Sunday, September 6, 2015


logo


ஆசிரியர் கல்வியின் தரம்!

ஆசிரியர்கள்தான் சமுதாயத்தில் மிக அதிகமான பொறுப்புவாய்ந்த முக்கியமான அங்கம் வகிப்பவர்கள். ஏனெனில், அவர்களின் தொழில் ரீதியான முயற்சிகள் பூமியின் தலைவிதியிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார், ஆஸ்திரேலிய நாட்டு பெண் எழுத்தாளரான மருத்துவர் ஹெலன் கால்டிகாட். அந்த வகையில், நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது. சமீபத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஜனாதிபதி பதவியைவிட ஆசிரியராக பணியாற்றத்தான் விரும்பினார். அவர் எழுதிய ‘தூண்டப்பட்ட மனங்கள்’ என்ற ஆங்கில நூலில்கூட, ‘ஒரு குழந்தையின் கற்றலுக்கும், அறிவாற்றலுக்கும் ஆசிரியர்தான் ஜன்னல் போன்றவர். அந்த குழந்தையின் படைப்புத்திறனை உருவாக்குவதில் அவர்தான் முன்மாதிரியாக திகழவேண்டும்’ என்ற அற்புதமான தத்துவத்தை உலகிற்கு படைத்துவிட்டு சென்றார்.

இன்றைய காலக்கட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரம் மிக உயர்வாக இருந்தால்தான், போட்டி மிகுந்த உலகில் அவர்களால் வெற்றிகாணமுடியும். அதற்கு ஆசிரியர்களின் கல்வித்தரமும் மிகவும் உச்சத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அத்தகைய அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவை என்பதால்தான், கட்டாய கல்வி சட்டத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்கள்தான், வரும் காலங்களில் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை பார்க்கும்போதுதான், ஆசிரியர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நிலைமை தெளிவாகிறது. மத்திய அரசாங்கத்தின் கல்வித்திட்டத்தின்கீழ் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றுவதற்கு மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத்தேர்வில் வெற்றிபெறுபவர்கள்தான் இத்தகைய பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை நாடு முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றமுடியும். 722 ஆசிரியர் பட்டப்படிப்புக்கான கல்லூரிகளையும், 1,018 ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வை எழுதிய ஆசிரியர்களில் 40 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள் என்றால், இந்த தேர்வை எழுத முடியாத அளவில்தான் நமது ஆசிரியர் கல்வித்தரம் இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை தமிழக கல்வித்துறையும், சமுதாயமும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

பல ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள், துணிவில்லாமல் இந்தத்தேர்வை எழுதவே இல்லை. தற்போது, தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங் களில், கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி நிலவரப்படி
2 லட்சத்து 29 ஆயிரத்து 400 இடைநிலை ஆசிரியர்களும், 3 லட்சத்து 92 ஆயிரத்து 383 பட்டதாரி ஆசிரியர்களும், 2 லட்சத்து 70 ஆயிரத்து 912 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்விலும், மத்திய கல்வி திட்டத்துக்காக நாடு முழுவதிலும் வேலைவாய்ப்பு பெறக்கூடிய மத்திய ஆசிரியர் தகுதித்தேர்விலும் வெற்றிபெற்றால்தான் முடியும். இவர்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து வெளியேவரும் ஆசிரியர்களும் இனி வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றாலும் சரி, திறமைமிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாலும் சரி, அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப ஆசிரியர்களுக்கு வீடியோ கான்பரன்சிங், ஆன்–லைன், இண்டர்நெட் மூலம் கல்வி கற்றுக்கொடுக்க பயிற்சி அளிக்கவேண்டும். அறிவாற்றல்மிக்க ஆசிரியர் களால்தான் ஒளிமிகுந்த மாணவர் சமுதாயத்தை படைக்கமுடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024