Thursday, September 24, 2015

கல்விக் கடன் செலுத்தாதவரை பணியிலிருந்து நீக்க முடியுமா? - பயனாளி - வங்கிக்கிளை மோதல்

Return to frontpage

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின் ஊழியரான குப்புசாமி, தன் மகளுக்கு வாங்கிய கல்விக் கடனை செலுத்தாததால், மகளை வேலையைவிட்டு நீக்க வங்கி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

புகார் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “என் மகள் மீராவின் பல் மருத்துவப் படிப்புக்காக மன்னார்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் 2006-ல் கல்விக் கடன் பெற்றேன். 2 தவணைகளில் ரூ.1.98 லட்சம் வழங்கினர். என் பெயரில் தனிச் செலவுக் கடன் (Personal Loan) இருப்பதாகச் சொல்லி 3-வது தவணையை தர மறுத்துவிட்டனர். அந்த பாக்கியைச் செலுத்தியதும், 26.05.2010-ல் ரூ.2.47 லட்சத்தை ஒரே தவணையாக வழங்கினர்.

இந்நிலையில், 09.10.2014-ல் ரூ.9,98,850 கல்விக் கடன் பாக்கி இருப்பதாக தகவல் வந்தது. ரூ.4.45 லட்சம் வாங்கியதற்கு இவ்வளவு பெரிய தொகையை சொல்கிறீர்களே? என்று கேட்டதும் முரண்பட்ட கணக்குகளைச் சொல்லி, பின்னர் ரூ.7,59,467 பாக்கி இருப்பதாக 24.08.2015-ல் ஒரு கடிதம் அனுப்பினர்.

இதற்கிடையில், அதே வங்கி யில் எனக்கிருந்த நகைக் கடன் பாக்கியைச் செலுத்திவிட்டு நகையைத் திருப்ப முயன்றபோது, கல்விக் கடன் நிலுவையில் இருப்பதால், தவணையை வரவு வைக்க உள்ளதாகக் கூறி நகையை ஏலம் விட்டனர்.

இதுவரை, 4-5 தவணைகளாக ரூ.39,000 வரை கட்டியுள்ளேன். ஆனால், மாதம் ரூ.30,000, ரூ.40,000 கட்டுங்கள் என்கின்றனர். மின்வாரியத்தில் காசாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாலும், என் மகள் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணிபுரிவதாலும், வங்கி கூறும் தொகையைக் கட்ட இயலவில்லை. எனினும், இருதய நோயாளியான எனக்கு வங்கி அதிகாரிகள் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால் நியாயம் கேட்டு, ரிசர்வ் வங்கி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பி னேன். அதற்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இப்போது முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியில் இருக்கும் என் மகளை வேலையை விட்டு நீக்கும்படி மருத்துவத் துறையினரை வங்கி அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்” என்றார்.

கொடுத்தது ரூ.5,49,600

இதுகுறித்து மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை மேலாளர் ஆர்.தியாகராஜனிடம் கேட்டபோது, “நான், 2013-ல் இங்கு மேலாளராகப் பொறுப்பேற்றேன். வங்கியில் உள்ள பதிவேடுகளின்படி மீராவுக்காக, அவர் படித்த கல்லூரி பெயருக்கு, குப்புசாமியிடம் மொத் தம் ரூ.5,49,600 கல்விக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்று, 10 ஆண்டுகளாகியும், அவர் மாதத் தவணையை கட்டாததால், வட்டி சேர்ந்து விட்டது. முறையாக கடன் தவணை செலுத்தியிருந்தால் இந்த அளவுக்கு வட்டி உயர்ந்திருக்காது.

அரசு அளித்த வட்டி தள்ளு படியும் கிடைத்திருக்கும். அதனால் தான், கூடுதலாக கட்டும்படி கூறினோம். மாதாந்திர கடன் தொகை, அதற்கான பட்டியல் அனைத்தையும் குப்புசாமி பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்ட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எங்கள் தரப்பில், அவருக்கு எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் கடன் தொகையை கட்டக் கூடாது என்பதற்காக, பல் வேறு குறுக்கு வழிகளை கையாள் கிறார்.

தனிச் செலவுக் கடனுக்காக, கல்விக் கடன் தவணை 6 மாதங் கள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. அடமானம் வைத்து மூன்றாண்டு களுக்கு மேலாகிவிட்டால் நகை களை ஏலம் விடுவதுதான் வங்கி நடைமுறை. கல்விக் கடன் தொடர் பாக மக்கள் நீதிமன்றத்துக்கு குப்புசாமியை அழைத்து, ‘அசலை மட்டுமாவது ஒரே தவணையில் செலுத்துங்கள்’என்றோம். ஆனால், அவர் அசலையும் குறைக்க வேண்டும் என்கிறார். இதெப்படி முடியும்? அவருடைய மகள் கல்விக் கடன் பெற்றிருப்பது குறித்து மருத்துவத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். வேலையை விட்டு நீக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கவில்லை” என்றார்.

வங்கிகள் செய்யும் 26 தவறுகள்

இப்பிரச்சினை தொடர்பாக பேசிய கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.ராஜ்குமார், “தனிச் செலவு கடன் பாக்கிக்காக கல்விக் கடன் தவணையை நிறுத்தி வைக்கவோ, கடன் வாங்கியவரின் மகளை வேலையைவிட்டு நீக்கச் சொல்லவோ வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வங்கிகள் செய்யும் 26 வகையான தவறுகளைச் சரிசெய்யுங்கள் என்று மனிதவள மேம் பாட்டு அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு சில வங்கி களைக் குறிப்பிட்டு 27.05.2015-ல் கடிதம் எழுதியுள்ளது” என்றார்.

தவணை விவரத்தை தெரிவிக்கவில்லை

பல் மருத்துவர் கு.மீரா கூறியபோது, “கல்விக் கடன் வாங்கும்போது, படித்து முடித்த பின்னர், மாதம் ரூ.8,000 கட்ட வேண்டும் என்றனர். எத்தனை மாதம் கடன் கட்ட வேண்டும், அதற்கான மாதாந்திர கடன் நிலுவைப் பட்டியல், மாதத் தவணைத் தொகை எவ்வளவு என்பது போன்ற எந்த விவரத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024