ஸ்டீவ் ஜாப்ஸ் என்றொரு மனிதர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் கேட்ஜெட்ஸ் விரும்பிகளை பித்து பிடிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒரு விதம். இளந் தலைமுறையினரின் நாடி பிடித்து, அவர்களின் ரசனை அறிந்து வடிவமைப்பதில் இந்நிறுவனத்துக்கு நிகர் யாரும் இல்லை. ஆம் ஆப்பிள் என்ற சொல் உருவாக்கியுள்ள பிம்பம் அழகானது, தனித்துவமானது, நம்பிக்கையானது எல்லாவற்றையும் தாண்டி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தைத் தொடுவது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இளந்தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையுமே கவர்ந்து இழுக்கிறது.
நேர்த்தியான வடிவமைப்பும், போட்டி நிறுவனங்களை ஓரங்கட்டும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஆப்பிளை உலகின் முதல்தரமான தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்துள்ளது.
இத்தனைக்கும் ஆப்பிள் புதிதாக எதையும் உருவாக்குவதில்லை. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளவற்றை தனது தொழில்நுட்பத்தால் மிக சிறப் புடையதாக்குகிறது.
இந்த நிறுவனத்திடம் அசைக்க முடியாத, எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த கணிப்பு உள்ளது. இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம் என்கின்றனர் தொழில்நுட்ப உலகினர். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தி பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தங்களது மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு புதிதாக ஐந்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
ஐ போன் 6 எஸ், ஐ போன் 6 எஸ் பிளஸ், ஐ-பாட் புரோ, ஆப்பிள் டிவி உள்ளிட்ட தயாரிப்புகளை வெளியிடுகிறது. இதற்கிடையே ஐ-பாட் புரோ-வுக்கு துணைக் கருவியாக ஆப்பிள் பென்சிலையும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வரிசைகள் மற்றும் ஐ பாட் வரிசைகளைத் தாண்டி, அந்த நிறுவனம் பிற துறைகளில் மேற்கொண்டு வரும் தயாரிப்புகளும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகின்றன.
ஆப்பிள் வாட்ச் போன்றவை அந்த வகையில் வெற்றி பெற்றதுதான். அதுபோல தற்போது வெளியிட உள்ள ஆப்பிள் பென்சிலும் ஐ- பாட் மற்றும் ஐ-ஓஎஸ் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்கிறது தொழில்நுட்ப உலகம்.
புதிதாக வெளியிட உள்ள ஐ-பாட் புரோவின் சைஸ் சற்றே பெரியது. இதன் துணைக் கருவியாகத்தான் ஆப்பிள் பென்சில் வருகிறது. இந்த வெளியீடு மூலம் மைக்ரோசாப்ட் சர்பேஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி வரிசை விற்பனையில் ஆப்பிள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
தொழில் முறையிலான கலைஞர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்களுக்கு ஆப்பிள் பென்சில் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். கிட்டத்தட்ட புதிய வாசலை இது திறந்துள்ளது. தவிர வேலை திட்டங்களை எளிமையாக ஐ-பாடில் எழுதி சேமித்துக் கொள்ளவும் செய்யலாம். அதாவது காகிதத்தில் பென்சிலைக் கொண்டு எழுதுவது, வரைவது போல ஆப்பிள் பென்சில் கொண்டு ஐ பாடிலேயே வடிவமைப்பு வேலைகளைச் செய்து கொள்ளலாம்.
பெருவாரியான கலைஞர்கள் இப்போதே இந்த பென்சிலை வரவேற்கத் தொடங்கி விட்டனர். ஆப்பிள் தயாரிப்புகள் நம்பகமானவை மற்றும் தரமானவை என்கிற பார்வை மக்களுக்கு எப்போதும் இருக்கச் செய்கிறது. அதன் இதர தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பை போல ஆப்பிள் பென்சிலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.
