Tuesday, September 8, 2015

செல்போன் பேச்சு தடைபடுவதா?

logo


ஒரு காலத்தில் ஆடம்பர சாதனமாக இருந்த டெலிபோன், இன்று செல்போன் என்ற பெயரில் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்ற வரிசையில், கையில் செல்போன் என்பதும் சேர்ந்துவிட்டது. பணக்காரர்கள் முதல், ஏழை தொழிலாளிவரை செல்போன் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்றநிலை உருவாகிவிட்டது. உலகம் உங்கள் கையில் என்ற நிலையை செல்போன் ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையாகாது. அரசாங்கமும் இப்போது அனைத்து சேவைகளையும் செல்போன் மூலமாகவே மேற்கொள்ளும் நிலையில், இப்போது ரெயில் டிக்கெட் எடுப்பது என்றாலும் சரி, வங்கி சேவை என்றாலும் சரி, செல்போன்தான் அதற்கு வழி. 125 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில், தற்போது 98 கோடி செல்போன்கள் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் முதல் 70 லட்சம்வரை புதிய செல்போன் இணைப்புகள் கூடிக்கொண்டேபோகிறது. உலகில் செல்போன் மார்க்கெட் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், சமீபகாலங்களாக செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய குறை என்னவென்றால் பேசிக்கொண்டே இருக்கும்போது, இடையில் கால் தடைபட்டுவிடுகிறது. ஒரு நம்பரை போட்டு பேசிக்கொண்டிருக்கும்போது இடையிடையே அந்த கால் தடைபட்டுப்போய்விடுவதால், மீண்டும் மீண்டும் போனில் அந்த இணைப்புக்காக அந்த நம்பரை போடவேண்டியது இருக்கிறது. இதைத்தான் ‘கால் டிராப்’ என்கிறார்கள். இதனால், தேவையில்லாமல் கூடுதலாக கால் செய்வதால் கூடுதலாக செலவு ஒருபுறம், நேரம் விரயம், ஒரு தடவை பேசுவதற்கு 2 அல்லது 3 முறை போன் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் என பல சிரமங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டில் உள்ள செல்போன் இணைப்புகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்திய பிரதமர், சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், செல்போன் கம்பெனிகள் தங்கள் பொறுப்பில் இருந்து நழுவக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளது, பொதுமக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பிரதமர் 45 நாட்கள் காலக்கெடு கொடுத்துள்ளார். இந்த ‘கால் டிராப்’ அதாவது இடையில் பேச்சு தடைபடுவதற்கு காரணம் போதிய அளவு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கப்படாதது, போதிய அளவு செல்போன் டவர்கள் அமைக்கப்படாதது என்று கூறப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் வழங்கவேண்டியது அரசின் கடமை. விரைவில் இதற்கான ஏலத்தை நடத்தி மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும். செல்போன் டவர்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று இப்போது சொல்கிறார்கள். எனவே, அரசு கட்டிடங்களில் அமைக்கவேண்டும். இதற்கிடையில், ‘டிராய்’ என்று அழைக்கப்படும் இந்திய தொலைதொடர்பு ஆணையம் அளித்துள்ள பரிந்துரை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகும். செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே 5 வினாடிக்குள் கால் தடைபட்டால் அந்த காலுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது, 5 வினாடிகளுக்குமேல் என்றால் கடைசி பல்ஸ் ரேட்டுக்கான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது, கால் தடையை ஈடுசெய்யும் வகையில் கூடுதலாக இலவச நேரத்தை ஒதுக்கவேண்டும் அல்லது அதற்கான கட்டணத்தை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்பதுபோல பல பரிந்துரைகளை செய்துள்ளது. எல்லாவற்றையும் விட, ‘கால் டிராப்’ ஆகாத சூழ்நிலையை உருவாக்குவதுதான் சாலச்சிறந்தது. ‘கால் டிராப்’ தொடர்பான ஆய்வு டில்லி, மும்பையில் நடப்பதுபோல, ஒவ்வொரு ஊரிலும் நடத்தி, இந்த குறையே இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024