Friday, September 25, 2015

கச்சத்தீவை மீட்கும் முரசு

logo

இப்போதெல்லாம் தமிழக கடலில் போய் மீன்பிடிக்கவே முடியவில்லை. எப்போதுமே மீனவர்களுக்கு மீன் எங்கே இருக்கிறது, எங்கே வலையைப்போடலாம் என்ற ஆர்வத்தைவிட, தூரத்தில் ஒரு விசைப்படகு தெரிகிறதே, இலங்கை கடற்படை படகாக இருக்குமோ, நம்மை தாக்குவார்களோ, பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டு இருப்பதே வேலையாகப்போய்விட்டது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை பிடித்துக்கொண்டு போய்விட்ட செய்தி கிடைத்ததும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி அவர்களை விடுவிப்பது வாடிக்கையாகிவிட்டது.

இப்போது நாகப்பட்டினம் கடல்பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்த 15 மீனவர்களை கடந்த திங்கட்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டுசென்றுவிட்டனர். இதுதொடர்பாக உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ஜெயலலிதா முக்கியமாக, நீண்டநாட்கள் நிலுவையில் உள்ள கச்சத்தீவு பிரச்சினை குறித்து தீவிர அழுத்தத்தை கொடுத்துள்ளார். ‘‘கச்சத்தீவுக்கு அருகில் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இவ்வாறு கைது செய்வது மீனவ சமூகத்தினரிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் அரசியல் சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை விரைவில் திரும்பப்பெறவேண்டும். இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை பிரச்சினையை ஒரு முடிந்துபோன பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. நான் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. நான் தொடர்ந்துள்ள வழக்கின் முக்கிய சாராம்சம் ‘‘கச்சத்தீவை திரும்பப்பெறும் வகையில் அரசியல் சாசனத்தில் உரிய திருத்தம் செய்வதற்கான வழிவகை இல்லாத காரணத்தால், 1974, 1976–ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 1976–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை செயல்படுத்தாமல் ரத்து செய்யப்படவேண்டும்’’ என்பதேயாகும். கச்சத்தீவு இந்தியாவின் ஒருபகுதி என்பதே உங்களின் நிலைப்பாடும் ஆகும். புவியியல் ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், இந்தியாவின் ஒருபகுதியாகவும் உள்ள கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்புவரை கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்திருக்கிறது. அதன்பிறகுதான் இந்திய நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதற்கு சரித்திர சான்றுகள் ஏராளம் இருக்கிறது. கச்சத்தீவை மீட்போம் என்ற குரல் இதுவரையில் எல்லோராலும் எழுப்பப்பட்டாலும், இப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள இந்த கடிதம் போர் முரசு அடித்ததுபோல இருக்கிறது. இனி ஒரு புதிய வேகத்தோடு ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாக இணைந்து இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் பல முடிவுகள் பா.ஜ.க. அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவை தாரைவார்த்தது தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்தான். 1974–லிலேயே பாராளுமன்றத்தில் ஜனசங்க தலைவராக இருந்த வாஜ்பாய், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கையெழுத்தாகி இருப்பது ஒப்பந்தம் அல்ல, சரணாகதி என்றார். அந்த கட்சியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அந்த ஒப்பந்த பிரதியைக் கிழித்தெறிந்தார். வாஜ்பாயின் கனவுகளையெல்லாம் நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, வாஜ்பாயின் எதிர்ப்பான கச்சத்தீவை தாரைவார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீட்க இந்த போர்ப்படைக்கு தலைமை தாங்கவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024