Thursday, September 17, 2015

இறைச்சி உற்பத்தியில் இந்திய எழுச்சி


Dinamani


By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 17 September 2015 01:39 AM IST


இந்தியா என்றால் புலால் மறுப்பை வலியுறுத்திய வள்ளுவன், புத்தன், வள்ளலார், காந்தி உள்ளிட்ட எண்ணற்றோர் பிறந்த நாடு என்று பெருமைப்பட்டதெல்லாம் வீண். இறைச்சி உற்பத்தியிலும், நுகர்விலும் வரலாறு காணாத வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது.
÷சீனர்கள் பாம்பைத் தின்கிறார்கள், பூனை, எலி உண்கிறார்கள். புழு, பூச்சிகளையும் தின்கிறார்கள் என்று பழிப்பதுண்டு. ஆனால், தமிழர்களில் சில வகுப்பினர் பூனை, எலி உண்பதுண்டு. வட கிழக்கு இந்தியாவில் வாழ்வோர் சிலர் நாயைக்கூட விட்டு வைப்பதில்லையாம்.
÷மனிதனுக்குப் புரதப் பசியைவிட இறைச்சிப் பசியே அதிகம். ஒரு காலத்தில் கோழி இறைச்சி அதிக விலையிலும் ஆட்டிறைச்சி குறைந்த விலையிலும் விற்றது. ஆனால், நாமக்கல்லில் தோன்றிய கோழிப் புரட்சி நாட்டையே வென்றது. கோழி விலை மலிந்தது; தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி மாவட்டங்களில் கோழி வளர்ப்பு மிகவும் லாபகரமான தொழிலாக மாறி வருகிறது.
÷இறைச்சிக் கோழி என்றாலும் முட்டைக் கோழி என்றாலும் கோழி கோழிதான். இது தொடர்பான ஒரு விவசாயப் புள்ளிவிவரம் சிறப்பானது. கோழி, மாடு வளர்ப்பால் உயர்ந்தது இறைச்சி மட்டுமல்ல; மக்காச் சோள உற்பத்தியும்தான். இன்று தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக மக்காச் சோள உற்பத்தி இரண்டாம் நிலையில் உள்ளது.
÷இவ்வாறே, இந்தியாவிலும் நெல், கோதுமைக்குப் பின் மூன்றாம் இடத்தில் மக்காச் சோள உற்பத்தி உள்ளது. இறைச்சிக் கோழி, கசாப்பு மாடுகளுக்கான தீவனத் தேவை காரணமாக இந்தியாவில் மக்காச் சோள உற்பத்தி உயர்ந்துள்ளது.
÷நாமக்கல் கோழிப் புரட்சிக்குப் பின் கோழி விலை விழுந்தது. கோழி உணவு உயர்ந்தது. இந்த அன்னிய தேசத்து வெள்ளைக் கோழி வளர்க்கப்படும் தொழில்நுட்பத்தைக் கவனித்தால் அந்தத் தொழில்நுட்பம் ஆரோக்கியமற்றது என்று புரிந்து கொள்ளலாம்.
÷கூண்டுகளில் வளர்க்கப்படும் இந்தக் கோழிகள், தென்னம்பஞ்சுப் படுக்கை மீது நெருக்கமாக ஒன்றுமீது ஒன்று மோதும் அளவில் ஊட்டம் கொடுத்துக் குஞ்சுகளைக் கொழுக்க வைத்து விற்கிறார்கள். அவ்வாறு வளர்க்கும்போது கோழிகள் இறக்கும். தொற்றுநோய் பரவும். அவ்வாறு தொற்றுநோய் பரவாமல் இருக்க கோழிகள் மீது, தடை செய்யப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆக்சி டெட்ரா சைக்கிள், குளோர் டெட்ரா சைக்கிள், டாக்சி சைக்ளின், என்ரோ ஃப்ளோக்சாசின், சிப்ரோ ஃப்ளோக்சாசின் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
÷அப்படியும் நூற்றுக்கு 5 முதல் 10 கோழி இறக்கும். அவற்றை உண்ண இப்படிப்பட்ட கோழிப் பண்ணைகளில் நாய்கள் சுற்றித் திரியும். இந்தக் கோழிகள் அங்காடிக்கு வரும்போது அந்த இறைச்சிகளில் 10 முதல் 15 சதவீதம் ஆன்டிபயாட்டிக் எஞ்சியிருக்கும்.
÷தேன் விஷயத்திலும் இப்படித்தான். பெட்டிகளில் தேனீ வளர்ப்போர் தேனீக்கள் இறக்காமல் இருக்கத் தெளிக்கும் ஆன்டிபயாட்டிக் அத் தேனில் எஞ்சியிருக்கும்.
