பிரதீப் மாதவன்
வாழ்க்கையின் அடுத்தடுத்த கணங்களில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை அறிய முடியாது. திரைப்படத்தில் நாம் காணும் கதாபாத்திரங்களுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பான சஸ்பென்ஸ் உணர்வைத் தந்தால் அதுவே ‘சக்ஸஸ் திரைக்கதை’யாகிவிடுகிறது. இந்த வெற்றிச் சூத்திரம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் வகைப் படங்களுக்கு மட்டுமல்ல; எல்லா வகைப் படங்களுக்குமே பொருந்தக் கூடியதுதான்.
அதனால்தான் தமிழ் சினிமாவின் முதல் சமூகப் படம் வெளியாகும் (மேனகா 1935) முன்பே முதல் திகில் படம் வெளியாகிவிட்டது. பி.எஸ்.வி ஐயர் இயக்கத்தில் 1934-ல் வெளியான ‘கவுசல்யா’ அந்த அந்தஸ்தை எடுத்துக்கொள்கிறது என்றாலும் ‘நல்லதங்காள்’ படத்தில் தன் குழந்தைகளைக் கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொல்லும் காட்சியைப் பார்த்து பயந்து தியேட்டரை விட்டு வெளியே ஓடியவர்கள்தான் முப்பதுகளின் தமிழ் சினிமா ரசிகர்கள். பின்னாளில் தமிழின் திகில் மற்றும் சஸ்பென்ஸ் வகை சினிமாவைத் தட்டி எழுப்புவதற்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரின் கதைகள் உதவின.
சிவாஜி வாங்கிய அடியும் காரும்
ஆனால் கதைப்போக்கில் திடீர் அதிர்ச்சியை அளித்த முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் கே.பாலச்சந்தர், சி.வி. ஸ்ரீதர் ஆகியோரின் வருகைக்குப் பிறகு 50-களில் அறிமுகமாகத் தொடங்கின. சி.வி. ஸ்ரீதரை மிகச் சிறந்த திரைக்கதாசிரியராக அறிமுகப்படுத்திய படம் 1954-ல் வெளியான ‘எதிர்பாராதது’ திரைப்படம். சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா சிவாஜியின் தந்தை. மனைவியை இழந்தவர்.
இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்துகொள்கிறார். இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை யாகிவிடுகிறார். நாகையா திடீரென இறந்துபோக, ஒருநாள் சிவாஜி, பத்மினியைத் தொடுகிறார். அப்போது அதிர்ச்சியடையும் பத்மினி சிவாஜியை வெறிகொண்டு அடிப்பார். இந்தக் காட்சி ரசிகர்களை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர்களை “கலிகாலம்...!” என்று சொல்லவைத்தது.
இந்தக் காட்சி படமானபோது பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை நிஜமாகவே அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் கிளம்பிப்போன சிவாஜி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவரது வீட்டுக்குப் போனார். சிவாஜியை சமாதானம் செய்து அவருக்கு புத்தம் புது ஃபியட் கார் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்தார். அதுதான் சிவாஜியின் முதல் கார். படத்தின் கதை மட்டுமல்ல படப்பிடிப்பில் நடந்த சம்பவமும், சிவாஜிக்கு முதல் கார் கிடைத்ததும் கூட எதிர்பாராமல் நடந்ததுதான்.
ஆனால் ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பாராத முழுநீள சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் திரைப்படங்கள் பயமுறுத்த ஆரம்பித்தது அறுபதுகளுக்குப் பிறகுதான்.
ஒரே கதை மூன்று படங்கள்
ஆச்சரியகரமாக 1965-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மூன்று சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் ஒரே கதையமைப்புடன் வெளியாகி, அந்த மூன்று படங்களுமே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. ‘வெண்ணிற ஆடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஜெயலலிதா அறிமுகமாகி சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் அவரைக் கனவுக் கன்னியாக மாற்றியது ‘ஆயிரத்தில் ஒருவன்’.
அந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் வெளியான படம்தான் ‘நீ’. இதில் இரட்டை வேடங்களை முதல்முறையாக ஏற்றிருந்தார் ஜெயலலிதா. ஜெய்சங்கர்தான் கதாநாயகன். கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதை என்பதால் ஜெயலலிதா ஜெய்சங்கர் என்று ஒரு கார்டில் சரிசமமாக டைட்டில் போடப்பட்டது. சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனத்தில், கனக சண்முகம் இயக்க, டைரக்ஷன் மேற்பார்வை செய்தவர் ராமண்ணா.
இந்தப் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து வெளியானது கே.ஆர். விஜயா இரட்டை வேடத்தில் நடித்திருந்த ‘இதயக் கமலம்’. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படத்தை இயக்கியவர் காந்த். 1964-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாத்லாக்’(Paatlag) என்ற மராத்தி மொழிப் படத்தை தழுவியது இந்தப் படத்தின் கதை. ‘மேரா சாயா’ என்ற தலைப்பில் பாத்லாக் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் சுனில் தத்தும் சாதனாவும் நடித்துக்கொண்டிருக்கும்போதே, பாத்லாக் தமிழில் மூன்று வெவ்வேறு படங்களாக ஒரே மாதத்தில் வெளிவந்துவிட்டது. இவற்றில் ‘நீ’ முந்திக்கொண்டது.
