Friday, September 4, 2015

தூக்குதண்டனை வேண்டாமே

logo

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.ஷா, தற்போது சட்டஆணைய தலைவராக இருக்கிறார். இந்த சட்டஆணையம் 9 உறுப்பினர்களைக்கொண்டது. இதில், தலைவரைத்தவிர, மூன்று முழுநேர உறுப்பினர்கள், 2 முன்னாள் அரசு அதிகாரிகள், 3 பகுதிநேர உறுப்பினர்கள் உள்ளனர். சமீபத்தில் இந்த சட்டஆணையம் தனது 262–வது அறிக்கையில் வழங்கிய பரிந்துரை, நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. முழுமையான தூக்குதண்டனை ஒழிப்புதான் இலக்கு என்ற நோக்கில் தற்போது தீவிரவாத குற்றங்கள் மற்றும் தேசவிரோத கொடுஞ்செயல்களைத்தவிர, மற்ற குற்றங்களுக்கு தூக்குதண்டனையை ரத்து செய்துவிடலாம் என்று சட்டஆணையம் பரிந்துரை செய்துள்ளது. முழுநேர உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதி உஷா மெஹ்ரா, சட்ட அமைச்சகத்துக்குட்பட்ட சட்டமன்றத்துறை செயலாளர் சஞ்சய் சிங், சட்டத்துறை செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பாக தூக்குதண்டனை வேண்டும் என்ற கருத்தை பிரதிபலித்து இருக்கிறார்கள்.

தூக்குதண்டனை ரத்து என்பது காலம்காலமாக பலரால் பேசப்பட்டுவந்த கோரிக்கையாகும். எந்த உயிரையும் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. செய்த குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதுதான் நீதி, அந்த தண்டனை உயிரைபோக்கும் வகையில் இருப்பது இயற்கைக்கு மாறானது. உயிரை பறித்தான் என்பதற்காக, அதை கொடுங்குற்றம் என்று கருதி சட்டத்தைக்கொண்டு அவனுக்கு தூக்குதண்டனை விதித்து உயிரைப்பறிப்பது எந்த வகையில் சரியாகும்? என்றும் கருத்துக்கள் கூறப்படுகின்றன. நீதிமன்றத்தின் நீண்டபடிக்கட்டுகளில் ஏறி, பல கட்டங்களைக் கடந்து தூக்குதண்டனை பெற்றவர்களில் இறுதியாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி, தூக்குக்கயிற்றில் இருந்து தப்பியவர்கள்தான் ஏராளம். முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திரபிரசாத் காலத்தில் இருந்து தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இதுவரை அனுப்பிய கருணை மனுக்களில் 306 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தூக்குக்கயிற்றில் இருந்து தப்பி ஆயுள் தண்டனை கைதியாகியிருக்கிறார்கள். 131 பேர்களின் மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிலும், கடந்த 11 ஆண்டுகளில் 3 பேர்கள்தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர். உலகில் பெரும்பாலான நாடுகளில் இப்போது தூக்குதண்டனை கிடையாது என்ற நிலையில், இந்தியாவிலும் தூக்குதண்டனைக்கு டாட்டா காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்திய அரசியல் சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டங்களில் பொதுவாக எல்லாகுற்றங்களுக்கும் தகுந்த சிறைத்தண்டனை வகுக்கப்பட்டுள்ளது. அந்தந்த தண்டனையை அனுபவித்து புதுமனிதர்களாக மீண்டுவரவைப்பதே சிறந்தது. மேலும், ஒரு குற்றத்துக்காக தண்டனை விதிக்கும்போது, அந்த குற்றத்தை மீண்டும் செய்யக்கூடாது என்ற உணர்வை அவருக்குள் உருவாக்கி வெளியே கொண்டுவருவதுதான், அந்த தண்டனையின் சிறந்த நோக்கமாக இருக்கவேண்டும். அதனால்தான் சிறைச்சாலை என்பது சீர்திருத்தக்கூடமாக இருக்கவேண்டுமே தவிர, தண்டனைக்கூடமாகவோ, சித்திரவதைக்கூடமாகவோ இருக்கக்கூடாது என்பதுதான் ஆன்றோர்களின் கருத்தாகும். எனவே, எந்தவொரு குற்றத்துக்கும் சிறைதான் சிறந்த தண்டனையாக இருக்குமே தவிர, தூக்குதண்டனை விதித்து உயிரை பறித்துக்கொள்வதால் எந்த பயனும் விளையப்போவதில்லை.

இதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டால், தூக்குதண்டனையை ரத்து செய்யவேண்டியது மிகமிக அவசியமாகும். இந்த நிலையில், சட்டஆணையத்தின் பரிந்துரை மிகமிக வரவேற்புக்குரியது என்றாலும், இதில் பாகுபாடு தேவையில்லை. தீவிரவாத குற்றங்கள், மற்ற குற்றங்கள் என்று பிரித்துவைத்து தூக்குதண்டனை ரத்து என்ற பரிந்துரைக்கு பதிலாக, முழுமையாக ரத்து செய்திருந்தால் மிகவும் சிறப்புக்குரியதாக இருந்திருக்கும். என்றாலும், பாராளுமன்றம் இந்த பரிந்துரை தொடர்பான விவாதத்தை எடுத்துக்கொள்ளும்போது முழுமையான தூக்குதண்டனை ரத்து என்ற வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...