Tuesday, September 15, 2015

திரையில் ஒளிர்ந்த தெய்வீகம்!

Return to frontpage





By வினுபவித்ரா

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு தொடக்கம் செப்டம்பர் 16

வாய்க்குள் வீணையை வைத்திருப்பவள் என்று போற்றப்பட்ட அந்தச் சிறுமியின் தொண்டையைத் தடவி ஹெலன் கெல்லர் சொல்லிய வார்த்தைகள் இவை. “நீ தேவதையைப் போல பாடுகிறாய்”. அந்தச் சிறுமியின் குரல்தான் எழுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறைகளைக் கடந்து இன்றும் நம்மை மயக்கத்தில் வைத்திருக்கிறது. அதுதான் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் குரல் நிகழ்த்திய மாயம். காதலும் பக்தியும் குழைந்து உறைந்திருக்கும் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது.

மக்கள் நினைவில் நீங்காத பாடகர், தேசபக்தர், தேசிய அடையாளம் என எல்லாவற்றையும் தாண்டி அவர் விரும்பி அணியும் பட்டுப் புடவையின் ஊதா நிறத்துக்கே ‘எம்.எஸ் ப்ளூ’ என்று பெயர் வரும் அளவுக்கு மக்கள் நினைவுகளில் ஓவியமாய்ப் பதிந்த வர். பாரம்பரிய இசையுலகுக்கு எம்.எஸ். வழங்கிச் சென்றிருக்கும் பங்களிப்பு காலத்தால் கரைக்க முடியாத பொக்கிஷம்.

திரையுலகுக்கு மிகக் குறைந்த பங்களிப்பே செய்திருந்தாலும் சில படங்களின் மூலமே தனிப்பெரும் நட்சத்திரமாக ஆகி தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையும் வசீகரித்தார். திரைப்படங்களில் நடித்து அவற்றில் அவர் பாடிய பாடல்கள், இசையில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் பிரியமான பிம்பமாக எம்.எஸ்-ஸை உயர்த்திப் பிடித்தன.

வசீகரமான பெரிய கண்கள், குங்குமத் திலகம், மினுங்கும் வைரத்தோடு, மூக்கின் இருபுறமும் துலங்கும் மூக்குத்திகள், தலையில் எப்போதும் தவழும் ஜாதி மல்லிப்பூ என வாழ்நாள் முழுவதும் ஒரு இலச்சினையைப் போல வலம் வந்தவர்.

11 வயதில் தனது முதல் மேடை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கி, புகழைத் தன்னை நோக்கி ஈர்த்த சுப்புலட்சுமி தனது 21 வயதில் தமிழ் சினிமாவின் தந்தை கே. சுப்ரமணியத்தால் ‘சேவாசதனம்’ தேசபக்தி திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், சுப்புலட்சுமியின் திரைப் புகழை உலகறியச் செய்தவர்கள் இருவர். ஒருவர் அவரது கணவர் டி.சதாசிவம். இன்னொருவர் அவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்த எல்லிஸ் ஆர். டங்கன். அவர் ஹாலிவுட்டிலிருந்து ஒளிப்பதிவில் பயிற்சி பெற்று, 1935-ல் தனது நண்பர் மணிலால் டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். மணிலால் டாண்டனுக்கு உதவியாகப் பணிபுரிந்த படம் நின்றுபோனது. அடுத்து, தமிழிலும் இந்தியிலும் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்த டங்கன் தமிழிலும் இந்தியிலும் 17 திரைப்படங்களை இயக்கினார்.

‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்குவதற்கான நிதி உதவிக்காக எம்.எஸ் ஏற்கெனவே ‘சாவித்ரி’ திரைப்படத்தில் கணவர் சதாசிவத்தின் வலியுறுத்தலால் நாயகியாக நடித்திருந்தார். டங்கனும் ஆனந்த விகடனில் தொடராக வந்திருந்த சதி லீலாவதியைத் தமிழில் எடுத்துத் தனது திரைப் பயணத்தைத் தமிழில் தொடங்கியிருந்தார். விகடன் பத்திரிகை வழியாக சதாசிவத்தை சந்தித்த எல்லீஸ் ஆர்.டங்கன், ‘சகுந்தலை’ மற்றும் மீரா’ ஆகிய திரைப்படங்களில் எம்.எஸ்-ஐ ஒப்பந்தம் செய்தார். சகுந்தலையும் மீராவும்தான் அவருக்கு பக்திப் பாடகர் என்ற தெய்வீக பிம்பத்தை நிலைப்படுத்திய படங்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீக அழகை அடையாளம் கண்டு திரையில் சரியாக வெளிப் படுத்திய பெருமை டங்கனையே சேரும். எம்.எஸ்-ன் முகத்துக்கு பிளாஸ்டர் வார்ப்பெடுத்து, நுட்பமாக அவதானித்து அவர் முகத்துக்கு வெவ்வேறு கோணங்களில் பொருத்தமான ஒளி யமைப்பை உருவாக்கியவர் அவர்.

