எது தெய்வீகக் காதல்?
By இராம. பாரதி
First Published : 19 September 2015 01:39 AM IST
சங்க கால இலக்கியங்களில் தொடங்கி சமகால திரைப்படங்கள் வரை அனைத்திலும் பேசப்பட்டது, இனியும் பேசப்பட இருப்பது, பருவ வயதில் பலருக்கு பிடித்தமானது எல்லாமே ஒன்றுதான். அதுதான் காதல்.
காதல் என்றால் என்ன? எல்லோருக்கும் காதல் வருமா? அதை உணர்வது எப்படி? எல்லாவற்றுக்கும் மேலாக தெய்வீகக் காதல் என்றால் என்ன? இதுபோன்ற எண்ணிலடங்கா கேள்விகள் நம் முன்னே எழுகின்றன.
ஜாதி - மத வேறுபாடுகளையும், ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காமல் தோன்றுவதுதான் காதல் என்றும், காதலுக்கு கண்ணில்லை என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் மறுப்பதற்கில்லை. அதேவேளையில், பருவ வயதில் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்படுவதும், நம் மனதுக்குள் குறுகுறுப்பான எண்ணங்கள் தோன்றுவதும் இயல்பானதே. அது கண்டிப்பாக காதல் அல்ல.
என்றைக்கு நம் வாழ்க்கையை நாமே தீர்மானிக்கும் அளவுக்கு பக்குவம் அடைகிறோமோ அன்றைக்கு நம் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். அது என்ன பக்குவம்? அது எந்த வயதில் வரும்? என்ற கேள்விகள் எழலாம்.
ஒரு குடும்பத்தை வழிநடத்திச் செல்ல தந்தையும், தாயும் செய்யும் காரியங்களை என்றைக்கு நாம் சுயமாக செய்யத் தொடங்குகிறோமோ அன்றைக்கு நாம் பக்குவம் அடைந்திருப்பதை உணர முடியும். அது எந்த வயதினருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அப்படியொரு தருணத்தில் நம் மனதுக்குள் காதல் தோன்றினால் நிச்சயம் ஒரு தெளிவான முடிவை எடுப்பவராக இருப்போம். நம் மனதைக் கவர்ந்த எதிர் பாலினத்தவர் நமக்கும், நமது குடும்ப வாழ்க்கைச் சூழலுக்கும் சரியான தேர்வாக அமைவார்களா என்பதை மனம் சிந்திக்கும்.
ஆம் எனில், நாயகன் அல்லது நாயகியை திருமணம் செய்வதில் ஜாதி, மத, பொருளாதார ரீதியாகத் தடை ஏற்படுமா? அப்படி இல்லாவிட்டாலும் யாரேனும் ஒருவரது குடும்பத்தில் தீவிர எதிர்ப்பு இருக்குமா? என்பதை நம் மனம் கணக்கீடு செய்துவிடும்.
அதன் பின்னர், பிரச்னைகள் எதுவும் வேண்டாம் என தொடக்கத்திலேயே ஒதுங்குவது அல்லது தடைகளைத் தாண்டி திருமணம் செய்வது என்ற தெளிவான முடிவை எடுப்பவராக நாம் இருப்போம். இரண்டில் எது நடப்பினும் நன்மையே.
ஆனால், இதுபோன்ற தெளிவான சிந்தனைகள் எதுவுமே இல்லாமல் நடை, உடை, பாவனை என அழகியலை மட்டுமே பார்த்து உருவாகும் குறுகுறுப்பான எண்ணம் வெறும் பாலின ஈர்ப்பாக மட்டுமே அமையும்.
ஆச்சரியம் என்னவெனில் இந்தக் காதலில்(?) ஒருவர் மீது ஒருவர் மிக இறுக்கமான அன்பு வைத்திருப்பதாக நம் மனம் நினைத்துக் கொள்ளும். ஆனால், கடற்கரை, பூங்கா, திரையரங்கு என சுற்றித் திரிந்து பாலின ஈர்ப்புக்கான தேவைகள் முடிந்தவுடன் இந்தக் காதல் காணாமல் போய்விடும்.
