இசையின் மூலம் தனது இருப்பின் அர்த்தத்தை உணர்ந்தவர்; உணர்த்தியவர்.
அது 1998-ம் ஆண்டு. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற நகரம். பிரபல கட்டுரையாளர் ராமச்சந்திர குஹா ‘தைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி நாளிதழின் பிலாஸ்பூர் பதிப்பைப் பார்க்கிறார். அதன் தலையங்கத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது வாங்கியதைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. கர்னாடக சங்கீதத்தையோ கச்சேரிகளையோ கேட்கும் வாய்ப்பே இல்லாத ஒரு பத்திரிகையாளர், சத்தீஸ்கரின் ஒரு இந்தி நாளிதழ் பதிப்பில் எம். எஸ்ஸைப் பற்றி எழுதிய புகழாரங்களைப் படிக்கும்போது, இந்தியாவை இணைப்பது பாலிவுட் சினிமா மற்றும் கிரிக்கெட் மட்டுமல்ல என்று தாம் உணர்ந்ததாக குஹா குறிப்பிடுகிறார்.
அதற்கு முந்தைய வருடம் பாரத ரத்னா விருது பெற்று, சமீபத்தில் காலமான அப்துல் கலாமைப் போன்றே எம்எஸ்ஸையும் இந்தியாவே கொண்டாடியது. அது அவரது திறமைக்காக மட்டுமல்ல; அவரைவிட இசைஞானம் கொண்ட கலைஞர்கள் இருந்தனர்; இருக்கின்றனர். ஆனால், கலாமைப் போன்றே எளிமையான பின்னணியில் பிறந்து தன்னுடைய நற்பண்புகள், எளிமை மற்றும் ஆத்மபலம் ஆகியவற்றாலேயே புகழ்வானில் மங்காத நட்சத்திரமாய் மின்னுகிறார் எம்.எஸ்.
சிகரம் தொட்ட குரல்
உயர் மட்டத்தில் இருப்பவர்களின் பிடியில் இருந்த கர்னாடக இசை, உலகில் சமூக உயர் அங்கீகாரம் இல்லாத இசை வேளாளர் குடும்பப் பின்புலத்தில் இருந்து வந்து, அதுவும் ஒரு பெண்ணாகச் சிகரத்தில் இடம்பிடித்தது அவரது மனப்பான்மையால்தான். (கர்னாடக சங்கீதத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான சங்கீத கலாநிதியைப் பெற்ற முதல் பெண் அவர்தான்.)
எம்.எஸ்ஸின் இசையில் அப்படி என்ன சிறப்பு? இசை என்பது ஒழுங்கமைக்கப்பட்ட ஓசைதான். ஆயினும் அதை உன்னதமாக்குவது அதன்பின்னே இருக்கும் உணர்வு. ஒரு வார்த்தைகூடப் புரியாவிட்டாலும் வார்த்தையே இல்லாவிட்டாலும் உள்ளத்தில் உணர்ச்சியைப் பொங்க வைப்பது இசை. எம் எஸ்ஸின் இசையின் தனித்தன்மை அதில் கலந்த உணர்வுதான். ராகம், தாளம், பாவம் ஆகிய மூன்றும் இசைக்கு மூன்று தூண்கள் என்றாலும் பாவமே சாதாரண இசையை உன்னதமாக்குகிறது.
கர்னாடக இசையில் ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. ஜி.என். பாலசுப்பிரமணியன், மதுரை மணி போன்றவர்கள் யுவராஜ் சிங் சிக்சர்களாக அடிப்பதுபோல் வாண வேடிக்கை காட்டித் தமது திறமையைக் காட்டுவார்கள். செம்மங்குடி சீனிவாச அய்யருடையதோ ராணுவ ஒழுங்குபோல் கட்டுக்கோப்பாகப் பாடும் கறாரான பள்ளித் தலைமையாசிரியரின் அணுகுமுறை. எம்.டி. ராமநாதனோ குழந்தை ஐஸ்க்ரீமை ரசிப்பதுபோல் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் பாடுபவர். சில சமயம் மூக்கால்கூட குழந்தை ஐஸ்க்ரீமைச் சாப்பிட்டுச் சேட்டை செய்யும்.
இசை அர்ப்பணம்
எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாணி அர்ப்பணிப்பு உணர்வுக்கே முதலிடம் கொடுப்பது. அவரைப் பொறுத்தவரை இசை என்பது ஒரு வேள்வி. அதில் தன்னுடைய ஆத்மாவைக் கரைத்துக்கொண்டு பாடுவதே அதன் லட்சியம். ஆங்கிலத்தில் ‘ஓஷியானிக் ஃபீலிங்’ (Oceanic feeling) என்றழைக்கப்படும் கடலில் கரைவது போன்ற உணர்வை அவரது இசை தரும். பாடும்போது அருமையான சங்கதிகள் வந்தால்கூட ஒரு பெருமிதமோ அளவுகடந்த மகிழ்ச்சியோ அவரிடம் வெளிப்படாது. கண்களை மூடி ஒரு கும்பிடு! அதில் ஒரு ஆன்மிகப் பரவச உணர்வே வெளிப்படும். எம்.எஸ். பழுத்த இறை நம்பிக்கையாளர். ஆயினும் இந்த உணர்வு கடவுள் நம்பிக்கை, மதங்களுக்கு அப்பாற் பட்டது. இதை நாத்திகர்களால்கூட உணர முடியும்.
