Friday, September 11, 2015

பணமாகப்போகும் தங்கம்!

logo

இந்தியாவில், அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் ஏழையோ, பணக்காரரோ எந்த வீடு என்றாலும், தங்கம் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. அதனால்தான் தமிழக அரசே ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இதுமட்டுமல்லாமல், லாபகரமானது என்ற வகையில், சேமிப்பிற்காகவும் தங்கத்தை வாங்குகிறார்கள். எந்தவொரு மங்களகரமான நிகழ்வு, அது குழந்தை பிறப்பில் தொடங்கி, திருமணம் வரையில் தங்கம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற ஒரு நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது. இந்தியாவின் தங்க விற்பனையில், கடைகளில் கேட்டால் 75 சதவீதம் திருமண காலங்களிலும், பண்டிகை காலங்களிலும்தான் நடக்கிறது என்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 85 லட்சம் திருமணங்கள் நடக்கிறது.

இந்தியாவில் தங்க சுரங்கங்கள் இல்லாததால், வெளிநாடுகளில் இருந்துதான் நாம் இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கிறது. உலகிலேயே அதிகமாக தங்கம் வாங்குவது இந்தியாவில்தான். ஆண்டுதோறும் 800 முதல் ஆயிரம் டன் வரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இப்படி தங்கத்தை இறக்குமதி செய்வதால், அதிகளவு அந்நிய செலாவணி போய்விடுவதால், நடப்பு கணக்கிலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுமட்டுல்லாது, இந்தியாவில் தற்போது, வீடுகளில் மட்டும் முடங்கிக்கிடக்கும் தங்கத்தின் அளவு 22 ஆயிரம் டன்னாகும். இப்படி முடங்கிக்கிடக்கும் தங்கம் யாருக்கும் லாபமில்லாமல் கிடப்பதைவிட, நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனளிக்கும் வகையில், தங்கத்தை பணமாக்கும் திட்டத்தையும், தங்க பத்திர திட்டத்தையும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி மந்திரி அறிமுகம் செய்தார். பிப்ரவரி மாதம் 28–ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் செயலாக்கத்திற்கு வருவதற்காக முடிவெடுக்கப்பட்டது. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின்படி, பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை ஒரு ஆண்டு முதல் 15 ஆண்டுகள்வரை வங்கிகளில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 30 கிராம் முதலீடு செய்ய முடியும்.

நாம் முதலீடு செய்யும் தங்கம் உருக்கப்பட்டு, அதன் தூய்மை தன்மைக்கு ஏற்ப எவ்வளவு தங்கம் முதலீடு செய்கிறோமோ?, அதே அளவு தங்கம் அந்த குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு திரும்பவும் நமக்கு அளிக்கப்படும். இதற்காக அளிக்கப்படும் வட்டியையும் தங்கமாகவே தருவார்கள். இதற்கு அடுத்ததிட்டம் தங்க பத்திர திட்டமாகும். இந்த திட்டத்தின்படி, சேமிப்பிற்காக தங்கமாக வாங்குவதைவிட, தங்க டெபாசிட்களுக்காக பணமாக கொடுத்து பத்திரமாக வாங்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த பத்திரத்திற்கும் வட்டியோடு பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக, இந்த இரு திட்டங்களும் பொதுமக்களால் வரவேற்கப்படும் என்றாலும், இன்னும் இதற்கு எவ்வளவு வட்டி தருவார்கள்?, என்னென்ன வகையான நிபந்தனைகள் இருக்கும்? என்பது அறிவிக்கப்படவில்லை. இதுபோன்ற திட்டங்களுக்கு கூடுதலாக வட்டி தருவதோடு இல்லாமல், வரிவிலக்கும் அளிப்பதில்தான் அதன் வெற்றியே அடங்கும். இதற்கான நடைமுறைகளும் எளிதாக்கப்படவேண்டும். மேலும், தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின்கீழ், அந்த தங்கத்தை எங்கே, எப்படி வாங்கினீர்கள்? என்று கேட்கப்போவதாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக சிக்கலை ஏற்படுத்தும். மேலும், இவ்வாறு முதலீடு செய்யப்படும் தங்கம் என்றாலும் சரி, பத்திரம் என்றாலும் சரி, குறிப்பிட்டகாலம் என்று நிர்ணயிக்காமல், அவசரத்துக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்று நிர்ணயித்தால்தான் வசதியாக இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024