சில சமயங்களில், இதில் யாரேனும் ஒருவரின் காதல் உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குப் பிடித்தமான ஆணோ அல்லது பெண்ணோ தவறான தேர்வாக இருப்பார்கள்.
நான் ஓர் ஏழையைக் காதலிக்கிறேன் என்று கூறுவது ஒரு பெண்ணின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், வாழ்வில் எவ்வித இலக்குமின்றி ஊதாரியாய் சுற்றித் திரிபவரைக் காதலிக்கிறேன் என்று கூறினால் அதை சரியென ஏற்க முடியுமா?
இதேபோல், எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆண், குடும்பத்தை வழி நடத்தும் திறன் ஏதும் இல்லாமல் ஆடம்பர வாழ்வை விரும்பும் பெண்ணைக் காதலிக்கிறேன் என்று கூறுவதும் ஏற்புடையதாக இருக்காது.
இது எல்லாவற்றையும் மீறி இப்படியொரு வாழ்க்கைத் துணையின் (ஆண் / பெண்) கரம் பற்றும்போது அந்தத் திருமணம் கசப்பானதாக மாறுகிறது. ஏனெனில், காதலிக்கும்போது கண்ணே, மணியே, முத்தே என கொஞ்சியதைப் போல எதார்த்த வாழ்வு அமைவதில்லை.
எல்லாம் சரிதான், பக்குவம் அடைந்ததோ அல்லது துடிப்புமிக்கதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காதல் என்பது தானாக இணைபவர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறுவது சரிதானா? நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இணைபவர்கள் காதலிக்கும் வாய்ப்பை பெறாதவர்களா என்ன? கண்டிப்பாக அப்படியொன்றும் இல்லை.
காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எதுவாக இருப்பினும் ஓர் ஆணுடன், பெண் கைகோத்து குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும்போதுதான் உண்மைக் காதலுக்கான கதவுகள் திறக்கின்றன.
அப்படிப் பார்த்தால் திருமணத்துக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு என ஏதேனும் ஒரு சூழலில் அனைவருக்குமே காதலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இதில் எத்தனை பேர் தெய்வீகக் காதலுடன் வாழுகின்றனர்? முதலில், தெய்வீகக் காதல் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண்பது அவசியம்.
ஆனால், கடலில் சங்கமிப்பது இயற்கையின் நியதிதானே தவிர நதிகளின் நோக்கம் அதுவல்ல. எத்தனை முறை வறட்சி ஏற்பட்டாலும் மீண்டும், மீண்டும் நீரை சுரக்கச் செய்து காடு, பள்ளம், மலை முகடுகளைத் தாண்டிச் சென்று மண்ணை வளமாக்குவதுதான் நதிகளின் நோக்கம்.
இதைப் போலவே, நம் வாழ்விலும் எத்தனை எத்தனை ஏற்றத் தாழ்வுகளை வேண்டுமானாலும் சந்திக்க நேரிடலாம். எண்ணற்ற சண்டை சச்சரவுகள் வரலாம். ஆனால், மீண்டும், மீண்டும் நம்மில் அன்பு சுரப்பதுடன், அது நதி நீரைப் போலவே தூய்மையானதாக இருக்குமென்றால் அந்த வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
நம் சதைகள் இளமையுடன் இருக்கும்போது கைகோத்து நடப்பதல்ல காதல். அறுபது, எழுபது வயதுகளைத் தாண்டி முதுமையை எட்டிய நிலையில், கைகோத்து நடந்து செல்ல நம் மனம் விரும்புமென்றால் அதுதான் தெய்வீகக் காதல்.
வாழ்வின் அனைத்து தருணத்திலும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வாழ்ந்தால் மட்டுமே எந்தவொரு தம்பதியும் தெய்வீகக் காதலை அடைவது சாத்தியம்.
No comments:
Post a Comment