Monday, September 21, 2015

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிய புதிய இணையதள வசதி: உச்ச நீதிமன்றம் ஏற்பாடு

Return to frontpage

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை, வழக்குகளின் தற்போதைய நிலை, தீர்ப்பு விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள புதிய வசதியை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது.

நீதிமன்ற வழக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் நவீனமயமாக்கும் முயற்சி 1990-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ecourts.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தேசிய நீதிமன்ற தகவல் தொகுப்பு (என்ஜேடிஜி) பகுதியில் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இந்த வசதியை உச்ச நீதிமன்ற நவீனமயமாக்கல் திட்ட தலைவர் நீதிபதி மதன் லோக்கூர் தொடங்கிவைத்துள்ளார். இதில், நாடு முழுவதும் மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்கள் வரை தாக்கலான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், முடித்து வைக்கப்பட்ட வழக்கு கள் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த விவரம் அன்றாடம் புதுப்பிக்கப்படுகிறது.

2.7 கோடி வழக்குகள்

நாடு முழுவதும் மொத்தம் 2.7 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், நேற்றைய நிலவரப்படி, ஒரு கோடியே 96 லட்சத்து 62 ஆயிரத்து 938 வழக்குகள் குறித்த விவரங்களை ‘என்ஜேடிஜி’ வெளியிட்டுள்ளது. இதில், 66 லட்சத்து 36 ஆயிரத்து 620 சிவில் வழக்குகள், ஒரு கோடியே 30 லட்சத்து 26 ஆயிரத்து 225 கிரிமினல் வழக்குகள் அடங்கும்.

நிலுவையில் உள்ள ஆண்டின் அடிப்படையிலும் வழக்குகள் விவரம் பிரித்து வெளியிடப் பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 20 லட்சம் (10.23 சதவீதம்). ஐந்து முதல் 10 ஆண்டுகள் நிலுவையில் உள்ளவை 35 லட்சம் (17.95 சதவீதம்). இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நிலுவையில் உள்ளவை 59 லட்சம் (30 சதவீதம்). இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக நிலுவையில் உள்ளவை 82 லட்சம் (41 சதவீதம்). மூத்த குடிமக்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்து 273 (2.97 சதவீதம்). பெண்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 18 லட்சத்து 90 ஆயிரத்து 763 (9.62 சதவீதம்). மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநில நீதிமன்றங்கள் குறித்த விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்கு மாற்றப்பட்டு வருவதால் அந்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024