ஆப்பிள் பென்சில்
பாய்ண்டட் நிப் பென்சிலைப் போலவே வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியாக இருக்கிறது ஆப்பிள் பென்சில். இதன் முனையிலுள்ள சென்சார்கள் மிகக் கூர்மையான வடிவில் உள்ளன. மெலிதான கோடுகள் அல்லது பட்டையான கோடுகளையும் இதன் மூலம் வரையலாம். ஆப்பிள் பென்சிலைப் பயன்படுத்துவது ஓவியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதுவரை விரல்களுக்குள் உலகத்தை அடக்கிய தொழில்நுட்பம், இனி அதற்கு எந்த வேலையுமில்லை என்பதை ஆப்பிள் பென்சில் மூலம் நிரூபிக்க தயாராகிறது.
ஒரு முறை சார்ஜர் ஏற்றினால் 12 மணி நேரம் பயன்படுத்தலாம். முக்கியமாக ஆப்பிள் பென்சில் 30 நிமிடங்கள் செயல்படுவதற்கான மின்சக்தியை 15 விநாடிகளில் எடுத்துக் கொள்கிறது. பென்சிலின் மேற்புறத்தில் சார்ஜர் கனெக்டர் உள்ளது. இது காந்த சக்தி மூடி மூலம் மூடப்பட்டுள்ளது. ஐபாட், மற்றும் ஐபாட் பிளஸ் மூலமாகவும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.
ஐபாட் பென்சிலை தற்போது ஐபாட் புரோவில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு விநாடிக்கு 240 முறை சிக்னல் பெறுகிறது. இது இரண்டும் ப்ளூடூத் மூலம் இணைகிறது.
ஐபாட் புரோ
தற்போது கொண்டுவர உள்ள ஐ-பாட் புரோ குறித்து தொழில்நுட்ப வாடிக்கையாளர்கள் குறிப்பிடும்போது; ஆப்பிள் மேக் புக் வடிவில் ஒரு ஐ-பாட் என்கின்றனர்.
32.8 செமீ திரை, 2732*2048 ரெசலூஷன் கொண்டுள்ளது. ஆப்பிள் 13 அங்குல மேக் புக்கைவிட 1 செமீ அளவே சிறியதாக உள்ளது. தவிர ஐ-பாட் புரோவை பார்த்த மாத்திரத்திலேயே இதர ஐபாட் மாடல்களிலிருந்து பிரித்து பார்த்துவிட முடியும்.
ஏற்கெனவே உள்ள மாடல்களில் உள்ளது போலவே டச் ஐடி ஹோம், பவர் மற்றும் இதர பட்டன்கள் இருந்தாலும், புரோ வை தனித்துக் காட்டுகிறது அதன் ஸ்பீக்கர்கள். இதர டேப்ெலட் கணினி தயாரிப்பாளர்கள் இதுவரை தவற விட்ட இடம் இது. இரண்டு பக்கமும் ஸ்பீக்கர்கள் உள்ளன. ஸ்பீக்கர்களை ஸ்வைப் செய்து கொள்ளலாம். ஹெட்போன் இல்லாமல் பாடல்களை கேட்கும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் மாடலை வெளியிட்டபோது அதன் உப கருவியாக சர்பேஸ் பேனாவையும் கொண்டு வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறவில்லை. விளம்பரம் மற்றும் வெளிப்படுத்தும் தன்மையில் மைக்ரோசாப்ட் கோட்டை விட்டது. மைக்ரோசாப்ட் செய்த தவறு சர்பேஸ் பேனா ஸ்கீரினில் பயன்படுத்த மட்டுமே என வெளிப்படுத்தியதுதான்.
இப்போது மீண்டும் நாம் அறிய வருவது இதுதான்: ஆப்பிள் புதிதாக எதையும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்வது. ஆப்பிள் பென்சில் மற்றும் ஐபாட் புரோ இணையர்கள் ஸ்டோர்களில் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளன. ஆப்பிளின் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெற்றே வந்திருக்கிறது. ஏனென்றால் அது இளைஞர்களை பிடித்தாட்டுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இளந்தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையுமே கவர்ந்து இழுக்கிறது.
நேர்த்தியான வடிவமைப்பும், போட்டி நிறுவனங்களை ஓரங்கட்டும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஆப்பிளை உலகின் முதல்தரமான தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்துள்ளது.
No comments:
Post a Comment