உணர்ச்சிக்கே முதல் உரிமை கொடுத்ததால் இசை அறிவைப் பிரதானமாகக் காட்டும் சிக்கலான தாளக் கணக்குகள் போன்றவற்றின் பக்கம் அவர் போவதே இல்லை. மூளையால் பாடுவதைவிட இதயத்தால் பாடவே அவர் விரும்பினார். அதற்காக அவரது சங்கீத ஞானம் குறைவானது அல்ல. கம்பரின் ராமாயணத்தின் புகழ் வெளிச்சம் அவர் எழுதிய பிற நூல்களை மறைத்ததுபோல் சுப்ரபாதம், பஜகோவிந்தம் போன்ற சுலோகங்கள், பஜனைப் பாடல்கள் எம். எஸ்-ஸின் கர்னாடக இசைத் திறமைகளைச் சற்றுப் பின்னுக்குத் தள்ளின என்றுகூடக் கூறலாம்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவரது குரல் வளம். சுருதிப் பெட்டியை விழுங்கிவிட்டாரோ என்று வியப்பு கலந்து நகைச்சுவையாகச் சொல்லும் அளவுக்கு மிகவும் சுருதி சுத்தமான குரல் அவருடையது. அக்கால நாடக நடிகர்களைப் போல் மிக அநாயாசமாக உச்ச ஸ்தாயியை எட்டும் குரல். அவரது முதல் ஒலிப்பதிவான ‘மரகத வடிவம்’ என்ற பாடல் இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. பிற்காலத்தில் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டாலும் துளியும் பிசிறின்றி உச்ச ஸ்தாயியை அடைவது கேட்பவர்களுக்குப் பரவசமளிக்கக்கூடியது அவரது குரல். குறியீட்டுரீதியாக அவருக்கு உச்ச ஸ்தாயியில் கரைவது ஒரு ஆன்மிகச் சாதனையாக இருந்திருக்கக்கூடும். கடினமான ராகம் தானம் பல்லவி பாடுவது, எழுபத்தியிரண்டு மேளகர்த்தா ராகங்களால் ஆன ராகமாலிகையைப் பாடுவது போன்ற இசைத் திறமைகளை நிரூபிக்கும் முயற்சிகளையும் அவர் செய்யத்தான் செய்தார். ஆனால், அது தனக்கான தளமல்ல என்பதை உணர்ந்தவர்.
இணையொன்றும் இல்லை!
மிகவும் அற்புதமான உச்சரிப்பு அவருடையது. பாடல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உள்வாங்கிப் பலமுறை பயிற்சி செய்த பின்னே அரங்கேற்றுவார். அவர் எடுக்கும் பாடல்கள் சோடைபோவதே இல்லை. அதனால்தான் ‘குறையொன்றுமில்லை’ போன்ற பாடல்கள் அவரைத் தவிர வேறு யார் பாடினாலும் சாதாரணமாக ஒலிக்கிறது.
எளிய சூழலில் பிறந்து இசையை மேட்டிமைப்படுத்தும் கலாச்சாரத்தின் ஒரு கருவியாகத் தன்னை மாற்றிக்கொண்டார் என்று அவர் மீது குறைகள் சொல்பவர்களும் உண்டு. ஆயினும், அவரது இசை பண்டிதத் தன்மையற்றது; எளிமையானது. கற்பனா சக்தி குறைவானவர் என்று சங்கீத விமர்சகர்கள் சிலர் விமர்சித்துக்கூட உள்ளனர்.
அவரளவில் ‘செய்க தவம். தவமாவது இசை’ என்பதுபோல் இசையின் மூலம் தன் இருப்பின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டார். பணம், புகழ் போன்றவை எல்லாம் அவருக்குப் பொருட்டே இல்லை. அளவுக்கு அதிகமாக நிதியுதவிகளும் நன்கொடைகளும் அளித்தவர் அவர்.
தான் பிறந்த சூழலின் பின்னணியிலிருந்து தனி மனித உன்னத உயரத்தை அடைய அவர் தன்னைக் கரைத்துக்கொண்டு செய்த தவமே அவரது இசை. உடல் காற்றில் கரைந்தாலும் கரையாமல் காற்றினிலே வரும் கீதம் அவருடையது.
- டாக்டர் ராமானுஜம்,
'நோயர் விருப்பம்' நூலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: ramsych2@gmail.com
செப்டம்பர் 16 எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள்
No comments:
Post a Comment