லட்சாதிபதி ஆக வேண்டுமா? ஒரு கோடீஸ்வரர் விமான போக்குவரத்தை தொடங்கினால் எளிதாக லட்சாதிபதி ஆகலாம். விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் சொன்ன இந்த ஜோக் மிகப் பிரபலம். ஆனால் இந்த ஜோக் இண்டிகோ நிறுவனத்துக்கு பொருந்தாது.
கடந்த மார்ச் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1,304 கோடி ரூபாய். இதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது நிகர லாபம் நான்கு மடங்கு அதிகம். கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததால் நிகர லாபம் உயர்ந்தது என்று எளிதாக நாம் கடந்து விட முடியாது. இண்டிகோ கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஏழு நிதி ஆண்டுகளாக நிகர லாபத்தில் இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பல விமான நிறுவனங்கள் சிரமத்தில் இருக்கும் போது இண்டிகோ மட்டும் தனித்து தெரிகிறது.
என்ன காரணம்?
இண்டிகோவின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச அளவில் லாபமீட்டும் நிறுவனமாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஒரே நிறுவனத்தின் விமானத்தையே பயன்படுத்துகிறது. சவுஸ்வெஸ்ட் போயிங் நிறுவனத்தின் விமானங்களை பயன்படுத்துவது போல இண்டிகோ ஏர்பஸ் விமானங்களையே பயன்படுத்துகிறது. ஒரே நிறுவனத்தின் விமானங்களை தொடர்ந்து வாங்கும் போது அதிக தள்ளுபடி கிடைக்கும். தவிர பராமரிப்பு, அதற்கான பணியாளர்கள் என இதர செலவு ஆகாது.
இண்டிகோ எல்சிசி பிரிவில் செயல்படும் நிறுவனமாகும். குறைந்த கட்டணத்தில் செயல்படும் விமான நிறுவனம்.
குறைந்த கட்டணத்தில் செயல்பட் டாலும், அடிக்கடி தள்ளுபடி கொடுக்காது. இதில் பிஸினஸ் வகுப்பு கிடையாது, உணவு கிடையாது ஆனாலும் சரியான நேரத்தில் இந்த விமானம் செல்லும். அடிக்கடி விமானத்தில் பயணம் செல்பவர்களின் சாய்ஸ் இண்டிகோவாகதான் இருக்கும். `நாங்கள் ஒரு உற்சாகம் இல்லாத விமான நிறுவனத்தை நடத்தி வருகிறோம். தொடர்ந்து இப்படியே நடத்தவே விருப்பம்’ என்று அதன் தலைவர் ஆதித்யா கோஷ் ஒரு பேட்டியில் தெரிவித்தது கவனிக்கத் தக்கது.
சமீபத்திய தகவல்கள் படி 35.3 சதவீத சந்தையை இண்டிகோ வைத்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஜெட் ஏர்வேஸ் 19 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.
இத்தனைக்கும் இந்த நிறுவனம் 97 விமானங்களை வைத்து, 31 நகரங்களை மட்டுமே இணைக்கிறது. ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் விமான எண்ணிக்கையும் அதிகம், இணைக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும் அதிக சந்தையை இண்டிகோ வைத்திருக்கிறது. தவிர இப்போதைக்கு சிறு நகரங்களை இணைக்கும் திட்டம் இல்லை என்றும் அறிவித்திருக்கிறது.
இது தவிர சரியான பணியாளர்களை வைத்திருப்பது, சரியாக நகரங்களை தேர்ந்தெடுத்து விமானங்களை இயக்குவது என்பது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. விரைவில் 2,500 கோடி ரூபாய்க்கு பொதுப்பங்கு வெளியிட தயாராக இருக்கிறது. இதற்கு செபியின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது.
ஐபிஓவை எதிர்பார்த்து சந்தை காத்திருக்கிறது.
No comments:
Post a Comment