Tuesday, September 15, 2015

தடுத்திருக்கலாம்! By ஆசிரியர்

Dinamani


மத்தியப் பிரதேசம், ஜாபுவா மாவட்டம், பெட்லவாட் நகரில் வெடிமருந்துக் குவியல் வெடித்ததில் 89 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை யாவும் கொந்தளிக்கும் மனநிலையை ஆற்றுப்படுத்தும் அறிவிப்புகள் மட்டுமே.
பெட்லவாட் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வணிகக் கட்டடத்தில், ஓர் உணவகம், பல்வேறு கடைகள் இடம்பெற்றிருந்த பகுதியில் ஜெலட்டின் வெடிமருந்துகளை ஒருவர் விற்க முடிகிறது என்பதே அப்பகுதியின் அரசு நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் பெருத்த அவமானம். அதிலும் குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக இவ்வாறு அக்கடையின் உரிமையாளர் ராஜேந்திர கசவா சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று வந்திருக்கிறார் என்று அரசு அதிகாரிகள் கூறுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர கசவா சகோதரர் சிறு வெடி விபத்தில் இறந்தது மூடி மறைக்கப்பட்டதாக இப்போது வாய் திறக்கிறார்கள். அப்போதே அதிகாரிகள் இதைப் பற்றி பேசியிருந்தாலும், ஊடகத்துக்குத் தகவலைக் கசியச் செய்திருந்தாலும், இந்தச் சட்டவிரோத வியாபாரத்தை தடை செய்ய முடியாது போனாலும்கூட, குறைந்தபட்சம் வேறு இடத்துக்கு, பொதுமக்கள் கூடுகிற இடமல்லாத ஓர் இடத்துக்கு மாற்றவாகிலும் வழி பிறந்திருக்கும்.
பத்து ஆண்டுகளாக ராஜேந்திர கசவா இவ்வாறு சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று வருகிறார் என்பது தெரிந்திருந்தும் அல்லது ஜெலட்டின் குச்சிகளை விவசாயக் கிணறு வெட்டும் பயன்பாட்டுக்கு விற்பனை செய்ய அவர் அனுமதி பெற்றிருந்தாலும்கூட, அளவுக்கு அதிகமான வெடிமருந்தை இருப்பில் வைத்திருந்ததற்காக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்தான் உண்மையில் கொலைக் குற்றவாளிகள்.
கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்கிய, இடவசதியை சரிபார்க்கத் தவறிய அனைத்து அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டதைப்போலவே இந்த விபத்திலும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த வெடிமருந்து விற்பனையைத் தடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தலைமறைவான ராஜேந்திர கசவாவைக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, இதற்குக் காரணமான அனைத்து அரசு அதிகாரிகளையும் இப்போது கைது செய்வதில் என்ன தடை இருக்க முடியும்?
இந்த வளாகத்தில் இருந்த உணவகத்தில்தான் முதலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும் அதன் பிறகே வெடிமருந்துகள் வெடிக்கத் தொடங்கின என்றும் பார்வையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அருகருகே ஓர் உணவகத்தையும் ஒரு சட்டவிரோத வெடிமருந்து விற்பனைக் கடையையும் எவ்வாறு ஒரு நகர மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இதுகுறித்து யாருமே ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லையா? எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் எல்லாமும் மௌனமாக இருந்தனவா? மிக ஆச்சரியமாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் நமக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. தவறுகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லை, முடியவில்லை என்றாலும், வெளிச்சம் போட்டுக்காட்டப் பல வழிமுறைகளை தகவல் தொழில்நுட்பம் தந்துவிட்டிருக்கிறது. முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்றவற்றின் மூலம் தவறுகள் வெளிச்சம் போடப்படுவது அதிகரித்து வருகிறது என்றாலும்கூட, இன்னும் சமுதாயத்தின் பொறுப்புணர்வு அதிகரிக்காததுதான் மிகப்பெரிய குறை.
தன்னார்வ அமைப்புகளும், விழிப்புணர்வுடன் கூடிய இளைய தலைமுறையினரும் முனைப்புடன் தவறுகளைத் தட்டிக்கேட்க முற்படுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. அவர்களுக்கு இருக்கும் அதே முனைப்பும், துடிப்பும் கூடுதல் பொறுப்புள்ள உயர் பதவியில் இருப்போருக்கும், நடுத்தர வயதினருக்கும்கூட உண்டு. அவர்களும் சற்று பொதுநலச் சிந்தனையுடன் செயல்பட்டால், இதுபோன்ற தவறுகளைக் கணிசமாகக் குறைத்துவிட முடியும்.
பள்ளி, கோயிலுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுப்பதைப் போல, இத்தகைய அனுமதி பெற்ற அல்லது அனுமதி பெறாத ஜெலட்டின் விற்பனைக் கடையை உணவகத்துக்கு அருகிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட அந்நகர மக்கள் முன்வைக்கவில்லை என்றால், இந்தக் கோர விபத்தை அவர்களாகவே தேடிக் கொண்டனர் என்றுதான் பொருள்.
தீபாவளி நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்காக பட்டாசுகள் வாங்கும் பெற்றோர் அவற்றைப் பேருந்தில், ரயிலில் எடுத்துச் சென்றால் வெடிமருந்துத் தடைச் சட்டம் பாயும். பெற்றோர் தம் வீட்டுக்கு நடந்தா செல்ல முடியும்? அதிகாரிகளுக்கு கவலையில்லை. சாதாரண மக்களிடம் கறாராகச் சீறும் அதிகாரிகள், நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத பட்டாசு வியாபாரிகளிடம் "பெட்டி'ப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள்.
கிணறு வெட்ட ஜெலட்டின் கொண்டு செல்லும் விவசாயிகள் மீது சட்டம் பாயும். அனுமதி வாங்கினாயா என்று கேட்கும். ஆனால், ஜெலட்டின் பதுக்கி வைத்திருப்போரிடம் எதையும் கேட்காது. ஏனென்றால், அவர்கள் "கொடுத்து' வைத்தவர்கள்.
இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி, தவறுகளை வெளிச்சம்போட்டுக் காட்ட நாம் தயாராக வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். சட்டத்தையும், சட்டம் நமக்குத் தரும் உரிமைகளையும் பயன்படுத்த வேண்டும். பெட்லவாட் வெடி விபத்து தவிர்த்திருக்க முடியாதது அல்ல, தடுக்கப்படாதது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024