Saturday, September 5, 2015

நல்லாசிரியர் யார்?

Dinamani



By பா. நாகலட்சுமி

First Published : 05 September 2015 01:41 AM IST


"மாதா பிதா குரு தெய்வம்' என்ற மந்திர மொழி நமது பண்பாட்டை உணர்த்தும் உன்னத மொழியாகும். கற்றுக் கொடுக்கும் ஆசிரியரை உயர்வாக மதிக்கிறோம்; தெய்வமாகத் துதிக்கிறோம். திறமையாக, அன்பாக, அக்கறையாகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மாணாக்கர் மனத்தில் தனியாசனம் உண்டு.
"கற்பித்தல்' என்பது வேலையன்று; அது ஓர் உன்னதமான பணி; தொண்டு; சேவை. இதனை உணர்ந்து ஆசிரியப் பெருமக்கள் தம் பணியை ஆற்ற வேண்டும். மாணவச் செல்வங்களைத் தம் சொந்தக் குழந்தைகளாகக் கருதுகின்ற தாய்மை உள்ளம் ஆசிரியர்களுக்கு வேண்டும்.
ஆசிரியன் என்ற சொல் ஆசு + இரியன் எனப் பிரிந்து பொருள் தரும். "ஆசு' என்பதன் பொருள் குற்றம் என்பதாகும். "இரியன்' என்பதன் பொருள் கெடச் செய்பவர் என்பதாகும். மாணவரது குற்றம், குறைகளைக் கெடச் செய்யும் ஆசிரியர்கள், தாம் குற்றங்குறைகட்கு அப்பாற்பட்டவராய் இருத்தல் வேண்டும். மாணாக்கர் என்ற சொல் மாண் + ஆக்கர் எனப் பிரிந்து நின்று மாண்பினை ஆக்கிக் கொள்பவர் என்ற பொருள் தரும்.
கற்றுக் கொடுக்கும் பாடத்தில் ஆழங்காற்பட்ட அறிவு ஆசிரியருக்குத் தேவை. அப்போதுதான் மாணாக்கர் முன் தன்னம்பிக்கையோடு, கம்பீரமாக நின்று கற்பிக்க முடியும். நல்லாசிரியருக்கு உரிய தன்மைகளைக் கூறும் நன்னூல் என்ற இலக்கண நூல் "கலை பயில் தெளிவு' என்று இதனைக் கூறுகிறது.
உலகில் துறைதோறும் புதுமைகள் மலர்கின்றன; நாள்தோறும் புதுமைகள் வளர்கின்றன. அவற்றைக் கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர்களது கற்பித்தல் பணி முழுமை பெறும்; அப்பொழுது மட்டுமே முழுமை பெறும்; செம்மை பெறும். கற்ற விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் சொல்வன்மை ஆசிரியர்களின் அடிப்படை இயல்பாக அமைதல் வேண்டும். "கட்டுரை வன்மை' என இதனை நன்னூல் குறிப்பிடுகின்றது.
மாணவர் மனம் கொள்ளும் வகையில் பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும். மாணவர்கள் பல தரத்தினர்; பல நிலையினர். சிலருக்குக் கற்பூர புத்தி இருக்கும். சிலருக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தர வேண்டியிருக்கும்.
மற்றுமொரு முக்கியமான விஷயத்தை ஆசிரியர்கள் மனங்கொள்ள வேண்டும். அவர்கள் பேரறிஞர்களாக இருக்கலாம். ஆனால், கற்பிக்கும்போது, மாணவர்கள் நிலைக்குத் தம்மைத் தாழ்த்தி அவர்களது அறிவுக்கு எட்டும்படி கற்பிக்க வேண்டும்.
யாருடைய பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமாகக் (செப்டம்பர் 5) கொண்டாடுகிறோமோ அந்த மாபெரும் ஆசிரியரும், தத்துவ மேதையுமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் கூறுகிறார்: 'A good teacher must himself be a fellow traveller in exciting pursuit of knowledge' ("நல்ல ஆசிரியர் என்பவர் அறிவுத் தேடலில் மாணவனுடன் சக பயணியாகப் பயணிக்க வேண்டும்').
'The true teacher is he who can immatiately come down to the level of the student and transfer his soul to the student's soul' ("மாணவர் நிலைக்கு இறங்கி வந்து தமது ஆன்மாவையே மாணவனிடத்து மாற்றியமைக்கும் வல்லமை பொருந்தியவரே உண்மையான ஆசிரியர்') என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதை மறத்தலாகாது.
