Thursday, December 10, 2015

ரெயில்களில் பயன்படுத்த படுக்கை விரிப்பை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி 4 ரெயில் நிலையங்களில் நேரிலும் பெறலாம்



புதுடெல்லி


தற்போது, ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளில் மட்டுமே பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் பயணிகள் நலனுக்காக, படுக்கை விரிப்புகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே துறை இம்மாதம் அறிமுகம் செய்கிறது.

2 படுக்கை விரிப்புகள், ஒரு தலையணைக்கு ரூ.140 செலுத்த வேண்டும். ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் பெற ரூ.250 செலுத்த வேண்டும். இவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம்.

ஆன்லைனில் மட்டுமின்றி, முதல்கட்டமாக 4 ரெயில் நிலையங்களில் நேரிலும் படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் போர்வையை பெறலாம். புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதின், சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், மும்பை சென்டிரல் ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ள இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) உணவகங்களில் இவற்றைப் பெறலாம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் பல ரெயில் நிலையங்களுக்கு இவ்வசதி விரிவுபடுத்தப்படும்.

சென்னை விமான நிலையத்தில் ரேடார் பழுது காரணமாக விமான சேவை பாதிப்பு

daily thanthi

ஆலந்தூர்

சென்னை விமான நிலையத்தில் ரேடார் பழுது காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.

ரேடார் பழுது

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் 1–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டது. 6–ந் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.

விமான நிலையத்தில் புகுந்த வெள்ளத்தால் விமானங்களை இயக்க பயன்படுத்தப்படும் 3 ரேடார் கருவிகளில் 2 கருவிகள் பழுதடைந்தன. அவற்றை சரி செய்து கடந்த 6–ந் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது 346 விமான சேவையில் 300 விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

விமான சேவை பாதிப்பு

இந்த நிலையில் நேற்று காலை ரேடார் கருவிகளில் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. மேலும் காலையில் மழை பெய்துகொண்டு இருந்ததால் மும்பையில் இருந்து 128 பயணிகளுடன் வந்த விமானமும், கொல்கத்தாவில் இருந்து 142 பயணிகளுடன் வந்த விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டன. பின்னர் 3 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

இதேபோல் டெல்லி, மும்பை, ஐதராபாத், மதுரை, கொச்சி உள்பட பல நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த மேலும் 10 விமானங்களும் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன. மழை நின்றதும், ரேடார் கருவி பழுது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டது. இதையடுத்து வானில் வட்டமிட்ட விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின.

பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட 3 விமானங்களும் சென்னைக்கு வந்து சேர்ந்தன. இதனால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

வெள்ள நிவாரண நிதி வழங்க கணக்கெடுக்கும் பணி தீவிரம் 3 ஆயிரம் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கின்றனர்



மாற்றம் செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 10,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 10,2015, 12:48 AM IST
சென்னை,

சென்னையில் மழையால் ஏற்பட்ட சேதங்களை கண்டறிந்து உதவிகள் வழங்குவதற்கு வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்த பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரித்தனர்.

வெள்ள நிவாரணகணக்கெடுக்கும் பணி


வடகிழக்கு பருவமழையினால், சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கண்டறிந்து உரிய நிவாரண உதவிகளை வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தொல்லியல் துறை ஆணையர் டி.கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் முன்னிலையில், வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

3 ஆயிரம் அலுவலர்கள்


நேற்று முதல் இந்த அலுவலர்கள் சென்னை முழுவதும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினார்கள். இந்த பணியில் மொத்தம் 21 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கின்றனர்.

இந்த அலுவலர்களை கண்காணிக்க 21 மாவட்ட வருவாய் அலுவலர்களும், 21 துணை கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 10 வட்டங்களில் இந்த கணக்கெடுக்கும் பணிகளை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் சென்னையில் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாள்தோறும் தங்களுடைய பகுதிகளில் சென்று தகவல்களை சேகரித்து வருவதற்காக 85 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை, வங்கி கணக்கு...


