Tuesday, September 15, 2015

பெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

vikatan.com
தனி திராவிடநாடு கேட்டு போராடியது அந்தகட்சி. "அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு!" என்ற எதுகைமோனையாக மேடைகளில்  முழங்கிய அக்கட்சியின் முக்கிய தலைவரான அண்ணாவின் பேச்சினால் “நான்சென்ஸ்” என்று எரிச்சலானார் பிரதமர் நேரு.
நாடு சந்தித்த பெரும் பிரச்னையின் எதிரொலியாக அந்த கோரிக்கையை கண்ணியமாக சற்று தள்ளிவைத்தார் அந்த தலைவர். அவர் அண்ணா என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட அண்ணாதுரை.

பெரியாரின் அணுக்க தொண்டரான அண்ணாவுக்கு, பெரியாரின் திடீர் திருமணம் மற்றும் இந்திய விடுதலையின் மீதான பார்வை இவை பெரியாரின் மீது முரண்பாடு கொள்ளவைத்தது. விளைவு, 
கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் 1949 ல் திமுக என்ற கட்சி உதயமானது. அண்ணா அண்ணா என்று கொண்டாடப்பட்டார் அண்ணா.

கட்சியின் பெயர் வேறானாலும் அடிப்படையில் சிற் சில மாற்றங்களுடன் திராவிடர் கழகத்தை ஒட்டியே செயல்பட்டது.  தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்ட திமுக, பங்கெடுத்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 13 இடங்களை கைப்பற்றியது. அண்ணாவின் அனல்தெறிக்கும் பேச்சால் ஈர்க்கப்பட்ட இளைஞர் பட்டாளத்தின் தளபதியானார் அண்ணா. பெரியார் என்ற  போர்க்குணம் கொண்ட தலைவரை பகைத்துக்கொண்டாலும், கட்சியின் தலைவர் பதவி பெரியாருக்கானது என  அதை நிரப்பாமல் விட்டுவைத்தார். 

கண்ணீர்த்துளிகள் என பெரியாரால் காயப்படுத்தப்பட்டாலும், கண்ணியம் குறைவான வார்த்தைகளால் என்றும் பெரியாரை பேசியதில்லை அண்ணா. அந்த கண்ணியம்தான் அண்ணா.
1967 தேர்தலில்  அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது. திமுக. பதவி ஏற்பதற்கு முன்தினம், வெற்றி பெற்ற மற்ற தலைவர்கள் பதவியேற்பு விழாவில், தாங்கள் எந்த சூட் அணிவது, அதற்கு  எந்த ரக  சென்ட்  பயன்படுத்துவது என “ஆழ்ந்த” சிந்தனையில் இருந்தபோது, தனது  நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா.

“தவறு செய்துவிட்டோம். இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது.இன்னும் சில காலம் நாம் பொறுத்திருந்திருக்கவேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே நம்மை நம்பி துார எறிந்துவிட்டு நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள்.  நம்மிடம் அவர்கள் எதிர்பார்ப்பதை எப்படி நிறைவேற்றுவது ” என தன்னை வாழ்த்த வந்த கட்சியின் 2 ம் கட்ட தலைவர்களிடம் புலம்பினார். ஆனாலும் அடுத்தடுத்து அண்ணா, ஆட்சி நிர்வாகத்திலும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்து வதிலும் தேர்ந்தவரானார்.

67 ல் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ், ஆட்சிக்கட்டிலுக்கு இன்றுவரை அந்நியமாகிப்போனதற்கு அண்ணாவே காரணம். இன்றும் அவர் வழி வந்த தலைவர்களின்  அலங்காரமாகவே தமிழகம் இருப்பதே இதன் சாட்சி. அண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப்பேசிவிடமுடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர்.  ஒருமுறை பெரியாரை காண சுதேச கிருபளானி வந்தார். அந்த வார  “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார்.
இதை குறிப்பிட்ட கிருபாளினி," நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்று கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார்.  அதற்கு பதில் கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபளானி ஆவேசத்துடன் பேசவே,  குறுக்கே புகுந்த அண்ணா, " 'விபூதி அணிந்தவன் சிவபக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாக போட, அமைதியானார் கிருபளானி. அதுதான் அண்ணாவின் நாவன்மை.

