ஒரு சமுதாயத்தைப் பிடித்து இழுத்து வைத்திருக்கும் பத்தாம் பசலித்தனமான பழக்க வழக்கங்களை ஒழிக்க நாற்பது ஐம்பது ஆண்டுகள்கூட ஆகின்றன. அப்படியும் தீண்டாமை போன்ற பழக்கங்களை இன்னமும் நம்மால் ஒழிக்க முடியவில்லை. ஆனால், பெரும் பாடுபட்டு உருவாக்கிய சில முன்னேற்றங்கள் அற்பமான செயல்களால் சிதைக்கப்படும்போது ஒரு தலைமுறை வாழ்க்கையே பின்னுக்கு இழுக்கப்படுகிறது.
தீண்டாமை ஒழிப்பு, விதவை விவாகம், பெண் கல்வி, பால்ய விவாகங்களைத் தடுத்து நிறுத்துதல் என நூறாண்டுகளாகப் போராடி உருவாக்கப்பட்ட சீர்திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்படுகின்றனவோ என்ற அச்சம் அடி வயிற்றைக் கலக்குகிறது.
உதாரணமாக, சமீப காலங்களில் சிறு நகரங்களிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடக்கும் ஒரு கூத்து இது. 14 வயது தொடங்கி 16 வயதுக்குள்ளேயே சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதைக் கேள்விப்படுகிறோம். சட்டப்படி இது குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். என்றாலும், சட்ட மீறல்கள் சர்வ சாதாரணமாக நிறைவேறுகின்றன. பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும் சிறுமிகளை அவர்களின் படிப்பை பாதியில் நிறுத்தி ஏன் இப்படி குடும்பச் சங்கிலிக்குள் பிணைத்துக் கட்டுகிறார்கள்?
குடும்பத்தின் கவுரவ சின்னம்?
ஒட்டுமொத்தக் குடும்பத்தின் கவுரவமும் பெண் குழந்தையின் மீதுதான் எழுதப்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கட்டப்படுகிறது. ஆண் குடிக்கலாம்; கூத்தடிக்கலாம்; அதனால் குடும்ப கவுரவம் காற்றில் பறந்து விடாது. ஆனால் பெண் கல்வி கற்றால், நாலு எழுத்து படித்தால், சமூகத்தில் பொறுப்புகளைச் சுமந்தால் கவுரவம் காற்றில் பறந்துவிடுமாம். “நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். கழுதையைக் காலாகாலத்தில் கட்டி வைத்துவிட்டால் நம்ம பொறுப்பு கழிந்தது” என்ற எண்ணம் இன்றைக்கும் பெற்றோரிடம் நிலவுவது வியப்பளிக்கிறது.
பள்ளியில் படிக்கும்போதே திருமணம் செய்து வைக்க முயலுகிறார்கள். இத்தகைய திருமணம் காதும் காதும் வைத்தவாறு நடப்பதாகக் கூறப்படுகிறது. பெற்றோரே நடத்தி வைக்கும் ரகசியத் திருமணங்களாகத்தான் இவை நடைபெறுகின்றன. இதை மீறிச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டுத் தடுக்கப்படும் குழந்தைத் திருமணங்களே செய்தியாகி நமக்குத் தெரியவருகின்றன. இதைவிட அதிகமான திருமணங்கள் வெளியுலகம் அறியாமலேயே நடந்து முடிகின்றன.
இவ்வளவுக்கும் திருமணம் நடைபெறும் கோயில்கள், திருமண மண்டபங்கள் இங்கெல்லாம் திருமணம் நடத்துவதற்காக இடத்தை உறுதி செய்ய வரும்போதே மணப்பெண்ணின் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டும் என்பது தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது. இவை அல்லாமல் கிராமங்களில், சின்னச் சின்னக் கோயில்களில் வைத்துத் தாலி கட்டப்படும் திருமணங்கள்தான் சட்ட மீறலாக நடைபெறுகின்றன. உள்ளூர் அளவில் உறவினர்கள் மத்தியில் நடைபெறும்போது யாரும் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.
