேறு ஒரு சான்றோர் மேடையை விட்டு இறங்கும்போது மறவாமல் போர்த்தப்பெற்ற துண்டுகளைச் சேகரம்பண்ணிக் கொண்டுதான் வீடு திரும்பினார். ஆண்டுக்கொரு நாள் அந்தத் துண்டுகளைச் சலவை செய்து, செம்மையாக மடித்து எடுத்துக் கொள்வார். ஆதரவற்ற முதியோர்கள் வாழும் இல்லங்கள் அல்லது குழந்தைகள் காப்பகங்கட்குப் போய், தன் கையாலேயே உரியவர்களுக்கு வழங்குவார். இந்தத் துண்டுக் கொடைதான் அவரைச் சிறந்த தொண்டனாகக் காட்டும்.
தம் சொந்தச் செலவில் துணிகள், போர்வைகள் வாங்கித் தருவதுதான் மேலான அறம் எனக் கருதுவதில் தவறில்லை. ஆனால், தமக்கு மிஞ்சியபோது பிறருக்குத் தம்மிடம் இருப்பதை வழங்குவதும்கூட நேரிய கொடைப் பண்பாகவே அமையும். வட மொழியில் கூறப்படும் வஸ்திர தானம் என்று இதனைக் கொள்ளலாம்.
துண்டு துண்டாகத் தென்படும் துண்டு பற்றிய தகவல்களைத் திரட்டினால் ஒரு பெரிய புராணமே உருவாகிவிடும். எப்படியோ ஒரு துண்டு, ஆடல் பலவற்றை அகிலத்தில் ஆற்றிக் கொண்டிருப்பதுதான் நடப்பியல்.
வழக்கில் சிக்கிக் கைதாகும் நிகழ்வின்போதுகூட, துண்டுகள் முகமூடியாக மாறி முகத்தை மறைக்கப் பயன்படுகின்றன.
No comments:
Post a Comment