Tuesday, September 1, 2015

கூகுளில் தகவல்கள் மட்டுமில்லை; இனி வேலையும் கிடைக்கும்!...vikatan emegazine

கூகுளில் தேடினால் தகவல்கள் கிடைக்கும் என்பதுதான் இதுவரை நமக்கு தெரியும். ஆனால் கூகுள் தேடலில், இப்போது வேலை வாய்ப்பும் கிடைக்கிறது என்பது தெரியுமா? 

மேக்ஸ் ரோசெட் என்பவர் பொழுதுபோக வில்லை என்று கூகுளை அலசிக்கொண்டிருந்தபோதுதான் வேலை கிடைத்திருக்கிறது. அதிலும் கூகுள் நிறுவனத்திலேயே, என்பது இன்னும் இன்ப அதிர்ச்சி தரும் தகவல்.

உங்களுக்கும் கூட இணையத்தில் தேடும் போது இத்தகைய வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள நீங்கள் புரோமிராமிங் புலியாக இருக்க வேண்டும். இப்படி புரோகிராமிங்கில் கில்லாடியாக இருப்பவர்கள் கூகுளில் வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூட இல்லை, இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது ஏதாவது ஒருவிதத்தில் புரோகிராமிங் மற்றும் கோடிங்கில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினால் கூட போதும் கூகுளிடமிருந்துஅழைப்பு வரும். 

ஆனால் இந்த அழைப்பு ரகசியமானதாக, புதிர்த்தன்மையுடன் குழப்பக்கூடியதாக இருக்கும்.
மேக்ஸ் ரொசெட்டும் இத்தகைய குழப்பத்திற்கு தான் முதலில் இலக்கானார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் கணித பட்டம் பெற்றவரான மேக்ஸ் நிர்வாகவியல் துறையில் வேலை பார்த்து வெறுத்துப்போய், பின்னர் ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு கம்ப்யூட்டர் துறையில் பணியாற்ற விரும்பியவர், இணையம் வழியாக புரோகிராமிங் கற்றுக்கொண்டிருந்தார். 

தன்னுடைய புரோகிராமிங் அறிவை பட்டை தீட்டிக்கொள்வதற்காக மேக்ஸ் சில மாதங்களுக்கு முன், கூகுள் தேடியந்திரத்தில் புரோகிராமிங் சந்தேகம் தொடர்பான தகவலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது வழக்கம் போல நீல நிற இணைப்புகளின் பட்டியலுக்கு நடுவே தனக்கு தேவையான தகவலை அடையாளம் காண முற்பட்ட போது, நடுவே ஒரு புதிரான இணைப்பு அவரது கவனத்தை ஈர்த்தது.

” நீங்கள் எங்கள் மொழி பேசுகிறீர்கள், ஒரு சவாலுக்கு தயாரா?” என்று அந்த இணைப்பு அழைப்பு விடுத்தது. கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் வியப்புடன் அந்த இணைப்பை கிளிக் செய்தபோது புதிய இணைய பக்கம் தோன்றியது. 

அந்த இணைய பக்கம் அவருக்கு அடுக்கடுக்காக புரோகிராமிங் சோதனைகளை வைத்தது. ஒரு ஆர்வத்தில் அந்த புரோகிராம் புதிர்களை எல்லாம் விடுவித்து காத்திருந்தால் ஆச்சர்யப்படும் வகையில் கூகுளில் இருந்து வேலை வாய்ப்பிற்கான அழைப்பு வந்தது.

மேக்ஸ் மகிழ்ச்சியுடன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இப்போது அவர் கூகுள் ஊழியர். கூகுளில் பணியாற்ற வேண்டும் என்பது தனது கனவாக இருந்தாலும் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த போது கூகுள் தன்னை தேடல் குறிப்பு மூலம் அடையாளம் கண்டு அழைப்பு விடுத்ததாக மேக்ஸ் இந்த எதிர்பாராத வாய்ப்பு பற்றி உற்சாகமாக குறிப்பிடுகிறார்.

கூகுள் வேலைவாய்ப்புக்கு பொருத்தமான நபர்களை கண்டறிவதற்காக பல புதுமையான உத்திகளை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. வேலைவாய்ப்புக்கான தேர்வு என்று தெரியாத வகையில் நூதனமான முறையில் புரோகிராமிங் சோதனைகளில் பங்கேற்க வைத்து திறமையானவர்களை கூகுள் அடையாளம் காணும் விதம் பற்றி பல சுவாரஸ்யாமான கதைகள் தொழில்நுட்ப உலகின் இருக்கின்றன. 

மேக்சிற்கும் இத்தகைய ரகசிய வழி ஒன்றில் தான் கூகுளில் வேலை கிடைத்திருக்கிறது.

கூகுளில் வேலை கிடைத்த அனுபவம் பற்றிய மேக்ஸ் எழுதியுள்ள பகிர்வு:http://thehustle.co/the-secret-google-interview-that-landed-me-a-job

- சைபர்சிம்மன் 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024