Thursday, September 3, 2015

ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்


ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5

நம் நாட்டில் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்' எனப் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்குத்தான் வழங்கி இருக்கிறார்கள் இல்லையா? இறைவனுக்குக்கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான். அறிவு விதையை நமக்குள் விதைக்கும் ஆசிரியர்களை ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்றும், ‘ஏற்றி விடும் ஏணி’ என்றும் பெருமையாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் போற்றும் நாளான ஆசிரியர் தினம் எப்படி வந்தது?

1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதிதான் நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவரது பிறந்த தினத்தைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடிவருகிறோம். இவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு துணைத் தலைவரும்கூட.

இவர் எங்கே பிறந்தார் தெரியுமா? அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்குட்பட்ட திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி என்ற கிராமத்தில்தான் பிறந்தார். இவர் தொடக்கக் கல்வியைத் திருத்தணியில்தான் படித்தார். உயர் நிலைக் கல்வியைப் படிப்பதற்காகத் திருப்பதிக்குப் போனார். ராதாகிருஷ்ணின் சிறு வயது காலம் திருத்தணி, திருப்பதியிலேயே கழிந்தது. பள்ளிப் படிப்பை முடிந்ததும் கல்லூரிக்குப் போக வேண்டுமில்லையா?

அதற்காக அப்போது வேலூருக்குப் போனார். அங்குள்ள ஊரிஸ் கல்லூரியில்தான் ராதாகிருஷ்ணன் படித்தார். 17 வயதாகும்போது சென்னைக்கு வந்து மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குதான் தத்துவப் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் மேலும் பல உயர் படிப்புகளைப் படித்தார். இப்படி அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய படித்தார்.

அப்படி அவர் படித்ததற்குப் பலனும் கிடைத்தது. தனது திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். பின்னர் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

இளம் வயதிலேயே ராதாகிருஷ்ணன் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் நிறைய சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார். அவையெல்லாம் அவருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெருமை சேர்த்தன. பல நாடுகளிலும் அவரைக் கவுரவிக்கும் வகையில் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு தெரியுமா? 133 டாக்டர் பட்டங்கள்! இவை எல்லாமே கல்வியால் அவர் கண்ட பலன்கள்.

கல்வியில் சிறந்த விளங்கிய ராதாகிருஷ்ணன் ஆசிரியர்கள் என்றால் மிகவும் மதிப்பு கொடுப்பார். இவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சில மாணவர்களும், நண்பர்களும் அவரிடம் போய், அவரது பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அப்போது அவர் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஆசிரியர்களைப் போற்றும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதனால், 1962-ம் ஆண்டு முதல் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இத்தனைக்கும் இவர் பள்ளி ஆசிரியர்கூட இல்லை. கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். இருந்தாலும் பள்ளி, கல்லூரி என்று பேதம் இல்லாமல் எல்லாருமே ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கல்வி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வார்கள். அப்படிச் சிறப்பு பெறக் கல்வியைப் புகட்டும் உங்கள் ஆசிரியர்களைக் கொண்டாடத் தயாராகிவிட்டீர்களா?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024