கணக்கெடுக்கும் குழுவினர் வரும்போது, பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். மழையினால் குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் சேதமடைந்திருந்தாலோ அல்லது மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தாலோ அந்த தகவலை மட்டும் கணக்கெடுக்கும் குழுவினரிடம் தெரிவித்தால் போதும்.

வங்கி சேமிப்பு கணக்கு இல்லாதவர்களுக்கு தனியாக சேமிப்பு கணக்கு தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், கணக்கெடுப்பு பணியின் போது வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினை ‘மறு கணக்கீடு’ என்று குறிப்பிடுவார்கள்.

பின்னர், அந்த வீடுகளுக்கு மீண்டும் கணக்கெடுக்க வருவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த அறிக்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

கணக்கெடுக்க வரும் அலுவலர்கள் கேட்கும் தகவல்கள் 


* வார்டு, பகுதி, தெரு பெயர்

* குடும்ப தலைவர், குடும்ப தலைவி பெயர்

* முகவரி

* குடும்ப அட்டை எண்

* வங்கி கணக்கு எண் இருந்தால், வங்கி பெயர், கிளை பெயர், கணக்கு எண்

* குடிசை வீடா அல்லது கட்டிட வீடா?

* குடிசை வீடாக இருந்தால் முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* கட்டிட வீடாக இருந்தால் முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* இடிபாடுகள் இல்லையென்றால், பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி முழுமையாகவா அல்லது பகுதியாக பாதிப்பா?

* குடும்ப அட்டை எண் இல்லை என்றால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை எண் குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு இருந்தால், குடும்ப அட்டை வைத்து எந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களோ? அந்த கடை பெயரையும், வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி பெயர் மற்றும் முகவரியையும் தெரிவிக்க வேண்டும்.

கூடங்குளம் தாமதம் ஏன்?

daily thanthi



தமிழ்நாடு மிகவேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் முனைவோர் எல்லாம் விரும்பி முதலீடு செய்ய ஓடோடிவரும் மாநிலமாகத் திகழ்வதால்தான், இந்தியாவின் டெட்ராயிட் என்று அழைக்கப்படுகிறது. எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது மின்சார உற்பத்தியில்தான் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா வசதிகளையும் கொண்ட தமிழ்நாட்டில், ஆண்டுக்கு ஆண்டு மின்சாரத்தின் தேவை மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மின்சாரத்தேவையை பூர்த்திசெய்ய நீர்மின்சாரம் அதாவது புனல் மின்சார உற்பத்தி வாய்ப்பை ஏற்கனவே முழுமையாக பயன்படுத்திவிட்டோம். அனல் மின்சாரம் அதாவது நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான மின்சார நிலையங்கள் அமைக்கும் வாய்ப்பும் அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. இது சுற்றுப்புற சூழ்நிலையைக்கெடுக்கிறது, மாசுபடுத்துகிறது என்ற குறைபாடு உலகம் முழுவதும் இருக்கிறது. நிலக்கரி தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. வெளிமாநிலங்களில் இருந்துதான் விலைக்கு வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவுக்கே வெளிநாடுகளில் இருந்துதான் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மட்டும் 500 கோடி டாலர் அரசின் அன்னிய செலாவணி செலவாகிறது என்ற குறை இருக்கிறது.