÷நீங்கள் கேட்கலாம். ஆன்டிபயாட்டிக்தானே. அது நல்லதுதானே. ஒரு டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். அது ஆபத்தானது என்பார்கள். ஏனென்றால், நமது உடலில் உள்ள கிருமிகள் கோழிக்கறி, தேன் ஆகியவற்றில் எஞ்சியுள்ள ஆன்டிபயாட்டிக்கை எதிர்த்து வெல்லும் சக்தி பெற்று விடும். நமக்கு நோய் வரும்போது நம் உடலில் செலுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் வேலை செய்யாது. உண்மையில் இவற்றை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மாறி மாறிப் புதிது புதிதான மருந்துகள் உண்டுப் பக்க விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.
÷கூண்டுகளில் வளர்க்கப்படும் வெள்ளைக் கோழி இறைச்சி எப்படியெல்லாம் வறுபடுகிறது என்று பார்த்தால் சில்லி சிக்கன், சிக்கன் ரோல், பீசா, பர்கர் என்று ஏகப்பட்ட அவதாரத்தை எடுத்துவிட்டது. ஒரு காலத்தில் மீன், முட்டை எல்லாம் தாவர உணவு என்று பேசப்பட்டது. இன்று அந்தப் பட்டியலில் சிக்கனும் சேர்ந்துவிட்டது.
÷இந்தியாவில் உள்ள மேல்ஜாதி ஹிந்துக்கள் - குறிப்பாக பிராமணர்கள், ஜெயின் என்ற பட்டப் பெயருள்ள ஹிந்துக்கள், சைவப் பிள்ளைமார் புலால் உண்பதில்லை. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மென்தகடு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பொறியாளர் இளைஞர் - இளம்பெண்கள் கூட்டம் ராப் பகலாய் கணினிகள் முன் கடுந்தவம் புரிவோர்களில் வெஜிடேரியன் என்று கூறிக் கொள்ளும் மேலே குறிப்பிட்ட மேல்ஜாதி யுவ - யுவதிகள் அமெரிக்க அறிமுகமான சிக்கன் பர்கருக்கு அடிமையாகிவிட்டனர்.
÷இப்படிப்பட்ட சாஃப்ட்வேர் நிறுவன உணவகங்களில் ஜங்க் ஃபுட்டுடன் "சிக்கன் பர்கருக்கு' ஏக வரவேற்பு உண்டு. சிக்கன் மட்டுமல்ல; பீஃப் மட்டன், போர்க் பர்கர்களும் உண்டு. அதாவது கோழிகளுடன், மாடு, ஆடு, பன்றி இறைச்சிகள் மேல்நாட்டு பாணி உணவாக புதிய பாங்குடன் பர்கர் பாஸ்தா, பீஸ்தா என்று புதிய புதிய பெயர்களில் வழங்கப்படலாம்.
÷ஹைதராபாத் ஓர் அற்புத நகரம். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையின் எடுத்துக்காட்டு. ஒரு பக்கம் ஏழை இஸ்லாமியச் சிறுமிகள் அரபு நாடுகளுக்குக் கடத்தப்படுவதில் முதலிடம் என்பதை மறந்துவிட்டு சாஃப்ட்வேர் தொழில், புலால் உணவு பற்றி அறிவோம். ஹைதராபாதில் "ஹலீம்' என்ற புலால் உணவு விழா பாரம்பரியச் சிறப்பு மிக்கது. ஒரு விதமான கோதுமை மாவு ரொட்டியில் மாட்டுக் கறி, ஆட்டுக் கறியுடன் கடலைப் பருப்பு கலந்த பிண்ட உணவு. பன்னுக்குள் மசாலா சிக்கன், வகை வகையான "நான் வெஜ்' பிரியாணி விழாவில் உண்டு.
÷இந்திய மொழிகளில் கலந்துவிட்ட ஒரு புதிய சொல் "நான் வெஜ்'. விமானத்தில் பயணிக்கும்போது, உணவு வழங்கும் விமானப் பணிப்பெண் பயணிகளிடம் "வெஜிடேரியன்?' என்று வினவும்போது இறைச்சிப் பிரியர்கள் "நான் வெஜ்' என்று சொல்ல வேண்டும். "நான் வெஜிடேரியன்' என்று பொருள் கொள்ளக் கூடாது.