மாநிலங்களவைக்கு தேர்வாகி சென்ற அண்ணாவின் முதல் கன்னிப் பேச்சை கேட்டு “நான்சென்ஸ்’ என்று அண்ணாவை கண்டித்த அதே நேரு, உணர்ச்சிவயப்பட்டு ‘அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.பேசவிடுங்கள் என சபாநாயரை கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது.
அண்ணா முதல்வராவதற்கு முன்புவரை காஞ்சியில்தான் வசித்தார்.  மேல்தளத்துடன் கூடிய அந்த இல்லத்தில் கால்பதிக்காத திராவிட இயக்க தலைவர்கள் இல்லை. பொது வாழ்க்கையிலும் திரைத்துறையிலும் வேகமெடுத்து அண்ணா இயங்கி வந்த அந்நாளில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன். சிவாஜி, எம்.ஜி.ஆர் , கே.ஆர். ராமசாமி, அரங்கண்ணல், கண்ணதாசன், கருணாநிதி என இன்னும் எத்தனையோ தலைவர்கள் அருகே உள்ள வீட்டு திண்ணைகளில் மொய்த்தபடி இருப்பார்களாம். 

அண்ணா இரவு நெடுநேரம் வரை எழுதியும் பேசிக்கொண்டிருக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால் காலையில் சீக்கிரம் எழமாட்டார். இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருக்காக காலை 5 மணியிலிருந்தே காத்திருப்பர் எதிரே உள்ள அவரது உறவினர் வீட்டில். அச்சமயங்களில் அவரது தொத்தா ராசாமணி வந்திருப்பவர்களிடம் கிண்டலாக ‘பாருங்க, கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தை வெச்சுட்டு இவன் மட்டும் அதை ஒரு நாளும் பார்க்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறான் ’ என சொல்ல, அந்த இடமே சிரிப்பொலியால் அலறுமாம். எத்தனை மணிநேரமானாலும வந்தவர்கள் யாரும் அண்ணாவை பாரக்காமல் நகரமாட்டார்களாம். கலைவாணர் போன்ற மேதைகளும் அண்ணாவின் திறமைக்கு மதிப்பளித்து இப்படி காத்திருந்து பார்த்து சென்றிருக்கிறார்கள்.
அமைதியான சூழலில் எழுதுவதையே விரும்பும் அண்ணா, அதற்காக தேர்வு செய்வது இரவு நேரத்தையே. கத்தை கத்தையாக தாள்களை எடுத்துக்கொண்டு மேலே 2வது தளத்தில் இருக்கும் சிறிய கம்பிகள் வேயப்பட்ட அறைக்குள் புகுந்துகொள்வார். ஒவ்வொரு தாளையும் எழுதி முடித்ததும் அதை பத்திர்பபடுத்தும் வழக்கம் அவரிடம் இல்லை. எழுதி முடித்த தாளை அப்படியே மேஜையிலிருந்து நழுவவிட்டுவிடுவார். அவருக்கு உதவியாக இருக்கும் உறவுப்பையன் அதை எடுத்த எண் வாரியாக அடுக்கித்தருவான். 

இப்படி எழுதுவதில் சுவாரஸ்யமான வழக்கம் கொண்டவர். முதல்வரானபின்கூட அந்த வீட்டின் பழமையை அப்படியே தொடரச்செய்தார். சாமான்யனாக பிறந்து சாதனையாளனான அண்ணா இறப்பிலும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.அவரது இறுதிப்பயணம் கின்னஸில் இடம்பெற்றிருக்கிறது. எந்த தலைவரின் இறுதி ஊர்வலத்திலும் இதுவரை இப்படி ஒரு கூட்டம் வந்ததில்லலையாம்.  ஓர் இரவு நாடகத்தின் பவளவிழாவுக்கு தலைமை வகிக்க வந்த புரட்சிக்கவிஞர் பாரதிததாசன் தன் பாராட்டுரையில் அண்ணாவை ‘அறிஞர்”  அண்ணாத்துரை என்று குறிப்பிட, பின்னாளில் அறிஞர் என்றாலே அண்ணா என்றானது.

முதல்வரானபின் எதிர்கட்சியினரும் பாராட்டும்படி அவரது பேச்சும் செயலும் அமைந்தது. ஒரு சமயம் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அண்ணாவிடம், மிருககாட்சி சாலைக்கு நான் தந்த ஆண்புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை.ஆனால் எம்.ஜி.ஆர் தந்த பெண்புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்ப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிப்பேச, உடனே குறுக்கிட்ட அண்ணா ‘சம்பந்திகள் இருவரும் உட்காரந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் பிரச்னையை” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது .
1963 ல் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினர். அவையில் சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அண்ணா, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என் லிங்கம் என்ற உறுப்பினர்,"தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்துவிடப்போகிறீர்கள்?" என்று கேட்டார் . “நாடாளுமன்றத்திற்கு லோக்சபா என்றும், மக்களவைக்கு ராஜ்யசபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கீறீர்களே. இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்றதும் பதிலேதுமில்லை எதிர்கட்சியிடமிருந்து. இறுதியில் தமிழக முதல்வரானதும் அதை நிறைவேற்றி தன் பிறந்த நாட்டுக்கு பெயர் சூட்டிய பெருமையை பெற்றார் அண்ணா. 