தங்கள் வசதிக்கேற்ப மணமகனைத் தேர்ந்தெடுத்துத் திருமணத்தையும் முடிக்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் என்றால் அவர்கள் அனைவரின் பாடும் பெரும்பாடுதான். அதிலும் மூத்த பெண் மிகவும் பாவப்பட்டவள். அந்தப் பெண் பிரசவத்திலோ வேறு காரணங்களாலோ மரணமடைந்தால், இரண்டாவது பெண்ணையும் அந்த நபருக்கே மனைவியாக்குவதும் அடுத்த கட்ட நடைமுறை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்ற சென்டிமென்ட் முலாம் அதற்குப் பூசப்பட்டுவிடும்.
இளவயது காதல்
இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பங்கள் பள்ளிப் பருவத்திலேயே காதலையும் நர்சரிப் பள்ளிகள் போல வளர்த்துக்கொண்டிருக்கின்றன. பற்றாக்குறைக்கு நம் திரைப்படங்களும் அதற்குத் தீனி போடுகின்றன. இதனால் பதின் பருவக் காதல் இங்கு தவிர்க்க முடியாத அம்சமாகிறது. இந்த வயதுக்கே உரிய இனக்கவர்ச்சிதான் இது என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை நெறிப்படுத்துபவர்களாகப் பெற்றோர் இருந்துவிட்டால் இந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டுவிட முடியும். அல்லது ‘நல்ல’ ஆசிரியர்களால் இந்தக் காரியத்தைச் செயல்படுத்த முடியும். இல்லையெனில் அந்தக் குழந்தைகள் எந்த விபரீத முடிவையும் நோக்கி நகர்த்தப்படுவார்கள். நாலு பேர் கொண்ட சமூகமே அதை வெற்றிகரமாக நகர்த்தி செயல்படுத்திக் காட்டும்.
இப்போது இன்னொரு ஆபத்து பெரும் பூதமெனக் கிளம்பியிருக்கிறது. சாதி விட்டு சாதி காதலித்துவிட்டால், ‘கவுரவமாக’இருவரில் ஒருவர் காணாமல் போய்விடும் துரதிர்ஷ்டமும் இதில் அடங்கியிருக்கிறது. இதனாலேயே ‘கவுரவம்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்று தங்கள் மகள்களின் இளம் பருவக் கனவுகளைச் சிதைக்கும் ஆயுதமாகத் திருமணத்தைக் கையிலெடுக்கிறார்கள். பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை பள்ளிப் பருவம் என்பது எத்தனை சிக்கல் நிறைந்ததாக இப்போது மாறிப் போயிருக்கிறது?
இந்தச் சூழலில் சில ஆசிரியர்கள் ஆபத்பாந்தவர்களாக இருந்து அவர்களைக் காத்திருக்கிறார்கள். தங்கள் மாணவிகள் யாருக்காவது திருமணம் என்று கேள்விப்பட்டால் உடனடியாகத் தலையிட்டு அதை நிறுத்திவிடுகிறார்கள். சில நேரங்களில் சட்டத்தின் உதவியை நாடவும் அவர்கள் தயங்குவதில்லை.
உரிய வயதை எட்டாத மைனர் பெண் குழந்தைகளுக்குத் திருமணங்களை நடத்துவதில் வழக்கமாக தர்மபுரி மாவட்டம் பேர் பெற்றது. இப்போது அது தென் மாவட்டங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிக்கொண்டிருப்பது மாபெரும் அச்சுறுத்தல். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதம் ஐந்து சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இந்த மாவட்டத்தில் மைனர் பெண்களின் திருமணம் குறித்த புள்ளி விவரக் கணக்கு பகீரென்கிறது. கடந்த 2013-ம் ஆண்டில் 80 திருமணங்களும் 2014-ல் 93 திருமணங்களும் முழுமை பெறாத இந்த 2015-ம் ஆண்டின் எட்டு மாதங்களில் இது வரை 70 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அப்படியானால் சட்டத்தின் பார்வைக்கு வராத, வந்தும் கண்டுகொள்ளப்படாத திருமணங்கள் இதில் எத்தனை?
சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் தோழி ஒருவருடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்ததில் மருத்துவ ரீதியாக அவர் அளித்த தகவல்களும் அதிர்ச்சிகரமானவை. உடலளவில் முழு வளர்ச்சி பெறாத இந்தச் சிறுமிகள் கர்ப்பம் தாங்கவோ, பிள்ளை பெறவோ இயலாதவர்கள். அதை மீறி அவர்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும்போது அதன் பின் விளைவுகளையும் சேர்த்தே அவர்கள் பெற்றெடுக்கிறார்கள் என்றார்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
No comments:
Post a Comment