இந்த நிலையில், ஆபத்பாந்தவனாக அணுமின் நிலையத்தையே அனைவரும் கருதுகிறார்கள். நம் நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் தோரீயத்தை பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்க முடியும் என்பதால், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதலில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணுஉலை அமைக்கவும், தொடர்ந்து மற்றொரு ஆயிரம் மெகாவாட் அணுமின்சாரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அணுமின்சாரம் மிகவும் ஆபத்தானது, அதிக செலவு என்பதோடு மட்டுமல்லாமல், சிறிய கசிவு ஏற்பட்டாலும், கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்படும், கடல்வளம் பாதித்துவிடும் என்று பல எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தாலும், அப்துல்கலாம் போன்றவர்கள் அப்படியெல்லாம் நடக்காது என்று சொன்ன உறுதிமொழிகள், அரசாங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், மக்களுக்கு சற்று நம்பிக்கையைக் கொடுத்து, அதன்பலனாக ரூ.18 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. முதல் யூனிட்டுக்கான கட்டிட பணிகள் 2002–ம் ஆண்டு மார்ச் மாதம் 31–ந் தேதி தொடங்கியது. 12 ஆண்டு களுக்குப்பிறகு 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந் தேதி உற்பத்தி தொடங்கியது. இந்த ஆயிரம் மெகாவாட்டில் தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட்தான் கிடைக்கும் என்றாலும் சரி பரவாயில்லை என்று மக்கள் நினைத்தனர். தொடங்கிய நாளில் இருந்தே சிறு சிறு கோளாறுகள் ஏற்பட்டன. ஆனாலும், மக்கள் தொடக்கத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். ஆனால், தொடங்கி 5 மாதத்திலேயே பராமரிப்புக்காக என்று சொல்லி ஜூன் மாதத்தில் மூடிவிட்டார்கள். 90 நாட்களில் அதாவது செப்டம்பர் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கிவிடுவோம் என்று உறுதிஅளிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்கள் ஆகியும் இன்னும் உற்பத்தியைத் தொடங்கவில்லை.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் மாதம் 7–ந் தேதியே உடனடியாக உற்பத்தியைத் தொடங்கவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். முழுக்க முழுக்க ரஷ்ய நாட்டு இயந்திரங்கள், எரிபொருளும் அங்கு இருந்துதான் வரும் சூழ்நிலையில், தொடக்கத்திலேயே இப்படி கோளாறு என்றால் காலப்போக்கில் என்ன ஆகுமோ?, 2–வது யூனிட் எப்போது தொடங்குமோ? என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. மத்திய அரசாங்க அணுசக்தித்துறை உடனடியாக இன்னும் தாமதம் இல்லாமல் முதல் யூனிட்டில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டு, 2–வது யூனிட் எப்போது முதல் செயல்படும் என்ற உறுதியான தகவலைத் தெரிவிக்கவேண்டும்.

Monday, December 7, 2015

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு ந.வினோத் குமார்

Return to frontpage

வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

"இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா.

"பூனைங்க எல்லாம் உங்களுதா..?"

"ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி.

"உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?"

"நாலு பேருங்க..." ஆதீஸ்வரி.

"சரி... நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?" என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

"என்ன பண்றதுங்க... வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க" செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?

இயற்கைப் பேரிடர்களும் பெண்களின் துயரங்களும்..............ஆதி வள்ளியப்பன்

Return to frontpage

கடந்த வார ஆரம்பத்தில் சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கிண்டலாக இப்படிச் சொன்னார் - சென்னை மக்கள் இப்போதெல்லாம் பைப்பில் தண்ணீர் வந்தால்கூட பயந்துதான்போகிறார்கள் என்று. அவர் அப்படிச் சொன்னதற்கு முன்பாக அடைமழை சென்னையில் இரண்டு முறை தலைகாட்டிவிட்டுச் சென்றிருந்தது. ஆனால், அந்தக் கிண்டலை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு மிரட்டியிருக்கிறது டிசம்பர் முதல் வாரம் பெய்த மழை.

மழையின் நாதம் இனிமையான கிங்கிணிச் சத்தங்களுடன் ஒப்பிடுவதெல்லாம் சென்னைவாசிகளுக்கு இப்போது எரிச்சலையே ஏற்படுத்துகிறது. மழையின் தூறல் ஒலி ஆரம்பித்தவுடன் அவர்களுடைய மனதில் பற்றிக்கொள்ளும் பதற்றம், நேரம் ஆக ஆக மழையின் சத்தம் வலுப்பதைப் போலவே வலுத்து முடிவில்லாமல் நீள்கிறது.

அடைமழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் பொதுவாகவே எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள் என்றபோதும், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வழக்கம் போலவே பெண்களும் குழந்தைகளும்தான். காரணம், ஒவ்வொரு பெண்ணும் தன்னைவிடவும் தன் குழந்தை, குடும்பம், அதன் உறுப்பினர்களை தார்மீகமாக தூக்கிச் சுமப்பதும், பாதுகாத்துவருவதுமே.

சென்னையை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் அடைமழை-வெள்ளம் மட்டுமின்றி, உலகில் நிகழும் பெரும்பாலான இயற்கைச் சீற்றங்களில் கடுமையாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. காலம்காலமாகப் பெண்களுக்கு சமஉரிமைகள் மறுக்கப்பட்டுவந்துள்ளன. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களிலும் அது கடுமையாக எதிரொலிக்கிறது. நம்மூரில் பெரும்பாலான குடும்பங்களுக்கு பொருளாதாரத் தூணாக இருந்து காப்பாற்றுகிறவர் ஆண் என்ற நம்பிக்கை உள்ளது.

நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி பெண்கள் பரவலாக வேலைக்குச் செல்கிறார்கள். அது மேல்தட்டு வர்க்கம், நடுத்தர வர்க்கம், அடித்தட்டு வர்க்கம் என எதுவென்றாலும் சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று வீட்டு வேலையை முடித்துவிட்டு, வெளி வேலைக்குச் செல்கிறார்கள். அப்போதுதான் குடும்ப பாரத்தை சமாளிக்க முடியும் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

அப்படியே வெளி வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகள், பணத்தைக் கொண்டுவரவில்லையே தவிர, வீட்டு வேலைகள், குடும்ப வேலைகள் என்று அவர்கள் ஈடுபடும் வேலையைக் கணக்கிட்டால், அவற்றுக்குக் கொடுக்கத் தேவைப்படும் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும்.

அது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்துக்குத் தேவையான நல்ல தண்ணீர் முதல், காய்கறி, தானியங்கள், சமையல் போன்ற பல்வேறு விஷயங்களுக்குத் தேவையான வளங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருவது, எடுத்து வருவது பெண்களின் வேலையாக இருக்கிறது.

வரலாற்றுரீதியில் தங்கள் குழந்தைகளையும் குடும்பங்களையும் உடல்ரீதியிலும், உணர்வுரீதியிலும் எப்படி வளர்க்கப் பாடுபட்டோர்களோ, அதேபோலவே இன்றைக்கும் பெண்கள் பாடுபடுகிறார்கள். வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது நமக்கு நல்ல தண்ணீர் கிடைக்காததை,

மாநகராட்சிக் குழாய்களில் தண்ணீர் வராததை வெறும் மாநகராட்சிப் பிரச்சினையாகவே பார்க்கிறோம். ஆனால், மற்ற நாட்களில் அடி பம்பிலோ, லாரியிலோ தண்ணீரைப் பிடித்து வீட்டுக்கு எடுத்து வரும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களுடையதாகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

அதேபோல உணவு, பால், சமைப்பதற்கான விறகு சேகரிப்பு, அடுப்பு போன்றவற்றை இன்றைக்கும் பெண்களே பெருமளவு கையாள்கிறார்கள். வெள்ள நேரத்தில் வீட்டுக்குள்ளும் வெளியிலும் தண்ணீர் புகுந்துவிட்டதை ஒரு நகரமைப்புப் பிரச்சினையாகப் பார்க்கிறோம்.

இயற்கைச் சீற்றங்கள் அனைத்தும் பெண்களின் வேலைகளைக் கடுமையாக்குகின்றன, மோசமடையச் செய்கின்றன என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், வீட்டுக்கு வரும் பால் முதல் உணவுப் பொருட்கள்வரை அனைத்தையும் நிர்வகிப்பவள் பெண்தான்.