நீ படத்தில் ஜெயலலிதாவின் வசீகரம் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஆனால் ‘இதயக் கமலம்’படத்தில் கமலா, விமலா ஆகிய இரண்டு வேடங்களில் வந்த கே. ஆர். விஜயாவின் மாறுபட்ட நடிப்புக்காக அவருக்குப் பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தன.
இதே கதையைக் கொஞ்சம் வரலாற்றுப் பூச்சுடன் தீற்றிக்கொண்டு வெளியான அந்த மூன்றாவது படம் ‘கலங்கரை விளக்கம்’. புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த எம்.ஜி.ஆர். சரோஜாதேவி நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர். கதாநாயகிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரிந்தும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தது ஆச்சரியமான விதிவிலக்கு.
இந்த மூன்று வெற்றிப் படங்களிலும் ‘இதயக் கமலம்’ படத்தின் திரைக்கதையும் வசனமும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தமைக்கு ஆரூர்தாஸின் திறமை முக்கிய காரணமாக அமைந்தது.
நோய்வாய்ப்பட்டு இறந்துவிடும் காதல் மனைவி கே.ஆர். விஜயாவைத் தகனம் செய்து, ஈமக்கடன்களை முடித்துவிட்டு ஒடிந்த மனதுடன் வீட்டுக்குள் நுழைந்து அமரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் முன்னால் வந்து நின்று “நான்தான் உங்கள் மனைவி” என கே.ஆர். விஜயா சொல்ல, படத்தின் சஸ்பென்ஸ் நொடிகள் ஆரம்பமாகிவிடும். கே.ஆர். விஜயாவுடன் கடுமையான வாக்குவாதங்கள் செய்யும் ரவிச்சந்திரன், உண்மையை அறியத் துடிக்க, முடிச்சுகள் வரிசையாக அவிழத் தொடங்கும். இப்படியாக, ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்திய படம் இது. எது உண்மை எது பொய் என ரசிகர்களைத் தெளிவாகக் குழப்பித் தெளிய வைத்த படம்.
இந்த மூன்று படங்களுமே சஸ்பென்ஸ் த்ரில்லர்களாக இருந்தாலும் இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், கதையையும் கதாநாயகனின் இக்கட்டான சூழ்நிலையும் தூக்கிப்பிடித்து ரசிகர்களின் வயிற்றைப் பிசையும் த்ரில்லர் அவஸ்தையையும் சேர்த்துப் பரிமாறியவை. ‘இதயக் கமலம்’ படத்தில் ‘நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ...’, ‘மலர்கள் நனைந்தன பனியாலே...’, ‘என்னதான் ரகசியமோ இதயத்திலே...’, ‘ தோள் கண்டேன் தோளே கண்டேன்...’. ‘ உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...’ ஆகிய பாடல்கள் கே.வி. மகாதேவன் இசையில் ரசிகர்களைக் கட்டிப் போட்டன.
இந்த மூன்று படங்களும் வெளியான 1965-ன் இறுதியில் வெளியாகி வெற்றிபெற்ற சஸ்பென்ஸ் த்ரில்லர், பி.எஸ். மூர்த்தி இயக்கத்தில் வெளியான ‘ஒரு விரல்’. பண்டரிநாத், தங்கம் என்று முன்னணியில் இல்லாத நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் வெற்றியைக் ருசித்த இந்தப் படத்துக்கு நடுங்க வைக்கும் பின்னணி இசையைத் தந்தவர் வேதா. சஸ்பென்ஸ் படம் என்றாலே வேதாவின் இசைதான் என்ற முத்திரை விழக் காரணமாக அமைந்த படம் அது.
ஜெய்சங்கர் ஜெயலலிதா இணைந்து நடித்த ‘நீ’ பட வெற்றியின் பாதிப்பில் அடுத்த ஆண்டே ‘யார் நீ?’ என்ற படத்தைத் தயாரித்தார் நடிகர் பி.எஸ். வீரப்பா. இந்தப் படத்திலும் ஜெயலலிதாவும் ஜெய்சங்கரும் மீண்டும் ஜோடி சேர, இதுவும் வெற்றிப் படங்களின் வரிசையில் சேர்ந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்.
துரத்திய பறவை
ஆனால் இந்த மூன்று படங்களுக்கும் முன்னோடியான த்ரில்லர் படமென்றால் அது சிவாஜி முதன்முதலாகத் தயாரித்த ‘புதிய பறவை, 1964-ல் வெளியான இந்தப் படம் சிவாஜி, சரோஜா தேவி மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்தது. பணமிருந்தும் நிம்மதி இன்றி ஒருவித ஏக்கத்தில் சுற்றி வருவார் நாயகன் சிவாஜி. தான் விரும்பும் சரோஜாதேவியிடம் தனக்கு ஏற்கெனவே மணமானதைச் சொல்லி முதல் மனைவி இறந்துவிட்டதாகக் கூறுவார்.
மகிழ்ச்சியாகப் போகும் அந்தப் புதிய காதலின் நாட்களில், இறந்ததாகச் சொன்ன அவரின் முதல் மனைவி மீண்டும் வந்து கண் முன்னே நிற்க, அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் அடிவயிற்றைப் பதம்பார்க்கும் அதிர்ச்சியைப் பாய்ச்சிய படம். இன்று இந்தப் படத்தைப் புதிதாகப் பார்க்கும் இளைய தலைமுறை ரசிகர்களைக் கூட நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய படம். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ…’, ‘எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி’ உள்ளிட்ட பாடல்களாலும் கதை சொன்ன படம் ‘புதிய பறவை’.
No comments:
Post a Comment