Monday, September 21, 2015

பெண் எனும் பகடைக்காய்: குழந்தைப் பராமரிப்பில் ஆண்களுக்குப் பங்கில்லையா?



‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி. ஊர்வசி அவசரம் அவசரமாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருப்பார். குழந்தை அழுதுகொண்டிருக்கும். அதைச் சமாதானப்படுத்திவிட்டு, டிபன் பாக்ஸில் மதிய சாப்பாட்டை அடைத்துக்கொண்டு, குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கணவரிடம்(!?) ஒப்படைத்துவிட்டு, பஸ்ஸைப் பிடிக்க ஓடுவார். ஆனாலும் குழந்தையின் நினைவு மனசுக்குள் வந்து வந்து போகும்.

பெண் வேலைக்குப் போக, கணவன் என்ற ஆண் வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்வது எந்தளவு சாத்தியம்? படத்தில் சம்பந்தப்பட்ட அந்தக் கணவன் கதாபாத்திரம், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், குடும்பப் பொருளாதாரச் சுமையை மனைவி ஏற்றுக்கொள்ள, அவர் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.

இனிதான் நம் கேள்வி எழுகிறது. கணவன் வேலைக்குப் போகிறவராக இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையை வீட்டிலிருந்து பார்த்துக்கொள்பவர் யார்? வீட்டில் பெரியவர்கள் யாராவது இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் குழந்தையை ஏதாவது காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு மனைவி வேலைக்குப் போய் வர வேண்டும். அதுவும் முடியாத நிலை என்றால்? பெண் பேசாமல் வேலையைப் புறக்கணித்து விட்டு வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். குழந்தை வளர்ப்பு பெண்ணுக்கானது என்பது இங்கு எழுதப்படாத சட்டம்.

கூட்டுக் குடும்பங்கள் உடைந்து சிதறிய பின், பணிபுரியும் பெண்களுக்குக் குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் பெரும் சுமையாகத்தான் இருக்கின்றன. ‘கொடிக்குக் காய் பாரமா?’ என்ற கேள்வியெல்லாம் இங்கு கதைக்கு உதவாது. கருவுற்றதிலிருந்தே அதற்கான முன் தயாரிப்புகளைப் பெண் எதிர்கொள்ளும் சூழ்நிலைதான் இங்கே நிலவுகிறது.

அரசுப் பணியாளரின் அருமருந்து

மகப்பேறு விடுப்பு என்பது பெண்ணைப் பொறுத்தவரை மிகப் பெரும் வரப்பிரசாதம். 1961-ல் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுப்பை அனுமதித்தது. அதன் பின் அதையே ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது. இப்போது வரையிலும் அதுவே நடைமுறையில் உள்ளது. பெரும்பாலும் அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். மத்திய அரசுப் பணியில் மேலும் சில சலுகைகள் சமீப ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. குழந்தைகளுக்கு 18 வயது ஆகும்வரை எப்போது வேண்டுமானாலும், தொடர்ச்சியாக என்றில்லை, தேவைப்படும்போதெல்லாம் இரண்டு ஆண்டு காலத்துக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் என்றால் மூன்று மாதங்கள் முடிந்ததும் கைப்பையும் உணவு டப்பாவும் மட்டுமல்லாமல் குழந்தையின் நினைவையும் சுமந்துகொண்டு பஸ்ஸோ, ரயிலோ பிடித்து அலுவலகத்துக்கு ஓட வேண்டும்.

வலியும் வாதையும்

விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் காலம் என்பது ஒரு தாய்க்கு மிகவும் வலியைத் தரும் அனுபவம். மனதளவில் மட்டுமல்ல, உடல் ரீதியாகவும்தான். பால் கட்டிக்கொண்டு வலியால் துடிக்கும் பெண்கள், அதை வெளியே சொல்ல முடியாமல் கண்ணீரை மறைத்துக்கொண்டு நம் கண் முன் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் குழந்தையின் ஒரு வயதுவரை பாலூட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்களே, அதெல்லாம் தனியார் நிறுவனங்களின் காதில் விழுவதில்லை. நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொண்டல்லவா அதை நிறைவேற்ற வேண்டி யிருக்கிறது? பாலைப் பீய்ச்சிப் பத்திரப்படுத்த எல்லோருக்கும் வசதியிருப்பதில்லை. அப்படியே பத்திரப்படுத்தினாலும் அதை எடுத்துக் குழந்தைக்குப் புகட்டக் கண்டிப்பாக ஒரு ஆதரவும் துணையும் மிக மிக அவசியம் இல்லையா? அதனால்தான் நிறைய குழந்தைகள், பாட்டிமார்களின் கைகளில் அடைக்கலமாகிறார்கள்.

இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழல் பற்றிச் சில தோழிகளுடன் விவாதித்தபோது, இரவுப் பணி என்பதே நிர்பந்திக்கப்பட்டவர்களான பி.பி.ஓ. பணியாளர்கள்கூட அதிலிருந்து விலக்கு பெற்றிருக்கிறார்கள். ஆனால் பெண் மருத்துவர்கள், செவிலியர், டெலிபோன் ஆபரேட்டர்கள் இந்தப் பிரச்சினையை இப்போதும் எதிர்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பிரசவ கால விடுப்பு அளிப்பதிலேயே இப்போது பல சிக்கல்கள் எழுகின்றன. அரசு நிறுவனங்களில் விடுப்பில் செல்பவர்களின் பணியைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக ஆண்கள், பேறு கால விடுப்பில் செல்லும் பெண்ணை ஒரு விரோதி போலவே பார்க்கும் பார்வையும் உண்டு. தனியார் நிறுவனங்களில் கொஞ்சம் பெரிய நிறுவனங்கள் கருணை காட்டினாலும் சிறிய நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவதுதான் இப்போது நடைமுறை.

கருவுற்றதாலேயே வேலையை விட்டு விலகச் சொன்ன ‘மாபெரும்’ வரலாறுகளும், சம்பந்தப்பட்ட பெண் அதை எதிர்கொண்டு நீதிமன்றத்தின் உதவியுடன் முறியடித்த கதைகளும் இந்த நவீன காலத்தில் சமீபத்தில் நிகழ்ந்திருக்கின்றன. விடுமுறை அளித்தாலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் பதவி உயர்வு போன்றவை பெரும் கேள்விக்குறி. தகவல் தொழில்நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சி கண்ட நிறுவனங்களே இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்றன. படித்த பல பெண்கள் தங்கள் தொழில்வாழ்வைப் பணயம் வைத்துத்தான் பிள்ளைகளைப் பெற்று, வளர்க்க வேண்டிய நிலை. குழந்தைக்கு ஐந்து வயது ஆகும்வரை இவை ஒரு பெண்ணுக்கு நிர்பந்திக்கப்பட்டவை. விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பான்மை என்பது மேற்சொன்னவாறுதான்.

எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாமல் தங்கள் குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் ஒரு பிரிவாக ஒருங்கிணைக்கப்படாத, முறைப் படுத்தப்படாத வேலைகளில் பல பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் அரசின் உதவிகளும் சலுகைகளும் கிடைப்பது எப்போது?

தந்தைக்கும் பங்குண்டு

மீண்டும் ‘மகளிர் மட்டும்’ படத்துக்கு வருவோம். மாலையில் வேலை முடிந்து வீடு வந்து சேரும் ஊர்வசி, ‘ஆய்’ போன குழந்தையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும் கணவனைப் பார்த்துப் பதறிப் போவார். இதுதான் அச்சு அசலாகப் பெண்களின் குணம். இயல்பிலேயே அது ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. தான் கவனிக்க வேண்டிய பணிகளைக் கணவர் செய்கிறாரே என்ற பதைப்பு, ஒரு வித குற்ற உணர்வு. இது தேவையற்றது. தந்தையரும் குழந்தைகள் மீது உரிமை கொண்டவர்கள் இல்லையா? பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டியதற்கும் பாலூட்ட வேண்டியதற்குமான உடற்கூறு பெண்ணுக்கானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆணும் குழந்தையைப் பராமரிப்பது சாத்தியமே. அன்புடன் அரவணைக்கும் இரு கைகளால் சோறு அள்ளி ஊட்டவும் ‘ஆய்’ போன குழந்தைக்கு அலம்பிவிடவும் அவர்களாலும் முடியும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

கொசுறு

மகப்பேறு தேதிக்கு ஒரு மாதம் முன்பு தொடங்கி எட்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சருக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதை அளிக்க வேண்டும் என்பதும் அவர் கோரிக்கை. சீக்கிரமா முடிவெடுங்க அமைச்சரே!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024