அதேபோல இயற்கைச் சீற்றங்கள் குறித்த உடனடித் தகவல்கள் பெரும்பாலும் ஆண்களுக்கே தெரிந்திருக்கின்றன. தற்போதைய வெள்ளத்திலும்கூட வாட்ஸ்ஆப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பெருமளவு ஆண்களின் பங்கேற்பையே பார்க்க முடிந்தது.

அது மட்டுமல்லாமல், அடுத்து என்ன செய்வது என்று ஒரு அம்மா யோசித்துக்கொண்டிருக்கும்போது, சில ஆண்கள் ஸ்மார்ட் போனை நோண்டிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. எனவே, சரியான நேரத்தில், சரியான தகவல்கள் முழுமையாகப் பெண்களைச் சென்றடைவதில்லை.இதன் காரணமாகவும், பொதுவாகவே முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களிடமே இருப்பதாலும், இயற்கைச் சீற்றங்களின்போது பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.

தற்போதைய வெள்ளத்திலும்கூட இந்த நிலையை நன்றாகப் பார்க்க முடிகிறது. அதிலும் தனித் தாய்மார்களின் பிரச்சினையை வார்த்தைகளில் எளிதாக வடிக்க முடியாதது. உயிர் போகும் நெருக்கடிகளில்கூட எதை முதலில் காப்பாற்றுவது என்பது போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் தனியொரு பெண்ணாகவே ஒவ்வொருவரும் சிந்தித்து எடுக்க வேண்டும்.

உலகிலுள்ள ஏழைகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அவர்கள் இன்னும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலை சென்னைக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட கடலூர், மற்ற ஊர்களில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தினர், குறிப்பாகப் பெண்களே அதிக பாதிப்பை தங்கள் முதுகில் சுமந்திருக்கிறார்கள்.

உலக இயற்கைச் சீற்றங்களும் இதையே உணர்த்துகின்றன. அமெரிக்காவில் நிகழ்ந்த கத்ரீனா புயலில் ஏழைப் பெண்கள் மேலும் ஏழையானார்கள். இந்தோனேசியாவின் பண்டா அசே பகுதியில் நிகழ்ந்த ஆழிப் பேரலையின்போது பலியான இறப்பில் 55 முதல் 70 சதவீதம் பேர் பெண்கள். இது மிகப் பெரிய முரண்பாடு.

தண்ணீர், உணவு உட்பட இயற்கை வளத்தை நேரடியாகச் சேகரிப்பவர்கள், நிர்வகிப்பவர்கள் பெண்களே. ஆனால், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்களும் அவர்களே. இது எவ்வளவு பெரிய முரண்பாடு. அத்தியாவசியத் தேவைகளைச் சிறப்பாக நிர்வகிக்கும் பெண்களால், இயற்கைச் சீற்றங்களைச் சரியாகக் கணித்து, சரியான முடிவுகளை எடுப்பதில் பெருமளவு உதவ முடியும்.

இயற்கை வளத்தைக் காலம்காலமாகப் பேணி வளர்த்துப் பெருக்கி, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஊட்டமாக வளர உழைத்த பெண்களால் இயற்கைச் சீற்ற இடர்ப்பாடுகளைச் சீரமைப்பதில் சிறப்பாக செயலாற்ற முடியும்.

அது மட்டுமல்லாமல் காலம்காலமாக இயற்கை வளங்களை நிர்வகித்துவந்த பெண்களால், இயற்கைச் சீற்றம் போன்ற நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒரே நிபந்தனை ஆணுக்குக் கிடைக்கும் எல்லாச் சுதந்திரமும் பெண்களுக்கும் இது சார்ந்து கிடைக்க வேண்டும் என்பதுதான்.

