Sunday, September 13, 2015

சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் சிகிச்சை நேரத்தில் மருத்துவப் பிரதிநிதிகள் தங்களது நிறுவன மருந்துகளை பரிந்துரை செய்ய வருவதால், நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை மற்றும் அதிநவீன மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் உள்நோயாளிகள், புறநோயாளிகளை மருத்துவர்கள் தினமும் சந்தித்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இங்கு இருதயம், மூளை, நரம்பியல், எலும்பு, பல், இரைப்பை, குடல், குழந்தைகள் நலப்பிரிவு என பல்வேறு துறை சார்ந்த பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் போல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை சந்திக்க தினமும் மருத்துவப் பிரிதிநிதிகள் வருவது அதிகரித்து வருகிறது என்றும் இவர்கள் மருத்துவர்களை சந்தித்து தங்கள் நிறுவன மருந்துகளை பரிந்துரை செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால், குறிபிட்ட நேரத்தில் நோயாளிகள் மருத்துவர்களை சந்திக்க முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
தனி நேரம் ஒதுக்க நடவடிக்கை: டீன்
சேலம் அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘சேலம் அரசு மருத்துவமனைக்கு டிபிசி (தமிழ்நாடு பர்ச்சஸ் கமிட்டி) சிபிசி (சென்ட்ரல் பர்ச்சஸ் கமிட்டி) மற்றும் டிஎன்எம்சி (தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்) ஆகியவற்றின் அனுமதியுடன் மருத்துவப் பிரதிநிதிகள் மருத்துவர்களை சந்திக்கின்றனர்.
பிரதிநிதிகள் கூறும் மருந்துகள் வாங்கும்தன்மை இருந்தால், என்னிடம் மருத்துவர்கள் எடுத்துக் கூறுவார்கள். அதன்படி, நாங்கள் தேவையான மருந்துகளை டிஎன்எம்சி ஒப்புதல் பெற்று கொள்முதல் செய்வோம். மருத்துவப் பிரதிநிதிகள் பணி நேரத்தில் வருவதால், நோயாளிகளுக்கு பாதிப்பு என்கிற போது, அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் தனிநேரம் ஒதுக்கப்பட்டு, அப்போது, மட்டுமே மருத்துவர்களை சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், இதுகுறித்து மருத்துவத் துறை பேராசிரியர்கள் கூட்டத்தில் தெரிவித்து, மருத்துவப் பிரதிநிதிகளால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024