கற்பித்தல் என்பது ஒரு வழிப் பாதை அன்று. மாணவரும் அதில் பங்கு பெற வேண்டும். வினாக்களைக் கேட்டுப் பதில் கூறத் தூண்டி அதன் மூலம் அவர்களைச் சிந்திக்க வைப்பதும், சிந்தனையைத் தூண்டி அவர்களை வினாக்கள் கேட்க வைப்பதும் கற்பித்தலின் முக்கியமான கூறுகள். கற்பிக்கும் முறையில் புதுமைகளைப் புகுத்துதல் வேண்டும்.
பாடத்தோடு, வாழ்க்கைப் பாடமும் நடத்த வேண்டிய கடப்பாடு உடையவர்கள் ஆசிரியர்கள். நேர்மை, வாய்மை, ஒழுக்கம், மனிதாபிமானம், சமுதாய அக்கறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புணர்வு ஆகியனவும் ஆசிரியர் கற்றுத்தர வேண்டிய பாடங்கள். இவைதவிர, அன்றாட நாட்டு, உலக நடப்புப் பற்றியும் மாணவர்கள் அறியுமாறு செய்தல் வேண்டும்.
ஆசிரியரிடத்து கற்பித்தல் கலைக்குத் துணை போகும் நல்லியல்புகள் இருத்தல் வேண்டும். அவற்றுள் தலையாயது பொறுமை. இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகில் மாணவர் சிந்தனையைத் திசை திருப்பும் விஷயங்கள் பல உள்ளன. அந்த மாய வலையில் மாணவர்கள் சிக்காத வண்ணம் தடுப்பதற்கும், சிக்கிய மாணவர்களைப் பத்திரமாக மீட்டெடுப்பதற்கும் பொறுமை என்னும் ஆயுதம் ஆசிரியர்க்குத் தேவைப்படுகிறது.
"எந்த நாட்டில் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாகக் கற்பிக்கிறார்களோ அந்த நாடு முன்னேறும். ஆசிரியர்கள்தான் அச்சாணிகள். அவர்கள் முகமலர்ச்சியுடன் கற்பிக்க வேண்டும்' என்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளரும், "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' இதழின் ஆசிரியருமான சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ் அண்மையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறுமையும், அருளும் கொண்ட ஆசிரியப் பெருமக்கள் மாணவர்கள் திசை மாறிச் செல்லும்போதும், தீயவற்றைச் செய்யும்போதும் அவர்களை வருத்த நினைக்க மாட்டார்கள்; திருத்தவே முற்படுவர். தமது "மனக்குகைச் சித்திரங்கள்' என்ற நூலில், ஆத்மார்த்தி, தமது பள்ளித் தலைமை ஆசிரியரைப் பற்றிக் கூறியுள்ள கருத்தும் ஒரு நிகழ்வும் சுட்டத்தக்கன.
1993-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. இரவு படிக்கும்போது "ஒலியும் ஒளியும்' பார்க்க வேண்டும் என்ற மோகத்தில் வகுப்பறை பல்பில் நாலணா காசை வைத்து, ஸ்விட்ச் போட்டு மின் தடை ஏற்படுத்தினர் மாணவர்கள்; பின்னர் கூப்பாடு போட்டு அனைவரும் வீடு திரும்பினர்.
மறுநாள் தலைமை ஆசிரியர் நடன குருநாதன், மாணவர்களைப் பள்ளி மைதானத்துக்கு அழைத்து விசாரித்தார். தவறு செய்தவர்கள் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரை தாம் வெயிலில் நின்றார்; மாணவரை வகுப்புக்கு அனுப்பினார்.
"எனக்கு வழங்கப்பட்ட 12 ஆண்டு கற்றல் வாய்ப்புகளில் நான் மனம் கசிந்து உருகிக் கலைந்து வேறொருவனாக மாறியது அன்றுதான். எங்களை அடித்து இருந்தால் அதுவும் ஒரு நிகழ்வென்று போயிருக்கும். ஆனால் அவரது அஹிம்சை, அவரை வருத்திக் கொண்ட விதம் எனக்குள் பல கசடுகளை அறுத்தது.
அதன்பின் வியர்வைத் தெப்பத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்த நடன குருநாதன், தவறை ஒப்புக் கொண்ட மூன்று மாணவர்களையும் கடுமையாகத் தண்டிக்காமல் மன்னித்துப் பள்ளியில் மீண்டும் அனுமதித்தார்' என்கிறார் ஆத்மார்த்தி.