மாற வேண்டும் மனோபாவம்

Dinamani


By நா. குருசாமி

First Published : 05 December 2015 02:00 AM IST


பூகம்பம், நிலச்சரிவு, ஆழிப்பேரலை, மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழும் போதும், அதன் பிறகு மேற்கொள்ளப்படும் மீட்பு, நிவாரணப் பணிகளின் போதும் மனதை நெகிழச் செய்யும் சம்பவங்களுடன், பாதிக்கப்பட்ட மக்களின் கோபதாபங்களும், எதிர்மறையான கருத்துகளும் வெளிப்படும். சென்னை மாநகரமும், அதன் புறநகர்ப் பகுதிகளும் தற்போது எதிர்கொண்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளின் போதும் இத்தகைய நேர்மறையான, எதிர்மறையான போக்குகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழக தீயணைப்புத் துறையினர், போலீஸார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் முப்படையினர் முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சேவை அமைப்புகளும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் மனம்திறந்து பாராட்ட வேண்டும்.
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்டோர் மீட்கப்பட்டு, உரிய நிவாரணம் கிடைத்திட உதவியவர்கள் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், அவர்களது புகார்கள்தான் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, இந்த வெள்ளப் பாதிப்பை பயன்படுத்தி இயன்றவரை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்படும் வியாபாரிகள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவது போல உள்ளன.
பொதுவாக, எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்போது, அதன்
விலை உயரத்தான் செய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதற்காக, இயற்கைப் பேரிடரின் விளைவுகளை எதிர்கொண்டுள்ள மக்களிடமிருந்து பிடுங்கிய வரை லாபம் என்ற போக்குடன் செயல்படுவது மனிதாபிமானமற்றது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை, அவற்றின் நிர்ணய விலையைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக விற்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. முக்கியப் பண்டிகைகளின் போது பயணிகளின் கூட்டம் அதிகமிருந்தால், வழக்கத்தைவிட மிக அதிகக் கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களைப் போல, வியாபாரிகளும், வர்த்தகர்களும், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களும் செயல்படுவது சரியல்ல.
பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவாவிடினும், அவர்களது மனவேதனையை மேலும் அதிகரிக்கும் விதத்தில் செயல்படாமல் இருப்பதே பேருதவியாக இருக்கும் என்பதை இத்தகையோர் உணர வேண்டும்.
இத்தகைய வியாபாரிகள், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதுபோல சில தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 18 நோயாளிகள் செயற்கைச் சுவாசக் கருவிகள் செயலிழந்ததால் இறந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும். மின்சாரம் தடைபட்டு, ஜெனரேட்டரையும் தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டவுடனேயே அந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றியிருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.
பணம் சம்பாதிப்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற தனியார் மருத்துவமனையின் இத்தகைய அலட்சியப் போக்கை வெறுமனே கண்டிப்பதோடு நின்றுவிடாமல், அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின் விநியோகம் தொடர்ந்து மூன்று நாள்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின் தடை காரணமாக செல்லிடப்பேசி கோபுரங்கள் செயலிழந்துவிட்டதால், உதவிக்கு மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர். செல்லிடப்பேசி கோபுரங்களை ஜெனரேட்டர் மூலம் இயக்குவதற்கு டீசல் தேவை. ஆனால், எரிபொருள் சேவை வழங்கும்
மத்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சென்னையில் உள்ள தங்களது விநியோகஸ்தர்களுக்கு தேவையான அளவு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய எண்ணெய் நிறுவனங்களின் இத்தகையப் போக்கும் கண்டிக்கத்தக்கதாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் பணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்தப் பணியில் அரசுடன் கைகோத்து செயல்பட முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் இன்னல்களைக் கொடுக்காமல் இருந்தாலே போதும் என்பதை மனதில் கொண்டு, வியாபாரிகளும், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும்.
இந்த உலகில் நாம் சேர்க்கும் பணமும், பொருளும் நாம் மறையும் போது நம்முடன் வராது. எனவே, எப்படியாவது அதிகளவில் பணம் சேர்க்க வேண்டும் என நினைப்போர், தங்களது இந்த மனோபாவத்தை மாற்றிக் கொண்டால், அது அவர்களுக்கும், பிற மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...