÷இந்த விஷயத்தில் ஆய்வு மேற்கொண்ட ஹைதராபாத் நகராட்சி ஆணையர் சோமேஷ் குமாரின் "நான் வெஜ்' புள்ளிவிவரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஹைதராபாதில் உள்ள 1.1 கோடி மக்களில் 78 லட்சம் மக்கள் "நான் வெஜ்' என்றும், ஹைதராபாதில் மட்டும் தினமும் 3 லட்சம் கோழிகள், 8,000 ஆடுகள், 2,500 மாடுகள், 50 பன்றிகள் கொல்லப்பட்டு உண்ணப்படுவதாகத் தெரிவித்தார். இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் என்றுமே "நான் வெஜ்'. ஆனால், இப்போது சுமார் 90 சதவீத ஹிந்துக்களும் "நான் வெஜ்' - குறிப்பாக சிக்கனுக்கு அடிமை.
÷புத்தனை வணங்கும் இந்தியர்களில் பலர் மாட்டுக் கறிக்கு அடிமை. உலகத்துக்குக் கொல்லாமையை போதித்த புத்த மதம் இலங்கை, சீனா, ஜப்பான் நாடுகளில் பரவியிருந்தாலும், உயிர்களைக் கொல்வதே வாழ்க்கை நெறியானது. இந்தியாவிலும் நமது பாரம்பரியக் கருத்துகள் தவிடுபொடியான நிகழ்வுகள் உண்டு. பசு மாடுகளை தெய்வமாகப் போற்றி வளர்க்கும் இந்தியாவில் பசுவதை கூடிவருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
÷மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறிவிட்டது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் நாம் ஆண்டுதோறும் பெறும் அன்னியச் செலாவணி மதிப்பு 5,000 கோடி டாலர். உள்ளூர் வர்த்தக மதிப்பு அளவிடற்கரியது. பல கோடி டாலர்கள்.
÷பரந்தாமனாகிய பாலகிருஷ்ணன் குழல் ஊதினால் பிருந்தாவனத்தில் ஆயர்பாடி மாடுகள் மதி மயங்குமாம். இன்றுள்ள சூழ்நிலையில் யமுனைக் கரையில் உள்ள தில்லி, மதுரா பகுதிகளில் பசு மாடுகள் குறைந்து எருமை எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. ஏனெனில், பசுவை விட எருமையே லாபம். மாட்டிறைச்சியில் எருமையின் பங்கு அதிகம். பசுவதைத் தடுப்பு இருப்பினும், பசு - காளை இறைச்சிகளும் எருமை இறைச்சி என்ற லேபிள் பெற்று ஏற்றுமதியாகிறது? மாடு வளர்த்துப் பால் மூலம் வருமானம் பெறும் விவசாயிகள் சினை பிடிக்காத வெற்று மாடுகளையும், காளைக் கன்றுக் குட்டிகளையும் கசாப்புக்கு அனுப்புவதால் பெறும் வருமானம் பால் உற்பத்தியில் பால் விலை சரியும்போது சற்று ஈடுகட்டுகிறது.
÷வடகிழக்கு இந்தியாவில் - அதாவது அஸ்ஸôம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் நாம் பசுக்களை வளர்ப்பதுபோல் பன்றிகளை வளர்க்கின்றனர். ஆட்டுப் பால், கழுதைப் பால் போல் பன்றிப் பாலை யாரும் அருந்துவதாகத் தெரியவில்லை. பன்றியிடம் பால் கறக்க முடியுமா என்பதும் புலிப்பால் கறந்த கதைதான்! முழுக்க முழுக்க இறைச்சிக்குத்தான். பொதுவாக இந்தியாவில் உள்ள ஆதிவாசிகள், ஷெட்யூல்டு வகுப்பினர் அனைவருமே நூறு சதவீதம் "நான் வெஜ்'.
÷இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர்கள் சைவ உணவையே அலகாகப் பயன்படுத்துகின்றனர்! கலோரி உணவு என்பது மனிதனை குண்டாக்கும் தத்துவமே. புரதச் சத்துக்குப் போதுமான பருப்பு விளைச்சல் இந்தியாவில் இல்லை. உலகிலேயே அதிகம் பருப்பு விளைவிக்கும் நாடான இந்தியாவில்தான் பருப்பு இறக்குமதியும் அதிகம். ஆகவே புரதச் சத்து வழங்கும் "நான் வெஜ்' இந்தியர்களின் தவிர்க்க முடியாத தேவை என்பது நடைமுறை.
÷எனினும், கசாப்புக் கடைகளில் ஆடுகளின் அழுகுரல் நெஞ்சைப் பரிதவிக்க வைக்கிறது. பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி அன்றாடம் இறக்கும் வாயில்லா ஜீவன்களுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்:
"இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே...
காலொடிந்த ஆட்டுக்காகக்
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல்போல் உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருந்த வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க-
ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி
வந்தாங்க'.
÷இதுதான் இந்திய எதார்த்தம்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024