கட்சியிலும், மக்கள் மத்தியிலும் அண்ணாவின் புகழ் வளர்ந்துகொண்டிருந்த அதே சமயம் அண்ணாவுக்குள் ளும் ஒன்று சத்தமில்லாமல் வளர்ந்துகொண்டிருந்தது. அது புற்றுநோய். 1968 ல் மருத்துவக்கல்லுரி மாணவர் ஒருவருக்கும், பஸ் நடத்துனர் ஒருவருக்குமான மோதல் பெரிய பிரச்னையானது. இதை கண்டித்து பேருந்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தனர். .

அண்ணா தலையிட்டு அதை வாபஸ் பெற செய்தார். ஆனால் மாணவர்கள் தரப்பு சமாதானம் அடையாமல் பிரச்னையை பெரிதாக்கினர். பேச்சுவார்த்தைக்கு சென்ற அண்ணாவை அவர்கள் அவமதிப்பு செய்தனர். அவர்களிடம் அண்ணா நடத்துனர் சார்பாக மன்னிப்பு கேட்டும், அவர்கள் மனமிரங்கிவரவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவருக்கு வாயிலிருந்து ரத்தம் வந்தது. அதுதான் அவருக்கு கேன்சர் வந்ததற்கான முதல் அறிகுறி. 

நோயின் தாக்கம் கொஞ்சநாளில் அதிகரிக்க, மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா பயணப்பட்டார் அண்ணா.  தற்காலிகமாக நோயிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பியவர், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி பொதுக்கூட்டங்கள், கட்சிப்பணி, ஆட்சி என தன்னை பரபரப்பாக்கி கொண்டார்.
சென்னை மாகாணத்தக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டு அது விழாவாக கொண்டாடப் பட்ட அன்று வாந்தியும் மயக்கமுமாக சோர்ந்திருந்தார் அண்ணா. மருத்துவர்கள் அந்த விழாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்க, கோபத்துடன், "என் தாய்நாட்டுக்கு பெயர் சூட்டும் இந்த நாளில் போகாமல் உயிருடன் இருபபதை காட்டிலும் இறப்பதே மேல்!" என்றார் எரிச்சலாக. நோயின் கடுமையிலும் கலந்துகொண்டு பேசினார் விழாவில். தொடரந்து சிகிச்சையளித்தும் பலனின்றி அவரது அரசியல் பயணத்திற்கு அவரது உடல் இடம் கொடுக்காமல்  1969 பிப்ரவரி 3 ல் இயற்கை எய்தினார் அண்ணா.

அண்ணாவின் மீது அளப்பரிய காதல் கொண்டிருந்த எம். ஜி. ஆர்.,  அண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980 ம் ஆண்டு   நினைவு இல்லமாக்கினார். திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, ”இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர் பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையே காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும் சாமான்யனாகிய நானும் குடியரசு தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார்.

அநேகமாக  மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை  குடியரசு தலைவர் திறந்து வைத்தது என்பது இதுவே முதல்முறை. ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில்,  "திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவை பார்த்தாலும் அவர் ஒரு காந்தியவாதியாக இருந்தவர் எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர். குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு 2 பிள்ளைகள்” எனக் கூறினார். தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்கு புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை.  அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.
நினைவு இல்லத்தை அலங்கரிக்கும் புகைப்பட அணிவகுப்பு நம்மை அண்ணா காலத்துக்கே அழைத்துச் செல்கிறது. அண்ணாவின் திருமண பத்திரிக்கை, அரும்பு மீசை முளைத்த இளவயது சம்பத்துடன் அளவளாவும் அண்ணா, சட்ட எரிப்பு போராட்டதில் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்படும் அண்ணா, திருச்சி மத்திய சிறையிலிருந்தபோது அவர்  பயன்படுத்திய தட்டு டம்ளர் மற்றும் அவரது அழகிய கையெழுத்திலான டைரிகள், அவரது சில கடிதங்கள் அவரது பெல்ட் ,அண்ணாவின் புகழ்பெற்ற மூக்குபொடி டப்பா ,கண்ணாடி, புகழ்பெற்ற அவரது படைப்புகளை தாளில் வடித்த அவரது மரப் பேனாக்கள் என அதிசயிக்கவைக்கிறது.

வலப்புறம் அவரால் எழுதப்பெற்ற படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதையொட்டிய அறையில் அண்ணா பயன்படுத்திய நுலக அறை உள்ளது. அவர் அமர்ந்து படிக்க பயன்படுத்திய சேர்கள் . செருப்புகள் என நினைவுகளை பின்னோக்கி இழுத்து செல்கிறது அந்த அறை. டைரி ஒன்றில் அண்ணா, மணிமணியான கையெழுத்தில் எழுதிய ஜோக் ஒன்று வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.