1940-ல் எடுக்கப்பட்ட சகுந்தலை படத்தின் 70% காட்சிகள் வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை. தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் பவன் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியாக இருக்கும் இடத்தில்தான் அக்காலகட்டத்தில் நியூடோன் ஸ்டுடியோ இருந்தது. அதன் பின்புறம்தான் மீராவும் சகுந்தலையும் படம்பிடிக்கப்பட்டன என்கிறார் மோகன் வி.ராமன்.

மீராவில் எம்.எஸ் ஏற்ற கதாபாத்திரம் தனித்தன்மையும் உறுதியும் கொண்ட ஆளுமையாக வெளிப்பட்டிருப்பதைப் படம்பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்கிறார் திரைப்படத் திறனாய்வாளரான கே.ஹரிஹரன்.

தமிழ் சினிமாவில் அர்த்த பூர்வமான ‘க்ளோஸ் அப்’ காட்சிகளை அறிமுகப்படுத்திய எல்லிஸ் ஆர். டங்கனின் சிறந்த படம் மீரா என்கிறார்கள் விமர்சகர்கள். மீராவின் படப்பிடிப்பில் நடந்த அரிய நிகழ்வுகளில் ஒன்றைத் தனது சுயசரிதையில் பதிவுசெய்துள்ளார் எல்லிஸ் ஆர்.டங்கன்.

“மீரா படத்தின் ஒரு காட்சி குறித்து எனக்கு இப்போதும் பெருமிதம் உண்டு. எம்.எஸ்-ஸுக்கு அழகிய பெரிய கண்கள். அவர் பங்கேற்கும் பாடல் ஒன்றில் அந்த அழகிய கண்களை மட்டும் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்திருந்த சிறப்பு ஒளிச்சாதனத்தைப் பயன்படுத்தி அவரது கண்களைப் படம் பிடித்தேன். கண்களுக்கு மேலும் கீழும் டிப்ஃயூசன் திரையை அமைத்துப் படம்பிடித்தேன். ஃபைனல் கட்டில் அவரது கண்களின் க்ளோசப் மட்டுமே தெரியும். அது திரையை நிறைப்பதாக இருக்கும். அற்புதமான ஓவியம் போன்ற விளைவு அது” என்கிறார்.

மீரா படப்பிடிப்பின் ஆரம்பத்தில் ஆங்கிலம் பேசத் திணறிய எம்.எஸ், மீரா படப்பிடிப்பின் முடிவில் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார் என்பதைக் குறிப்பிடும் எல்லிஸ் ஆர்.டங்கன், ஒரு முழுமையான திரைநட்சத்திரமாக தன் திறன்களை பரிபூரணமாக்கிக்கொண்டவர் எம்.எஸ் என்கிறார்.

மீரா திரைப்படத்தில் கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களையும் எம்.எஸ்தான் பாடினார். அவற்றில் ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் இன்றைக்குக் கேட்பவர்களையும் உறைய வைத்துவிடும் அனுபவமாக இருக்கிறது. மீராவில் அவர் பாடிய பாடல்கள்தான் ‘இந்தியாவின் குயில்’ என்ற பட்டத்தை சரோஜினி நாயுடுவிடம் அவருக்குப் பெற்றுத்தந்தது.

அற்புதமான இசைத்திறன், பேரழகு, புகழ் ஏறாத தெய்வீக ஆளுமை என எல்லாப் பொக்கிஷங்களும் இணைந்த எம்.எஸ்ஸை அவர் வாழ்ந்த காலத்தில் புகழாதவர்கள் குறைவு எனலாம். பாரத் ரத்னாவாக அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்-ஸுக்கு ஆந்திர மாநிலத்தின் கோயில் நகரமான திருப்பதியின் மையப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் சிலையும் மும்பை சண்முகாநந்தா சபாவில் அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் சிலையும் எல்லைகளைக் கடந்த இசைச் சொரூபம் எம். எஸ். சுப்புலட்சுமி என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...