கோடிக்கணக்கான மாணவர்களுக்கு உந்துசக்தியாக இப்போதும் விளங்கிவரும், அண்மையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தனது ஆசிரியர் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
"எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் முழு ஈடுபாட்டுடன் மனப்பூர்வமாக பாடம் நடத்துவார். அவர் பாடம் சொல்லிக் கொடுப்பதை ஒரு கடமையாகக் கருதாமல் அதை ஒரு லட்சியமாகவே நினைத்துப் பாடம் நடத்துவார்.
அந்த ஆசிரியரின் பழக்க வழக்கங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு ஓர் ஆசிரியராக மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். மாணவர்களுக்குப் பாடம் புரியவில்லை என்று சொன்னால் ஒருபோதும் கோபப்பட மாட்டார்'.
ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டுகிறார் கலாம்: "ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையையும் செம்மைப்படுத்த வேண்டும். லட்சியம் உருவாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்குப் புரியும் வரை பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியை கடமையாகக் கருதாமல் பாக்கியமாகக் கருத வேண்டும்'.
கலாம் தன் வாழ்நாள் முழுக்க நினைவு கூர்ந்த பெயர் லடிஸ்லாஸ் சின்னத்துரை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விண்வெளி இயற்பியல் பாடம் போதித்த ஆசிரியர். தனது மரணத்துக்கு 9 நாள்களுக்கு முன்புகூட திண்டுக்கல் வந்த கலாம், தனது ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்து, கெüரவித்து நினைவுகளில் மூழ்கினார்.
91 வயதாகும் சின்னத்துரை, கலாம் பற்றி பெருமிதம் ததும்பப் பேசுகிறார்: 1952-54இல் கலாம் என்னிடம் படித்தார். விண்வெளி இயற்பியலில் அவருக்கு கூடுதல் ஆர்வம். நிறைய சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே இருப்பார்.
மூன்று மணி நேரம் பாடம் நடத்தி, பாடத்தை முக்கால் பாகத்தோடு நிறுத்தி விடுவேன். நிறைவுப் பகுதியை நூலகம் சென்று படித்துத் தெரிந்துகொண்டு வந்து நாளை சொல்ல வேண்டும் என்று கூறிவிடுவேன். கலாம் ஆர்வமாக நூலகத்தில் படித்துவிட்டு வந்து சரியாக விளக்கம் சொல்லி சபாஷ் பெற்றுவிடுவார்.
தென் மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் என்னை அவர் சந்திக்காமல் சென்றதே இல்லை. 60 ஆண்டுகள் கடந்தும் ஆசிரியரை மதித்து ஒரு மாணவர் ஆசிபெற்றுச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று கூறும்போது சின்னத்துரை முகத்தில் கண்ணீர் வழிந்தோடுகிறது.
கலாமுக்கு சிவசுப்பிரமணிய அய்யர், சின்னத்துரை போல, ஹெலன் கெல்லருக்கு ஓர் ஆசிரியர் அருமையாக வாய்த்தார். அவர் ஆன் சல்லிவன் மேரி; விவேகானந்தருக்கு அருமையாக வாய்த்த ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். நம்மில் பலருக்கும் அருமையான ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நிச்சயம் கிடைத்திருக்கும்.
அர்ப்பணிப்புதான் ஆசிரியர் பணியின் அடையாளம். ஒரு மாணவன் சமூகத்தின் மிக உயரிய பொறுப்புக்குப் போகலாம். ஆனால், ஆசிரியர் கடைசிவரை ஆசிரியராகவே இருப்பார். அந்த மாணவன், என் வளர்ச்சிக்குக் காரணம் இந்த ஆசிரியர்தான் என்று கைகூப்பும்போதுதான் ஆசிரியரின் மனம் நிறைவடைகிறது.
விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் ஆசிரியர் வித்தாகப் புதைந்து கிடக்கிறார் என்பதே உண்மை.

கட்டுரையாளர்:
பேராசிரியை (ஓய்வு).

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...