ஹோட்டலில் சாப்பிட வந்தவர் "ஏம்பா.. வடை இவ்வளவு மோசமாகவும் இருக்கு...சின்னதாவும் இருக்கே?" என்கிறார்.  அதற்கு சர்வர்,"பின்னே என்னங்க...மோசமாகவும் இருந்து பெரியதாகவும் இருந்தா திண்ணமுடியாதுங்களே? அதான்!" என்கிறார்.

பரபரப்பான அரசியலின் நடுவே தன் தனிமையை ஓவியங்கள் வரையவும் நகைச்சுவை எழுதவும் பயன்படுத்த அண்ணா போன்ற அறிவாளிகளால் மட்டுமே முடியும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன. அவர் வரைந்த இந்த அழகிய படைப்புகள். அண்ணாவை நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது காட்சிக்கு வைக்கப்பட்ட அவரது மாதிரி உடை.  அந்நாள் முதல்வாரன அண்ணாவுடன் இந்நாள் முதல்வர் ஜெயலலிதா பரிசு பெறும் அரிய புகைப்படம் ஒன்றும் உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து அறைகளிலும் புகைப்படங்கள் மிரட்டுகின்றன.

சந்திரோதயம் சந்திரமோகன் போன்ற அவரது நாடகங்களில் அவரே ஏற்று நடித்த பாத்திரங்களின் காட்சிப்பதிவுகளும் அரியன. கட்சி பேதமின்றி ராஜாஜி, காமராசர், இந்திரா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் அண்ணா காட்சி தரும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்நாளைய வரலாற்று சம்பவங்களுக்கு அரிய சாட்சிகள். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற அண்ணா  ஈரோட்டுக்கு சென்று அந்த வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கிய அரிய நிகழ்விற்கும் காட்சிப்பதிவும் இங்கு உண்டு. கண்ணீர்த்துளிகள் என தம்மால் விமர்சிக்கப்பட்ட அண்ணாவின் இந்தச்செயல் தன்னை சங்கடத்திற்குள்ளாக்கிவிட்டதாக பின்னாளில் பெரியாரே பதிவு செய்திருக்கிறார்.
புற்றுநோய்க்கு ஆட்பட்டு அமெரிக்க சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மனதை பிழிகிறது நமக்கு. அமெரிக்காவிலிருந்து இங்கு தம் தொண்டர்களுக்கு  தலைவர்களுக்கும் அண்ணா எழுதிய கடிதங்களில் தமிழகத்தின் மீது அந்த தலைவனுக்கு இருந்த அன்பை வெளிப்படுத்துகிறது அந்த கடிதங்கள். நண்பர்களுடன் ஓய்வான ஒரு தருணத்தில் டெல்லி சுற்றுலா சென்றபோது, ஒரு குழந்தையைப்போல குதூகலத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மேதைகள் குழந்தைத்தன்மை உடையவர்கள் என்பதை உறுதி செய்கிறது.

மேல் மாடியில், புகழ்பெற்ற அவரது படைப்புகளை அவர் அமர்ந்து எழுதிய மேடை இன்றும் அதே கர்வத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த இடத்தில் சில சமயங்களில் நேரம்போவதே தெரியாமல் விடியற்காலை வரை கூட எழுதிக்கொண்டிருப்பாராம் அண்ணா. மேடையின் இடப்புறம் தான் வளர்த்த நாய், புறா, மான் இவைகளுக்கான கூண்டு அறை, அண்ணாவின் நினைவுகளை சுமந்து மட்டும் இருக்கிறது இப்போது.
 
அருகிலுள்ள புகைப்படத்தில் ஓர் அரிய காட்சி. அண்ணாவின் படத்தை திறந்து வைத்ததுதான் கலை வாணரின் இறுதி நிகழ்ச்சி. அதே போல் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலைவாணரின் சிலை திறந்ததுதான் அண்ணாவின் இறுதி நிகழ்ச்சியானது. இந்த அற்புத ஒற்றுமை இந்த 2 தலைவர்களுக்கு இடையேயான நட்பை காட்டுகிறதெனலாம். அமெரிக்கா சென்று வந்த பின் நடக்க சிரமப்பட்ட அண்ணா, சக்கர நாற்காலியை பயன்படுத்தியிருக்கிறார் அதுவும் இந்த நினைவு இல்லத்தை உயிரோட்டத்தோடு வைக்கும் ஒரு அற்புத அடையாளம்.
-எஸ்.கிருபாகரன்

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...