அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் வேலியில் நேற்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசினார். கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உட்பட பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் மோடி பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் பல கருத்துகளை ஒரு ஒரு வரியாக எல்லோரையும் கவரும் வகையில் குறிப்பிட்டார். அதன் விவரம் வருமாறு:
* உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையையும் மாற்றியுள்ளது சிலிகான் வேலி.
* உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சந்தித்துள்ளேன்.
* முகநூல் உட்பட இவைதான் நமது உலகின் அண்டை வீட்டாராக உள்ளன.
* முகநூல் மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால், அதுதான் மக்கள் தொகை அதிகம் கொண்ட 3-வது நாடாக இருந்திருக்கும்.
* கூகுள் ஆசிரியர்களை குறைத்துவிட்டது. மிகவும் விரும்பப்படுவதாக உள்ளது.
* ட்விட்டர் எல்லோரையும் நிருபர்களாக்கி உள்ளது.
* போக்குவரத்து விளக்குகள் வேலை செய்ய சிஸ்கோவின் ரவுட்டர்கள்தான் சிறந்தவை.
* நீங்கள் விழித்திருக்கிறீர்களா, தூங்குகிறீர்களா என்பது இப்போது முக்கியமில்லை.
* நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா ஆப் லைனில் இருக்கிறீர்களா என்பது முக்கியம்.
* நமது இளைஞர்களின் விவாதம் எல்லாம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் அல்லது விண்டோஸ் பற்றியதாகவே உள்ளது.
* இவை எல்லாம் சிலிகான் வேலியில் உள்ள உங்களால்தான் சாத்தியமாகி இருக்கின்றன.
இவ்வாறு மோடி பேசினார்.
அவர் ஒவ்வொரு வரிகளாக சொல்லச் சொல்ல, பிரபல நிறுவனங்களின் அதிகாரிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தன்னுடைய சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் கூறி, இந்தியாவில் உள்ள கிராம பெண்கள்கூட இப்போது தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்று மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
மோடி மேலும் பேசுகையில் கூறியதாவது:
நீண்ட பயணம் செய்யாமல், சாகசம் செய்யாமல், சிறிய தீவில் உள்ளவர்களைக் கூட தொடர்பு கொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவி உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்போன் மூலம் பணத்தை வேறு ஒருவர் கணக்குக்கு மாற்ற முடிகிறது.
இந்தியாவில் குக்கிராமத்தில் உள்ள ஒரு தாய், தனக்கு பிறந்த குழந்தையை எளிதில் காப்பாற்ற முடிகிறது. குக்கிராமத்தில் உள்ள குழந்தை நல்ல கல்வியை பெற முடிகிறது. இவை எல்லாமே டிஜிட்டல் புரட்சியால்தான்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒருவர், இந்தியாவில் உடல்நலம் இல்லாமல் உள்ள தனது பாட்டியுடன் தினமும் ஸ்கைப் மூலம் பேசி ஆறுதல் சொல்கிறார். விவசாயிகள் தங்கள் நிலத்தின் மதிப்பை அறிந்துகொள்ள முடிகிறது, மீனவர்கள் அதிக மீன்களைப் பிடிக்க முடிகிறது. ‘செல்பி வித் டாட்டர்’ என்ற தலைப்பில் தனது மகளுடன் புகைப்படம் எடுத்து ஹரியாணாவைச் சேர்ந்த தந்தை வெளியிடுகிறார். அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது.
இவை எல்லாமே சிலிகான் வேலியில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் டிஜிட்டல் புரட்சியால்தான்.
இவ்வாறு மோடி பேசினார்.மோடியின் பேச்சைக் கேட்ட பிரபல நிறுவன அதிகாரிகள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
No comments:
Post a Comment