புதுடெல்லி,
கருப்பு பணம் பற்றிய தகவல்களை தாமாக முன்வந்து அறிவிப்பதற்கு இன்றே கடைசி நாள். மத்திய அரசு வழங்கிய 3 மாத அவகாசம் முடிவுக்கு வருகிறது. இப்படி அறிவிக்காதவர்கள்மீது சிறைத்தண்டனையுடன் கூடிய நடவடிக்கைகள் பாயும்.கருப்பு பண ஒழிப்பு சட்டம்
கருப்பு பணத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் கருப்பு பணம், சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பாக ‘வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் (புதிய வரி விதிப்பு) சட்டம்–2015’ என்ற பெயரில் ஒரு சட்டமும் இயற்றப்பட்டு, கடந்த ஜூலை 1–ந் தேதி முதல் அது அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, வெளிநாட்டு வருமானம், சொத்துகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்தால், 3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
வெளிநாட்டு சொத்துகள், வங்கி கணக்குகள் பற்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறினால், அதற்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். கணக்கு தாக்கல் செய்து தகவல்களை மறைத்திருந்தாலும் அல்லது சரியான கணக்கினை கூறாது இருந்தாலும் இதே தண்டனை உண்டு.3 மாதம் அவகாசம்
இந்த சட்டத்தின்படி, சிறைத்தண்டனையில் இருந்து தப்பிக்க ஏற்ற வகையில், வெளிநாட்டு வருமானம், சொத்துகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் ஒரே தடவை தாமாக முன்வந்து அறிவிக்க 3 மாத கால அவகாசத்தினை மத்திய அரசு வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. அது ஜூலை 1–ந் தேதி அமலுக்கு வந்தது. அந்த அறிவிப்பின்படி–
* செப்டம்பர் 30–ந் தேதிக்குள் தாமாக முன்வந்து வெளிநாட்டு சொத்துகள், வருமானம் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு, 60 சதவீத வரியும், அபராதமும் விதிக்கப்படும். சிறைத்தண்டனை கிடையாது. அவர்கள் வரியையும், அபராதத்தையும் செலுத்துவதற்கு டிசம்பர் 31–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும்.
* செப்டம்பர் 30–ந் தேதிக்குள் வெளிநாட்டு சொத்துகள், வருமானம் பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் விட்டு விட்டால், அவற்றின் மதிப்பில் 120 சதவீத வரி, அபராதம் விதிக்கப்படும்.
இந்த 3 மாத கால அவகாசம் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முடிவுக்கு வருகிறது.நீட்டிப்பு இல்லை
இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தரப்பில் உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏராளமானோர் தாமாக முன் வந்து இது தொடர்பான படிவங்களை வருமான வரித்துறையிடம் நிரப்பி அளித்துள்ளனர். ஆன்லைன் வழியாகவும் அவற்றை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரையில் இப்படி பலரும் ஆன்லைன் வழியாக தகவல்கள் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நடவடிக்கை பாயும்
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் கூறுகையில், ‘‘கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், அதுகுறித்த தகவல்களை அளிக்காமல் விட்டு விட்டால், அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. கருப்பு பணம் குறித்த விவரங்களைத் தாமாக முன் வந்து அறிவிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசத்தை பயன்படுத்தாவிட்டால், அவர்கள் வேண்டுமென்றே வெளிநாட்டு சொத்துகள் குறித்த தகவல்களை மறைக்கிறார்கள் என்றே கருதப்படும். இப்படிப்பட்டவர்கள் சட்டத்தை தவிர்க்கிறபோது, அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டியது வரும்’’ என குறிப்பிட்டார்.
எனவே தாமாக முன் வந்து கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று நள்ளிரவுக்குள் வருமான வரித்துறையிடம் அளிக்காதவர்கள் மீது சிறைத்தண்டனையுடன் கூடிய நடவடிக்கைகள் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment